மூச்செடுத்து முடிப்பதற்குள் ஞானசாரவின் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பமாகிவிட்டது... நம்மில் பலர் இப்படித்தான் நினைக்கிறோம். காரணம் ஆட்சி மாற்றம் அடித்தளத்தை மாற்றிவிட்டது என நம்பினோரே அதிகம். தவறில்லை!
ஏனெனில்.. கடந்த காலத்தில் இலங்கையில் இனவாதம் விஸ்வரூபம் எடுப்பதற்கு ஆட்சியாளர்களே அடிப்படைக் காரணம் என்பதே நம்பிக்கை. அந்த நம்பிக்கையிலும் தவறில்லை ஏனெனில்.. 30 வருட போரை ஒழித்தவர்களால் தம்மாத்துண்டு ஞானசாரவை அடக்க முடியாமல் போனதை மக்களாலும் நம்ப முடியவில்லை.
இலங்கை அரசியல்... இதை எங்கிருந்து பார்க்கிறோங்கறதுல இருந்து அவரவர் புரிதல் ஆரம்பமாகிறது.
சுருக்கமாகச் சொன்னால், ஜே.ஆர் ஆரம்பித்து வைத்த பிரிவினைவாதத்தை உடனடியாக மீட்கக்கூடிய திராணியுள்ள அரசையும் ஆட்சியாளரையும் காணமுடியாத துர்ப்பாக்கியமே நமக்கு எஞ்சியிருந்தது. இலங்கை அரசியல் 'காரண - காரிய - சூழ்நிலை' அடிப்படைக்கு முக்கியத்துவம் கொடுத்தே வளர்க்கப்படுவதால் ஒவ்வொரு ஆட்சியாளருக்கும் தமது ஆட்சியை நிறுவவும், நிலைக்கச் செய்யவும் அதை நியாயப்படுத்தவும் 'அது' தேவைப்படுகிறது.
இந்த வரையறைக்கு அப்பால் சிந்திக்கும் சமூக வளர்ச்சிக்கு நாடும் நாமும் தயாரில்லையென்பதால் அதுவே நியதி.. எனவே ஒவ்வொரு ஆட்சியாளரும் தம்மை நியாயப்படுத்த இருந்தால் ஒரு காரணத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள்..இல்லையென்றால் உருவாக்கிக் குளிர்காய்ந்தார்கள். அதில் மஹிந்த ராஜபக்ச இரண்டாம் ரகம்.
மாற்றத்துக்காக ஒரு தடவையும்.. யுத்தத்தை முடித்த நன்றிக்கடனுக்காய் இன்னொரு தடவையும் ஆட்சியதிகாரத்தைக் கையளித்த மக்களுக்கு பேரினவாதத்தின் தேவையை உணர்த்தி மீண்டும் தன் பரம்பரை ஆட்சியை நிறுவ முனைந்து மஹிந்த தோற்றார். நாமும் பெருமிதமடைந்து பெருமூச்செடுத்தோம்.
ஆனால் அந்த ஆபத்து இன்னும் இரு கண்டங்களைத் தாண்ட வேண்டியிருக்கிறது என்பதை வெறுமனே ரியக்டிவ் (சூழ்நிலைக்கேற்ப மாத்திரம் எதிர்ச் செயல்கள் புரியும்) சமூகமாக இருக்கும் எம்மில் பலர் மறந்திருந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ், ஒரு கண்டம் ஆகஸ்ட் மாதம் கடந்தது இன்னொரு கண்டம் இனித்தான் வரப்போகிறது.
இப்போது ஞானசார மீண்டும் வந்து விட்டார், வழக்கமான வீராப்பும் இஸ்லாமிய எதிர்ப்பும் அவர் கக்கியதும் தற்காலிகமாக அடங்கியிருந்த நமது உணர்வுகள் மீண்டும் இரண்டு நாளாய் துடிக்க ஆரம்பித்திருக்கிறது.இப்போது எல்லோரும் 'பொது' எதிரி ஞானசாரவுக்காக 'முஸ்லிம்களாய்...' இஸ்லாமியர்களாய் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறோம். நல்லது, சமூகம் தன் கடமையைச் செய்ய ஆரம்பித்திருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம்.
ஆகஸ்டில் ஓய்ந்த இந்த உணர்வலை... டிசம்பர் வரை என்ன செய்தது என்று சற்று சிந்தித்துப் பார்த்தால் ஞானசாரவுக்கு தீனி போடும் வகையில் எதுவெல்லாம் நடந்ததோ அதுவெல்லாம் மறக்கக் கடவதாக என்பதே ஒவ்வொருவர் நாட்டமாக இருக்கிறது.
எனவே, நாம் என்ன செய்தோம், செய்கிறோம் என்பதை விட நமக்கு என்ன நடக்கிறது என்று பார்த்து நியாயங்களைப் பேசிவிட்டு அதற்கான தீர்வை நோக்கிய போராட்டத்தை 'வேறு' யாரோ செய்ய வேண்டும் எனவும் செய்யாதவனையே ... செய்! செய்! என கூக்குரலிட்டு அவன் செய்ய மாட்டான் என்றவுடன் இன்னொருவன் செய்யும் போது முதலில் அமைதி காத்து, பின் தேர்தல் வரும் போது செய்யாதவன் அமைதி காத்தது சாணக்கியம் என்றும் பொறுத்து 'பதவிகள்' விட்டுப் போகும் அச்சத்தில் நம் சமூக நோக்கம் சுயநலமாகச் சுருங்கிப் போகும்.
அரசு... ம்.. அது அடுத்த பிரச்சினை. ஏனெனில் முன் சொன்னேனே அந்தக் காரண - காரிய - சூழ்நிலை இதை நிறுவியே தம்மையும் நிலைப்படுத்தும் தேவை இன்றும் ..இன்னும் இலங்கை ஆட்சியாளர்களுக்கு இருந்து கொண்டிருக்கிறது என்பதே எதார்த்தம். மஹிந்த..ஞானசார கூட்டணி 'இருக்கும்' வரை தான் மைத்ரி..ரணில் கூட்டணியின் அவசியத்தை, ஆகக்குறைந்தது பேய்க்குப் பதில் பிசாசுங்கற அடிப்படையிலாவது மக்கள் உணர்ந்து நடப்பார்கள்.
அவ்வாறில்லாத... சூழ்நிலை இல்லாதிருப்பதால் அதுவே இவர்களின் தெரிவும். எனவே ஓலங்கள், வாய்சவாடல்களின் வரையறையைத் தேடி உணர்ச்சிவசப்பட்டிருக்கும் எம் மக்களுக்கு பெப்ரவரி - மார்ச் அளவிலோ தேர்தல் முடிந்த பின்னோ திருப்தியான பதிலைத் தந்தாலே போதும் என ஆட்சியாளர்கள் அமைதி காப்பார்கள். அதுவரை நமது சங்கங்கள் அறிக்கை விட்டுப் பார்க்கலாம், ஆட்சியாளர்களை வையலாம்... எமது சமூக அரசியல்வாதிகளை என்னவென்றாலும் சொல்லலாம்..விமர்சிக்கலாம். ஆனால், ஈற்றில் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைக் கணித்துக் குழாவும் தலைமைகளுக்கு அது திருப்தி தரப் போவதில்லை.
எங்கு..எப்படி? இது நல்ல கேள்வி. ரியக்டிவ் சமூகமான எமக்கு அதைப் பற்றி சிந்திப்பதற்கு பல தடைகள் இருக்கின்றன. பிரதானமான தடை இயக்கப் பிரிவினை, கொள்கைப் பிளவு..! தானும் செய்யாது, யார் செய்ய வேண்டும் என்றும் வரையறை வைத்திருக்கும் சமூகமாதலால் யார் செய்வது என்பது இடியப்பச் சிக்கல்.
தனித்தனியாக... அது சட்டச் சிக்கல்! கொம்பனித்தெருவில் திருக்குர்ஆனை ஞானசார நிந்தித்ததற்கு 50 தனித்தனி வழக்குகள் பதிய.. ஆள் தயாரானது, திட்டம் தீட்டப்பட்டது, முயற்சியும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால்.. ஓஐசி வேறு மாதிரி நியாயம் பேசினார். ஒரே விடயமாதலால் ஒருவர் முறையிடுங்கள் 14 பேர் சாட்சியாகுங்கள் என்றார். அடடே! நல்லாருந்துதுனு அப்போ சுதாரிச்சுது நம்ம சமூகம். அதுதான் வழி முறைங்கற முன்னாலேயே நாங்க மறந்தது 'மறக்கப்பட' வேண்டிய கதை.
ஆக... இங்கு ஒரு விசயம் அவசியப்படுது.. அந்த விசயத்தை முன்னெடுக்கும் முறை தெரிந்த நிபுணத்துவம், வழி காட்டல், ஒருங்கிணைக்கும் சக்தி தேவைப்படுகிறது. ஆளாளுக்கு ஒரு 'கவுன்சில்' திறந்து வைத்து அதையும் அவங்கவங்க 'ஜமாத்' நலன் காக்க வளர்த்தெடுக்கிறதுனால எந்தக் கவுன்சில் அதை செய்ய முடியுங்கறதுலயும் பிரச்சினை இருக்கு.. இப்படியே போனா இறுதியில என்னாகிறது? ம்! இதை முதல்ல சிந்திக்கலங்கறதுனால முடிவுலயாவது சிந்திக்கும் தேவை உருவாகியிருக்கிறது. ஆனாலும் ... நாம் சிந்திப்போமா?
பஞ்சமில்லாம அமைச்சுப் பதவிகளை வைத்திருக்கிறோம்... தாரளமாக நாடாளுமன்றத்துல இருக்கைகளை பிடித்திருக்கிறோம்.. இன்னும் இரண்டு 'இரகசிய' ஆசனங்களை வேறு பத்திரமாக வைத்துக்கொண்டிருக்கிறோம். அப்புறம் என்ன? அரசியல் களத்துல விடையைக் காணலாம் தானே? அப்டினு நம்பலாம்.. நம்புவோம்.. ஏன்னா நம்பிக்கைதான் வாழ்க்கை! ஆனா அது நடக்காது. ஏன்னா... முஸ்லிம் அமைச்சர்கள் முஸ்லிம்களுக்காகப் பேசுவது 'நல்லதில்லை'னு ஒரு கட்சித் தலைவர் கொஞ்ச நாளைக்கு முதல்ல ஒரு சிரிப்புக் கதை சொன்னாரு. சோ.. மக்களாக ஏதாவது செய்தால் தான் உண்டு. ஆனாலும் ஒற்றுமையான இந்த 'உம்மத்துக்கு' ஒருங்கிணைப்புங்கற விசயம் இல்லைங்கறதுனால அதை யாரு செய்யப் போறாங்க இந்த அடுத்து வாற மூன்று மாத போராட்டத்திற்குங்கறதுதான் கேள்வியாக மட்டும் நிற்கிறது!
-இர்பான் இக்பால்
17/12/15


0 Comments