சுமார் மூன்று வருடங்கள் முன்பு கொழும்பில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு தொழில் விடயமாக சென்றேன் ..
நான் சென்றது மிகப்பெரிய உணவு உற்பத்தி நிறுவனம் ஒன்று , பிரதான வீதியில் பேருந்தில் இருந்து இறங்கி உள்ளே செல்வதற்கு ஒரு ஆட்டோ தான் பிடிக்க வேண்டும், ஏனெனில் உள்ளே 3 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும் .
எனது வயதினை விட சில வயதுகள் கூடிய ஒருவரின் ஆட்டோவை பிடித்து இடத்தை சொல்லி ஏறிக்கொண்டேன் .
இப்போது அவர் என்னிடம் எங்கிருந்து வருகிறீர்கள் என்றார் , சொன்னதும் வேலை விடயமா ?மீண்டும் ஒரு கேள்வியை தொடுத்தார் . நான் ஆம் என்றேன் ஒரு இளம் புன்னகையை என்னை பார்த்து உதிர்த்தார் .
நான் ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்காமல் நானும் புன்னகைத்தேன் .அதற்காக இது ஒன்றும் காதல் கதை இல்லை .
மீண்டும் அந்த நண்பர் தொடர்ந்தார் .
தம்பி நான் ஒரு பட்டதாரி சொன்னால் நீங்கள் நம்புவீர்களோ தெரியாது , அதனால் இதை பாருங்கள் என்று அவரின் ஆட்டோ கெபின் உள்ளே இருந்த ஒரு கவரை என்னிடம் நீட்டினார் . நானும் வாங்கி பிரித்து பார்த்தேன் .
அப்படியே தூக்கி வாரிப்போட்டது , ஒரு பல்கலைகழக பட்டதாரி அதுவும் உளவியல் துறையில் .
அப்படி பார்த்து கொண்டிருக்கும் போதே நான் செல்ல வேண்டிய இடம் வந்தது , இருப்பினும் இந்த அவரின் ஆதங்கத்தை முறித்துக்கொண்டு செல்ல எனது மனம் இடம் தரவில்லை , ஏனெனில் நானும் இவ்வாறான கஷ்டத்தை பட்டு உணர்ந்தவன்
.
ஆட்டோவை நிறுத்தி வைத்தவாறே பேச்சை தொடர்ந்தேன் ..
இப்போது அவர் கூற தொடங்கினார் - ஆமா துரை , நாம் எல்லோரும் குடும்பத்தில் ஆறு பேர்கள் உம்மா ,வாப்பா , நான் மூத்த பிள்ளை, மூன்று தங்கைகள் .
வாப்பா ஒரு நிறுவனத்தில் 30 வருடமாக காவல் பணி புரிந்து தான் என்னை படிக்க வைத்தார் . நானும் நன்றாகவே படித்தேன் ...
வாப்பா ஒரு நிறுவனத்தில் 30 வருடமாக காவல் பணி புரிந்து தான் என்னை படிக்க வைத்தார் . நானும் நன்றாகவே படித்தேன் ...
பல்கலைகழகமும் சென்றேன் அங்கு நான்கு வருடங்களை கடத்தி விட்டு பட்டதாரி ஆகி வெளியாகினேன் , அதன் பின்பு தொழிலுக்கு முயற்சி செய்த நேரம் எனது வாப்பா திடீர் சுகயீனம் காரணமாக மரணித்துவிட்டார் .. இதற்குள் மூத்த தங்கைக்கு கல்யாண பேச்சுக்கள் வேறு ஆரம்பம் ஆகி இருந்தது . இன்னும் இரண்டு தங்கைகள் படித்து கொண்டிருந்தார்கள் .
அடிக்கடி வந்து போகும் சொந்தங்களும் நமக்கு கஷ்டம் அதிகரிக்க , அதிகரிக்க நம்மை விட்டு தூரமாகினார்கள் . இப்போது எல்லா பொறுப்புக்களும் எனது தலை மீதே வந்தது . பட்ட கஷ்டங்களை சொல்லி முடிக்க முடியாது .
செய்வதற்கு வழி ஒன்றும் இல்லை இப்படி இருக்கும் நிலையில் தான் ஒரு சமூக சேவையாளரை சந்திக்க கிடைத்தது . அவரிடம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றும் இருந்தது , அவர் என்னிடம் தம்பி நீங்க ஓமான் நாட்டிற்கு போறீங்களா , அங்கு பாடசாலை ஒன்றில் நல்ல வேலை ஒன்று இருப்பதாகவும் ஒரு பட்டதாரி பட்டம் பெற்ற உங்களுக்கு அது பொருத்தமாகவும் இருக்கும் என்றும் சொன்னார் .
நானும் சரி என்று சொல்லி சென்றேன் போன புதிதில் 80,000/= ரூபாய் மாதிரி எடுத்தேன் ஐந்து வருடங்கள் அங்கு இருந்தேன் . கடைசியாக எனது சம்பளம் 4,00,000/= வரைக்கும் உயர்ந்தது . அங்கிருக்கும் நேரமே இரண்டு தங்கைகளை திருமணம் முடித்து கொடுத்தேன் . போன வருடம் தான் நான் வந்து திருமணம் செய்துக்கொண்டேன் . கையில் இருந்த பணத்திற்கு இந்த வண்டியை எடுத்து ஓடிக்கொண்டிருக்கிறேன் . இரவு நேரங்களில் பிரத்தியேக வகுப்புக்கள் கொடுக்கிறேன் . மனைவியும் படித்தவள் அதனாலே புரிந்துக்கொண்டு சமாளிக்கிறாள் .
ஆனாலும், எனது நாட்டில் எனக்கென்று ஒரு நல்ல தொழில் செய்யணும் என்பது ஆசை . அதுவும் அரச தொழில் செய்ய வேண்டும் என்பதே ஆசை அதனால் தான் இவ்வளவு தாமதம் . இன்னும் அந்த முயற்சியை தொடர்கிறேன் . என்று சொன்னவர் .
மீண்டும் தொடர்ந்தார் தம்பி இந்த நிலை எனக்கு மட்டுமில்லை , என்னை போன்ற பல பட்டதாரிகள் இன்று ஆட்டோ ஓட்டுகிறார்கள், சிலர் நடைப்பாதை வியாபாரம் செய்கிறார்கள் .கொழும்பு வாழ்க்கை என்பது வேலை தேடிக்கொண்டிருக்க எல்லாம் அவகாசம் கொடுக்காது . என்று சொல்லி முடித்தார் .
நானும் சரி என்று அனைத்தையும் கேட்டு விட்டு அவருக்கு சில வார்த்தைகளை ஆறுதலாய் சொல்லி விட்டு நட்போடு கிளம்பினேன் .
இதிலிருந்து நாம் ஒரு விடயத்தை கவனிக்கலாம் , அதுவே இந்த கட்டுரைக்கான கருப்பொருளும் கூட
இதிலிருந்து நாம் ஒரு விடயத்தை கவனிக்கலாம் , அதுவே இந்த கட்டுரைக்கான கருப்பொருளும் கூட
நமது நாட்டில் படித்து பட்டம் பெற்றுவிட்டு நான் மட்டும் ஆட்டோ ஓட்டவில்லை இன்னும் பலர் உள்ளார்கள் என்று அந்த ஆட்டோ நண்பர் சொன்ன விடயம் தான் இங்கு சிந்தனைக்குரியது .
ஒரு நாட்டின் பிரதான வளம் என்பது மனித வளம்(Human Resources) தான் , இதை அபிவிருத்தி செய்கின்ற போது அந்த நாடு துரித அபிவிருத்தியை அடைகிறது .
