Subscribe Us

உஷாரய்யா உஷாரு...


ந்த பெண் தனியார் பள்ளி ஒன்றில் ஆய்வக பிரிவில் வேலைபார்த்து வந்தாள். அப்போது அவளுக்கு 28 வயது. அதே பள்ளியில் டிரைவராக வேலை பார்த்துவந்தவருக்கு 35 வயது. 

இருவரும் ஒரே பள்ளியில் 4 வருடங்கள் வேலைபார்த்தார்கள். தினமும் பார்த்துக்கொண்டார்கள். எப்போதாவது மட்டுமே பேசிக்கொண்டார்கள். ஏன்என்றால் அந்த பள்ளி கட்டுப்பாடு நிறைந்தது.

அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார்கள். எங்கெங்கோ இருந்து மாப்பிள்ளை வீட்டார் வந்தார்கள். பார்த்தார்கள். ‘பொருத்தமாக இருக்கிறது. பேசி முடித்துவிடலாம்’ என்று நெருங்கும்போது, வரனை பற்றி விசாரித்தார்கள். திருப்திபடும் அளவுக்கு எந்த வரனும் அமையாததால் அவளுக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போனது.

இறுதியில் அவளே ஒரு முடிவுக்கு வந்தாள். ‘முன்பின் தெரியாத யாரையாவது கல்யாணம் செய்வதைவிட, தெரிந்த அந்த டிரைவரை திருமணம் செய்துகொள்ளலாமே. நான்கு வருடங்களாக பார்க்கிறோம். அவரிடம் குறைகளாக சொல்லும்படி ஒன்றும் இல்லையே!’ என்று நினைத்தாள்.

அந்த நினைப்பே அவர் மீது அவளுக்கு காதலை வளர்த்தது. அவர் ஆள் டிப்டாப்பாக இருப்பார். தோற்றமும் வசதியுள்ளவர் போல் இருந்தது. இவளும் அழகாக இருப்பாள். இருவரும் பள்ளியில் யாருக்கும் தெரியாத அளவுக்கு ரகசியமாக காதலை வளர்த்தார்கள். கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுத்தார்கள்.

அந்த பள்ளியில் காதலுக்கு கட்டுப்பாடு உண்டு. காதலித்து கல்யாணம் செய்துகொண்டால் இருவருமே வேலையை விட்டு வெளியேற வேண்டியதிருக்கும். அதனால் அவள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வேறு ஒரு பள்ளிக்கு வேலைக்கு போய்விட்டாள். 

சில மாதங்கள் கழித்து இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். மூன்றே மாதங்கள்தான் அவர்கள் குடும்ப வாழ்க்கை நீடித்தது. 

காலையில் 2 மணி நேரம் மாணவர்களை வேனில் பள்ளிக்கு அழைத்துவர வேண்டும். மாலையில் அவர்களை கொண்டுவிட 2 மணி நேரம் ஆகும். இந்த நான்கு மணி நேரம் தவிர இதர நேரங்களில் அவர் என்ன செய்கிறார்? எங்கே போகிறார்? என்பது மனைவியான அவளுக்கு மர்மமாக இருந்தது. இரவு நேரங்களில் ஒருவித ‘கிறக்க’ நிலையிலே இருப்பார். அடித்துப்போட்டதுபோல் தூங்குவார். காலையில் எழுந்து குளித்து, சாமி எல்லாம் கும்பிட்டுவிட்டு டிப்டாப்பாக உடை அணிந்துகொண்டு பள்ளிக்கு போய்விடுவார்.

கணவன் என்ற உரிமையோடு ‘எங்கே போறீங்க? உங்க வாழ்க்கை முறைதான் என்ன?’ என்று அவள் கேட்டபோது, ‘அதெல்லாம் உனக்கெதுக்கு? பொண்டாட்டி என்றால் எல்லாத்தையும் சொல்லணுமா?’ என்று கேட்ட படி அடித்து உதைக்க ஆரம்பித்தார்.

அவரது அம்மாவிடம் முறையிட்டபோது, ‘நான் அவன் விஷயத்தில் ஒருபோதும் தலையிட்டது கிடையாது. அவன் அந்த காலத்தில் இருந்தே அப்படித்தான். அதனால்தான் நாங்க அவனுக்கு பெண் பார்க்கலை. நீங்களாக காதலிச்சிக்கிட்டீங்க! கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க! எதுன்னாலும் நீங்க இரண்டுபேரும்தான் பேசி முடிவு செய்துக்கணும்’ என்று ஒதுங்கிக்கொண்டார்.

அந்த மர்ம மனிதனோடு வாழ்வது ஆபத்து என்பதை உணர்ந்த அவள், விவாகரத்து செய்தாள்.

அடுத்த ஒரு வருடத்தில் பெற்றோரே அவளுக்கு மறுமணம் செய்துவைத்தார்கள். அந்த நபரும் ஏற்கனவே விவாகரத்து ஆனவர். அவருக்கு அவளைவிட பத்து வயது அதிகம். அரசு வேலையில் இருந்தார். 

திருமணம் நடந்தது. திருமணமான முதல் வாரத்திலே அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இரவில் அவள் காலை பிடித்துக்கொண்டு, ‘நீ எதுன்னாலும் சொல்லிக்கோ. ஆனால் என்னை குடிக்காதேன்னு மட்டும் சொல்லாதே. என்னால் குடிக்காமல் தூங்கவே முடியாது. இது இன்னைக்கு நேற்றைக்கல்ல, இருபது வருட பழக்கம்!’ என்றான்.

‘எனக்கு வயதாகிக்கொண்டே போகிறது. எல்லா பெண்களையும் மாதிரி நானும் கணவரோடு சந்தோஷமாக இருக்கவும், குழந்தை பெத்துக்கவும் ஆசைப்படுறேன். ஆனால் இவருக்கு தாம்பத்ய வாழ்க்கையில் ஆர்வமே இல்லை. குடிக்கும் அடிமையாகிவிட்டார்’ என்ற அவள், மீண்டும் விவாகரத்துக்கான முயற்சியில் இறங்கியிருக்கிறாள்.

மூன்றாவது திருமணம் செய்துகொள்வாளா? என்ற கேள்விக்குள்ள நாம போக விரும்பலேங்க! 

ஆண்கள் ‘பொம்பளை முக்கியமல்ல.. போதைதான் முக்கியம்ன்னு’ சொல்ற காலகட்டத்தில இருக்கிறாங்கன்னு சொல்ல வர்றோம் அவ்வளவுதானுங்க!

Post a Comment

0 Comments