வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வேரோடு
அறுக்கப்பட்டு மூன்று தசாப்தங்களாகின்ற இந்த காலகட்டத்தில் வில்பத்து தேசிய வனத்தை
அழித்து முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியேற்ற படுகின்றார்கள் என ஒரு சில ஊடகங்களும்
ஒருசில பேரினவாத அமைப்புக்களும் கூச்சலிட்டு நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றன
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர்
முஸ்லிம் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த இலங்கையின் மிகக்குறைவான மழை
வீழ்ச்சி பெறப்படும் மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் தாம் வெளியேற்றப்பட்ட காலத்தில்
இருந்து பற்றைகளும் சிறுசிறு மரங்களும் வளர்ந்துபோயுள்ள நிலத்தை துப்பரவு செய்து
அங்கு அரசாங்கம் செய்யவேண்டிய மீள்குடியேற்றத்தை அரசுக்கு பாரம் இல்லாமல் அமைச்சர் ஒருவரின் முயற்சியில் வெளிநாட்டு
உதவியோடு செய்து மக்களை குடியேற்றிவருகின்ற இந்த சந்தர்ப்பத்தில் வெறுமனே
வெளிப்பார்வையை மட்டும் வைத்துகொண்டு ஊடகங்களும் பேரினவாதிகளும் செய்திகளை
வெளியிட்டு, மக்களை தமதுபக்கம் ஒன்றிணைத்து ஆர்பாட்டம் செய்து வருவதானது
கவலைக்குரிய ஒன்றாகும்
உண்மையில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இனப்போரினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை
திட்டமிட்டு குடியேற்ற இதுவரை திட்டமிடாமல் அரசு காலத்தை கடத்தி வருவதோடு மட்டுமல்லாமல் வெளிநாட்டு
உதவிகளோடு செய்ய நினைக்கும் மீள்குடியேற்றத்தை திரிவு படுத்துகின்றவர்களை
கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் கை கட்டி நிற்பது இப்பிரச்சினையை பூதாகரமாக்குபவர்களுக்கு
துணை போவதாகவே அமையும்
இம்மீள் குடியேற்றத்திக்கு உறுதுணையாக
செயல்படும் அமைச்சருக்கு எதிராக பேரினவாதிகள் செயற்பட முனைந்துள்ளனர் இந்த விடயத்தில்
அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் புத்திஜீவிகளும் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படும்
பாதிப்புகள் பற்றி வாய் திறக்கவேண்டும் இதில் அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு
சகலரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதன் மூலம் பேரினவாதிகளினதும் அவர்களின்
ஊதுகுழலாக செயற்படும் சில ஊடகங்களினதும் கூக்குரலை நசுக்கமுடியும்
அத்தோடு அரசு இனியாவது மிக நீண்ட நாட்களாக
அடுத்தவன் வீட்டில் வாழும் வடக்கு முஸ்லிம் மக்களை திட்டமிட்ட அடிப்படையில்
குடியேற்ற நடவடிக்கை எடுப்பதோடு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு உடனடியாக
முனைய வேண்டும.
கடந்த அரசில் யுத்தம் முடிவடைந்த கையோடு சகல அரச
சார்பற்ற நிறுவனங்களும் மூடப்பட்டு ஓரிரு நிறுவனங்கள் மட்டும் பாதுகாப்பு
அமைச்சின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கியது யாவரும் அறிந்ததே அச்சமயமே
பாதுகாப்பு அமைச்சின் பூரண அனுமதியோடு மறிச்சுக்கட்டியிலே அரபு நாட்டின் உதவியோடு
வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் குடியேற்றப்பட்டனர்
பாதுகாப்பு அமைச்சினதும் கடந்த அரசாங்கத்தின் பூரண அனுமதியுடனே
இவ்வீட்டுதிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது அது தவிர முஸ்லிம் மக்கள் தான்றோன்றி
தனமாக எடுத்த எடுப்பிலே அங்கு சென்று காணிகளை பிடிக்கவோ அல்லது காடுகளை அழிக்கவோ
இல்லை தாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த இடங்களைத்தான் துப்பரவு செய்து குடியேறி
உள்ளனர் இதனை தீர விசாரிக்காத ஒருசில ஊடகங்களும் பேரினவாத அமைப்புக்களும் காடு
காடு என கத்தி காட்டு தீ போல் விசக்கிருமிகளை பரப்பி எதுவும் அறியாத மக்களை
குழப்பி வருகின்றனர்.
இன்று ஒரு படி மேலேபோய் வீதிக்கு இறங்கி
ஆர்பாட்டம் செய்கின்ற அளவுக்கு பேரினவாதிகள் துணிந்து விட்டார்கள் இவர்களை
கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாக இருந்தால் இப்பிரச்சனை பூதாகரமாக்கப்பட்டு கடந்த அரசில்
முஸ்லிம்கள் மீது ஏற்படுத்தப்பட்ட அசௌகரியங்கள் மீண்டும் உருவாகும் வாய்ப்பினை
அரசே உருவாக்கி கொடுக்கும் நிலை ஏற்படலாம்
மேலும் இதனை ஒரு அரசியல்வாதிக்கு எதிரான பிரச்சனையாக
ஏனைய அரசியல்வாதிகளும் கட்சிகளும் உலமா சபையினரும் முஸ்லிம் அமைப்புகளும் கருதாமல் மீள்குடியேறியுள்ள
மீள்குடியேறபோகின்ற வடபுல முஸ்லிம்களின் பிரச்சனையாக கருதி ஒன்றிணைந்து
இதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டும்
அவ்வாறு ஒன்றிணைந்து குரல் கொடுப்பதன் மூலம்
அரசையும் சர்வதேசத்தையும் இதில் கவனம் செலுத்தி பேரினவாதிகளையும் அவர்களின்
சொல்லுக்கு செயற்படும் சூலழியலாலர்களையும் அவர்களுக்கு ஒத்துஊதும் ஊடகங்களையும்
கட்டுபடுத்தி நிம்மதியான, கெளரவமான மீள்குடியேற்றத்தில் வடபுல முஸ்லிம்கள்
உள்வாங்கப்பட ஏதுவான சூழ்நிலைகளை ஏற்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதே
அனைவரினதும் எதிர்பார்ப்பாகும் .
எஸ் எம் மணாப்தீன்
பொதுச்செயலாளர்
மக்கள் மருமலர்ச்சி முன்னணி


0 Comments