கல்வியில் முன்னிலையில் இருக்கின்ற நமது நாட்டில் கல்விமான்களை சரியாக பயன்படுத்துகிறார்களா என்றால் விடை பூச்சியமே !
இரண்டாம் உலக யுத்தத்திலே ஜப்பான் மிகப்பெரிய அழிவை சந்தித்தது , அதன் பின்பு அதிலிருந்து மீள்வதற்கு அவர்கள் ஒரு துரித அபிவிருத்தி திட்டத்தை செய்வதற்கான யாப்பை வரைந்தார்கள் . அதன் பிரதான கருப்பொருள் மனித வளங்களை முறையாக கையாண்டு நாட்டை அபிவிருத்தி செய்தல் என்பதாகும் . அதில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள் .
சிங்கப்பூர் ஒரு இயற்கை வளமும் இல்லாத நாடு இன்று பொருளாதரத்தில் கொடிக்கட்டி பறக்கிறார்கள் எனில் அங்கெ புரட்சி செய்த சிங்கப்பூரின் தந்தை ''லீ குவான்'' மனித வளங்களை பயன்படுத்துதல் தொடர்பில் கொண்டு வந்த மாற்றமே காரணம் .
ஐரோப்பாவின் நோயாளி எனும் பெயர் கொண்ட துருக்கி இன்று சர்வதேச நாணய நிதியத்திடம் எந்த கடனும் இன்றி முன்னேற்றம் கண்டுள்ளார்கள் எனில் , அங்கே அவர்கள் மனித வளத்தை முறையாக கையாளுகின்றனர் .
இதே நிலை எல்லாம் நமது நாட்டிலும் ஏற்ப்படுத்த வேண்டும் எனில் இருக்கின்ற கல்விமான்களை நெறிப்படுத்தும் ஒரு பொறிமுறையை கொண்டு வர வேண்டியது கட்டாயம் ஆகும் .
இந்த மனித வள பயன்பாட்டில் உள்ள வீழ்ச்சி தான் இன்று அரபு நாடுகளை பணமிருந்தும் அபிவிருத்தி அடையாத நிலையில் வைத்துள்ளது என்பதும் சிறந்த உதாரணம் ஆகும் .
ஆக, கற்று வெளியாகின்ற கல்விமான்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு எனும் திட்டங்கள் அறிமுகம் செய்ய படும்போது நம் நாடும் துரித அபிவிருத்தி காணும் என்பதில் ஐயமில்லை .
இதுவரை இருந்த அரசுகளை விடவும் இப்போது உள்ள அரசும், பிரதமரும் இந்த விடயத்தில் கொஞ்சம் கரிசனையோடு இருப்பது மனதிற்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் விடயமாகும் .
தனியார் தொழில்சாலைகளை உருவாக்குதல், திணைக்களங்களை வீரியமிக்கதாய் மாற்றுதல், விவசாயத்தை நவீனபடுத்தல் , வியாபார கட்டமைப்புக்களை சீர் செய்தல் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கான முன்னெடுப்புக்கள் இன்று எடுக்கபடுகிறது
அதற்கும் மேலாக ஒரு இரண்டு பொருளியல் நிபுணர்களை (கபீர் காசிம், எரான் விக்ரமரத்ன ) அரச தொழில் வழங்கல் அமைச்சர்களாய் நியமித்து , அதற்கான விசேட பாடநெறி ஒன்றை கற்க உலகின் பிரபலமான பல்கலைகழகமான ''ஹாவர்ட்'' க்கு அனுப்பி வைத்துள்ளமையும் ஒரு விசேட அம்சமாகும் .
எது எப்படியோ இந்த திட்டங்கள் அனைத்தும் பேச்சிலும், எழுத்திலும் இல்லாது நடைமுறை படுத்த படுகின்ற போது நமது நாட்டிலும் மனித வளம் பயன்படுத்தப்படும் . நாடும் துரித அபிவிருத்தி காணும் .


0 Comments