கொழும்பு, பம்பலப்பிட்டி பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் கடந்த வார இறுதி நாள் ஒன்றின் இரவில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தேநீர் அருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிமாக அங்கு சென்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளருமான ஏ.ஸி. யஹியாகானைக் கண்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மகிழ்ச்சி மேலீட்டால் அவரை அழைத்து சில விடயங்களைப் பேசியதாக தெரிய வந்துள்ளது.
அதற்குப் பதிலளித்த யஹியா கான், தலைவரைச் சந்தித்து (அமைச்சர் ஹக்கீம்) சில விடயங்கள் பேசவுள்ளேன். அதன் பின்னர் கலந்துரையாடலாம் என தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல் எனக்குக் கிடைத்தவுடன் நான் யஹியாகானை தொடர்பு கொண்டு இது குறித்து சில விடயங்களைக் கேட்டறிந்தேன். (எனக்கும் யஹியாகான் அவர்களுக்குமிடையிலான தொலைபேசி தொடர்பாடல் இதோ!
நான்- நீங்கள் அமைச்சர் ரிஷாதை பம்பலப்பிட்டி ஹோட்டல் ஒன்றில் எதிர்பாராத விதமாகச் சந்திந்துள்ளீர்கள். உண்மைதானே...?
யஹியாகான் - யார் கூறியது?
நான்- என்னால் அதனைக் கூறமுடியாது. நீங்கள் சந்தித்தது உண்மைதானே?
யஹியாகான் - சந்தித்தது உண்மையே!
நான் -எப்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைகிறீர்கள்?
யஹியாகான் - இதுவரை நான் முடிவெடுக்கவில்லை.
நான்- அப்படியாயின் தலைவரைச் சந்தித்து (அமைச்சர் ஹக்கீம்) சில விடயங்கள் பேசவுள்ளேன். அதன் பின்னர் கலந்துரையாடலாம் என நீங்கள் ஏன் ரிஷாதிடம் கூற வேண்டும்?
யஹியாகான் -நான் முஸ்லிம் காங்கிரஸில் விரக்தியடைந்துள்ளேன். சீனியர் என்று கூறிக் கொள்ளும் சிலரால் நான் கட்சிக்குள் ஒதுக்கப்பட்டவனாக உள்ளேன்.
நான்- இல்லை.. இது ஒரு சாதாரண விடயம். அனைத்துக் கட்சிக்குள்ளும் இப்படியான நிலைமைகள் தோன்றுவதுதான்.
யஹியாகான் - அப்படி அல்ல.. எனது நிலைமை. நான் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளேன். எனக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகள், பதவிகள் குறைக்கப்பட்டதன் மூலமே எனது நிலையை நான் புரிந்து கொண்டுள்ளேன்..
நான்- நடந்து முடிந்த தேர்தல் ஒன்றின் போது கட்சிக்காக உங்களது சொந்தப் பணத்திலிருந்து 85 இலட்சம் ரூபாவை நீங்கள் செலவு செய்தீர்கள்தானே?
யஹியாகான் - அம்பாறை மாவட்டத்தில் கடந்த கால தேர்தல்களின் போது முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கிக்கு எனது தனிப்பட ஆதரவாளர்களும் பங்களிப்பைச் செலுத்தினர் என்பதனையும் நான் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான்- உங்களை முஸ்லிம் காங்கிரஸ் ஓரங்கட்டுவதாக நினைப்பதற்கு நீங்கள் முன்வைத்த காரணங்கள் மட்டும் போதமானவை என்பதில் நான் திருப்தி கொள்வில்லை.
யஹியாகான் - சாய்ந்தமருதவைச் சேர்ந்த சிராஸ் மீராசாகிபையும் ஜெமீலையும் ஓரங்கட்டி ஓடவைத்தார்கள்.. இனி அடுத்தது. நான்தான். இருந்து பாருங்கள்..
நான்- தலைவரைச் சந்தித்து பிரச்சினைகளைத தீர்க்கலாமே?
யஹியாகான் - ஆம், இரண்டொரு வாரங்களில் சந்தித்துப் பேசவுள்ளேன். சந்திப்பு திருப்தியாக, சாதகமாக இல்லாவிடின் கட்சியில் இருக்கமாட்டேன். ஆனால், அரசியலில் இருப்பேன்.
நான்- கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமைச்சர் ரிஷாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 33 ஆயிரம் வாக்குகளை அம்பாறை மாவட்டத்தில் பெற்றமையானது அமைச்சர் ரிஷாதையும் அவரது கட்சியையும் அம்பாறை மாவட்டத்தின் பல அரசியல்வாதிகள் திரும்பி பார்க்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதானே?
யஹியாகான் - சிரித்துக் கொள்கிறார்... அமைச்சர் ரிஷாதுக்கு கிடைத்த 33 ஆயிரம் வாக்குகளும் அவருக்காக அளிக்கப்பட்டவையே. இதனை நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். அமைச்சர் ரிஷாத் எதனையும் செய்யக் கூடிய துணிச்சல் மிக்கவர். கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடியவர் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


0 Comments