Subscribe Us

header ads

பௌத்த தேரோ – அமைச்சர் ரிசாத் விவாதத்தில் வெற்றிபெற்றது யார்?

நேற்று நடந்து முடிந்த ஆனந்த சாகர தேரருக்கும், அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் இடையிலான விவாதம் யாருக்கு வெற்றி என்ற வாதப்பிரதி வாதங்களே இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அமைச்சருக்கு கடமைப்பட்டுள்ள ஒரு சிலரைத்தவிர ஏராளமான முஸ்லிம் புத்தி ஜீவிகள் இவ்விவாதத்தினை ஒரு ஆரோக்கியமற்றது என்று முன்கூட்டியே விமர்சனம் செய்திருந்த நிலையிலேயே இது நடந்தேறியுள்ளது.

எதிர்காலத்தில் நடக்கப்போவதனை முன்கூட்டியே ஊகிக்கத் தெரிந்தவனே தலைவனாவான். நாட்டின் பெரும்பான்மை சமூகத்தின் மத குரு ஒருவருடன் சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒரு அமைச்சர் விவாதம் செய்யும்போது. விவாதக்களமும், அந்த பெரும்பான்மை இனத்தின் மனோ நிலையும் எவ்வாறு பிரதிபலிக்குமென்றும், விவாதம் நடாத்தும் அறிவிப்பாளர் எவ்வாறு நடந்து கொள்வார் என்பதனையும் முன்கூட்டியே ஊகிக்க அமைச்சர் தவறி விட்டார்.    

சிலர் இது நடைபெற முன்பே சோம தேரோவுடன் மர்ஹூம் அஷ்ரப் நடாத்திய விவாதத்துடன் ஒப்பிட்டனர். மர்ஹூம் அஷ்ரப் நடாத்தியதும், ரிசாத் பதியுதீன் நடத்திய விவாதமும் ஒரே அரசியல் சூழ்நிலைகளிளல்ல.
அஷ்ரப் விவாதம் நடாத்தும்போது இலங்கையில் இராணுவ சமநிலை பேணப்பட்டது. அதாவது சிங்கள இராணுவத்துக்கு சமனான இராணுவமாக விடுதலை புலிகள் காணப்பட்டதுடன் பிரபாகரனின் பெயரைக்கேட்டாலே தொடை நடுங்குகின்ற தலைவர்களாக சிங்கள தலைவர்கள் காணப்பட்டனர்.

இந்நாட்டிலே தமிழ் சிறுபான்மை இனத்தினர் தனிநாடு கேட்டு ஆயுதபோராட்டம் நடாத்திக்கொண்டிருக்கையில், மற்றைய சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் தமிழர்களுடன் சேர்ந்துவிடக்கூடாது என்பதில் சிங்கள் தலைவர்கள் கண்ணும் கருத்துமாய் இருந்தனர். இந்த சூழ்நிலையிலேயே மர்ஹூம் அஸ்ரப் விவாதம் நடாத்தினார்.

ஆனால் இப்போது தமிழர்களிடம் இராணுவம் இல்லை. புலிகள் முற்றாக அழிக்கப்பட்டதன்பின்பு ஏராளமான பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் தோற்றம் பெற்றதுடன் சிங்கள அரசியல் தலைவர்களே சர்வாதிகாரப்போக்கை கடைப்பிடிக்க துவங்கியுள்ளனர்.

இப்படியான சூழ்நிலையில் சிங்கள மதகுருவுவுடன் விவாதம் நடத்தும்போது, அது நாட்டின் பலபாகங்களில் சிதறிக்கிடக்கும் அப்பாவி சிறுபான்மை முஸ்லிம் மக்களினை பாதிக்கும் என்பதனை அமைச்சர் ரிசாத் பதியுதீன் கணிக்க தவறிவிட்டார்.  
   
அன்று மர்ஹூம் அஸ்ரப் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களோ, அதிகார துஸ்பிரயோகங்களோ சுமத்தப்பட்டிருக்கவில்லை. ஆனால் இன்று எல்லையில்லா ஊழல் குற்றசாட்டுக்களும், அதிகார துஸ்பிரயோகங்களும் சுமத்தப்பட்ட நிலையிலேயே விவாத மேடைக்கு சென்றார். இது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகின்றது.
    
