Subscribe Us

கிளிநொச்சி இளைஞன் கண்டு பிடிப்பில் சாதனை…!(படங்கள் இணைப்பு)

குறைந்தளவு நிலத்தில் நெற் பயிர்செய்கையை மேற்கொண்ட விவசாயிகள் அதை இலகுவாக அறுவடை செய்யும் நோக்கோடு பல தோல்விகளின் பின் கிளிநொச்சி இளைஞனால் புதிய அரிவு வெட்டும் இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பரீட்சார்த்த முயற்சியும் வெற்றியீட்டியுள்ளது.
கிளிநொச்சி கரடிப்போக்குச்சந்தி உருத்திரபுரம் செல்லும் வீதியில் கே.கே.கே பவிசன் வெல்டிங் வேக் சொப் வைத்திருக்கும் காண்டீபன் எனும் இளைஞரே இந்த இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.
தற்போது இடம் பெற்று கொண்டிருக்கும் கால போக நெல் அறுவடையின் போது விவசாயிகள் இயந்திரம் மூலம் அறுவடை செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு ரூபா7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையில் செலவு செய்கின்றனர்.
இந்த பணத்தை பெற்றுக் கொள்வதற்கும், அரிவு வெட்டும் இயந்திரத்தை வாடகைக்கு பெற்றுக் கொள்வதற்கும் பலர் திண்டாடுகின்றனர். இந்த நிலையில் குறித்த இளைஞன் இந்த முயற்சியை எடுத்து புதிய அரிவு வெட்டும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.
சாதாரண புல் வெட்டும் இயந்திரத்தைக் கொண்டு அதில் சில மாற்றங்களை ஏற்படுத்தி நெல் அறுவடைக்கு ஏற்றவாறு குறித்த இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.
இது குறித்து எம்மிடம் கருத்துத் தெரிவிக்கும்போது இந்த இயந்திரத்தை உருவாக்க 6 தடவைகள் முயற்சி எடுத்தும் அது தோல்வி கண்டநிலையில் விடா முயற்சியாக 7ஆவது தடவை இந்த இயந்திரத்தை உருவாக்கினேன் என்று அந்த இளைஞர் குறிப்பிட்டார். நண்பர் ஒருவரின் தூண்டுதலாலேயே நான் இந்த புல்லு வெட்டும் இயந்திரத்தை அரிவு வெட்டும் இயந்திரமாக மாற்றியுள்ளேன்.
எனது குடும்பம் சிறிய குடும்பம் நாங்கள் இந்த இடத்தில் தான் வசிக்கின்றோம். வருமானத்துக்காக வெல்டிங் கடை நடத்தி வருகின்றேன். எனது நண்பன் தினேஸ் இவ்வாறு முயற்சி செய்து பார்ப்போம் என கேட்டதற்கு இணங்கவே நான் அவனின் உதவியுடன் குறித்த முயற்சியை ஆரம்பித்தேன். தொடர்ச்சியாக 6 தடவைகள் தோற்றபோதும் தொடர்ந்து முயற்சித்ததன் பயனாக 7 ஆவது தடவை வெற்றியளித்துள்ளது.
ஒரு புல் வெட்டும் இயந்திரம் 14 ஆயிரம் ரூபா தொடக்கம் 17 ஆயிரம் வரை இருக்கும். இந்த அரிவு வெட்டும் இயந்திரத்தை உருவாக்க மேலும் 8 ஆயிரம் ரூபா தேவை என்று தெரிவித்த காண்டீபன் அறுவடை செய்தவற்றை நெல் மணிகளாக்கும் இயந்திரத்தையும் விரைவில் தயாரிப்பேன் என்கிறார்.
இந்த இயந்திரம் தயாரித்தமைக்கான முக்கிய காரணம், குறைந்தளவு நிலத்தில் விதைத்தவர்கள் பெரும் இயந்திரங்களை பிடித்து அறு வடை செய்கின்ற போது நட்டத்தை எதிர் நோக்குகின்றனர். அதனை நிவர்த்தி செய்யவே இதை தயாரித்தேன்.
இந்த அறுவடை இயந்திரம் மூலம் நாள் ஒன்றுக்கு ஒன்றரை ஏக்கர் நெல் அறுவடை செய்ய முடியும். ஒரு ஏக்கர் நிலம் அறுவடை செய்ய 2 லீற்றர் பெற்றோல் போதுமானது. இதன் மூலம் செலவைக் குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இவ்வாறு பலவற்றை உருவாக்கும் திறன் இருந்தும் பொருளாதார நிலைமை காரணமாக அது குறித்துச் சிந்திக்க முடியாதுள்ளது என்றும் காண்டீபன் கூறினார்.

kilinochi

Post a Comment

0 Comments