பிரபல றகர் வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பில் முக்கியஸ்தர்களில் சிலர், மிக விரைவிலேயே சிக்குவர் என்று அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இக்கொலைக்காகப் பயன்படுத்தப்பட்ட டிபென்டர் ரக வாகனம் யாருடையது, பிரதான சந்தேகநபரான சாரதி, யாருடைய சாரதியாகக் கடமையாற்றிவர் என சொல்லித் தெரியவேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஜனவரி 8ம் திகதியுடன் ஒருவருடம் நிறைவடைகின்றது. இக்குறுகிய காலததிற்குள் நாம் நாட்டில் பல செயற்றிட்டங்களை மேற்கொண்டுள்ளோம்.
அதன்பிரகாரம் 19வது திருத்தச்சட்டத்தை அறிமுகப்படுத்தி, ஜனாதிபதியின் பிரதான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 10 சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
மிகவிரைவில், நாடாளுமன்றத்தை அரசியலமைப்புச் சபையாக மாற்றவுள்ளது.
மேலும், நாட்டில் தற்போது மக்களுக்கு சுதந்திரமும் உரிமையும் பூரணமாக்கப்பட்டுள்ளது.
வடக்கிலுள்ள பெற்றோர்கள் நிம்மதியாக உறங்கும் நிலைமையும் முஸ்லிம்கள் சுதந்திரமாக தமது மத வழிபாடுகளில் ஈடுபடவும் உணவு முறைகளை விரும்பியபடி மேற்கொள்ளவும் நல்லாட்சி அரசாங்கமே வழிசமைத்தது.
பிரபல றகர் வீரர் வசீம் தாஜூதினின் படுகொலை தொடர்பான விசாரணை, மிக விரைவிலேயே முடிவடையவுள்ளது.
விசாரணைகள் நிறைவடைந்ததும் முக்கிய புள்ளிகள் சிலர் கைதுசெய்யப்படுவர் என்றார்.
கேள்வி:- ஊழலுக்கு எதிரான கைது நடவடிக்கைகள் இடம்பெறவில்லையே?
பதில்:- இந்த செயற்பாட்டில் காணப்படுகின்ற தாமதம் குறித்து மக்கள் அக்கறை செலுத்தியுள்ளனர். இதில் சட்டமா அதிபர் திணைக்களம், மற்றும் பொலிஸ் திணைக்கள் என்பன சம்பந்தப்பட்டுள்ளன. சில இடங்களில் மந்தகதியை காண்கிறோம். வழக்கு விசாரணைகள் இடம்பெற்று முடிந்துள்ளன.
தற்போது நடவடிக்கை எடுப்பதுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவேண்டியுள்ளது. ஆனால் இவ்வாறு கைதுகள் தொடர்பில் அச்சம் கொண்டுள்ள கடந்த ஆட்சிகாலத்தில் முக்கியஸ்தர்கள் அரசாங்கத்தை குழப்புவதற்கும் வீண் பிரச்சினைகள் ஏற்படுத்தவும் முயற்சிக்கப்படுகிறது.
குற்றச்சாட்டுக்கள் மற்றும் கைது சம்பந்தமான விவகாரங்கள் தொடர்பில் புலனாய்வு அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. குற்றச்சாட்டுக்களுடன் சம்பந்தப்பட்டோர் மேற்கொண்டுள்ள இறுதி முயற்சியையும் நாங்கள் தோற்கடிப்போம்.
கேள்வி:- அவன் காட் விவகாரம் தொடர்பில் ?
பதில்:- அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த விடயத்தில் ஒரு தாமதம் இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.
கேள்வி:- அவன் காட் நிறுவனத்தின் தலைவர் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையை தொடர்ந்து புறக்கணிக்கிறாரே?
பதில்:- அந்த விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதியும் செல்கிறார். ஆனால் அவன் காட் நிறுவனத் தலைவர் அதனை தவிர்க்கிறார். அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி:- யாருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளன என்று கூற முடியுமா?
பதில்:- பலர் உள்ளனர். ராஜபக்ச குடும்பம் உள்ளிட்ட பலருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படுகின்றன. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். பலர் சிறைகளுக்குள் செல்வதற்கான காலம் வந்துவிட்டது. தவறு செய்தோர் தப்பிக்கவே முடியாது.


0 Comments