சிங்கள மொழி புரியாத அமைச்சரது ஆதரவாளர்கள் தங்களது தலைவர் உரத்து சத்தமாக பேசினார். எனவே எங்கள் சத்திய தலைவர்தான் வெற்றி பெற்றுள்ளார் என்று நம்புகின்றனர். ஆனால் தேரோவின் சில கேள்விகளுக்கு குளிரூட்டப்பட்ட அறையில் அமைச்சருக்கு வியர்வை கொட்டியதனை அவர்கள் கவனிக்க தவறிவிட்டனர்.

சிறிய விடயங்களுக்கெல்லாம் சத்தியம் செய்து பேசுவது அமைச்சர் ரிசாத் அவர்களது சுபாவமாகும். அந்தவகையில் ஏராளமான அவரது சத்தியம் செய்து பேசிய பேச்சுக்கள் விடியோ ஆதாரங்கள் இருக்கின்றது. அப்படியிருக்கும்போது அமைச்சர் மீது ஊழல் குற்றசாட்டுக்களை சுமத்தி, அமைச்சரின் உறவினர்களின் யார் யார் பெயரில் என்னென்ன சொத்துக்கள் இருக்கின்றது என்ற பெயர்ப்பட்டியலினை ஆதாரபூர்வமாக சமர்ப்பித்ததுடன், சொப்பின் பேக் உடன் அகதியாக வந்த உங்களிடம் இவ்வளவு சொத்துக்கள் எவ்வாறு வந்தது என்றும் தேரோ கேள்வி எழுப்பினார்.

அத்துடன் இந்த ஊழல்கள் எல்லாம் பொய் என்று கருதினால் உங்களது வேதமான அல்-குரான் மீது சத்தியம் செய்யுமாறு தேரோ வேண்டினார். அல்-குரான் மீது சத்தியம் செய்யாவிட்டாலும் அல்லாஹ்மீது சத்தியமாக என்று கூறியாவது அந்த குற்ற சாட்டுக்களை மறுத்திருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை அமைச்சருக்கு இருந்தது.

ஏனெனில் இஸ்லாமிய ரீதியில் எவ்வாறு சத்தியம் செய்ய வேண்டுமென்று சிங்கள மக்களுக்கு தெரியாது. ஆனால் ஒரு பேச்சுக்கேனும் சத்தியம் செய்ய அமைச்சர் முன்வரவில்லை. அத்துடன் தேரோ அல்- குர்ஆண் உடன் வருவார் என்றும் அமைச்சர் எதிர்பார்க்கவில்லை.  சத்தியம் செய்யாததன் காரனமாக  அமைச்சர் தன்மீதுள்ள அனைத்து ஊழல்குற்ற சாட்டுக்களையும் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது சிங்கள மக்களின் கருத்தாகும்.

எந்தவொரு விவாத மேடைகளிலும் வழங்கப்பட்ட தலைப்புக்களுடன் விவாதம் மட்டுப்படுத்தப் படுவதில்லை. அவ்வாறு எதிர்பார்க்கவும் முடியாது. தலைப்புக்கு அப்பால் விவாதங்கள் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

எனவே சிங்களவருக்கும், முஸ்லிமுக்கும் இடையிலான விவாதம் என்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்திய இந்த விவாதத்தில் தேரோ தோல்வியடையவில்லை. தேரோவின் பல கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான பதில் அளிக்கபடாததன் மூலம் அமைச்சர் வெற்றிபெறவில்லை. இந்த விவாதக்களம் எங்களாலேயே ஏற்படுத்தப்பட்டது. மாறாக சிங்களவர்களால் அல்ல. அத்துடன் சிங்களவர்கள் மத்தியில் முஸ்லிம்கள் ஒரு ஊழல் வாதிகள் என்ற தோற்றப்பாட்டை இது ஏற்படுத்தியுள்ளது. என்பதுவே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.

எது எப்படி இருப்பினும், அரசியல்வாதிகளின் பொறிக்குள் அகப்பட்டுவிடாமல், அப்பாவி அகதி மக்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதுவே எமது பிரார்த்தனையாகும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது  



Post a Comment

0 Comments