Subscribe Us

ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்; பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

கடும்போக்கு அமைப்பான பொதுபலசேனாவின் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ள சர்ச்சைக்குறிய விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை நடத்தி உண்மையை கண்டறியுமாறு பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம். அமீன் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தெஹிவளை பகுதியில் உள்ள வீடொன்றில் தற்கொலை தாக்குதல் நடத்தக்கூடிய ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக ஞானசார தேரர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

சர்வதேச பயங்கரவாதிகளுடன் இணைந்து இலங்கையில் பாரிய தாக்குதல் நடத்த திட்டமிடப்படுவதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரரின் இந்த கருத்தானது, ஜனவரி 08 ஆம் திகதிக்கு முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதாகவே அமைந்துள்ளது.

கடந்த மூன்றாண்டுகளில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு மேற்கொண்ட வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக இதுவரை எந்தவித பொலிஸ் நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

ஆகவே ஞானசார தேரர் தெரிவித்துள்ள இந்த விடயம் தொடர்பாக உடனடி விசாரணையை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் கவுன்சில் பொலிஸ்மா அதிபரை கேட்டுக் கொள்கின்றது என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments