Subscribe Us

header ads

"குர்ஆன் மீது சத்தியம் செய்யக் கோரும்படி, தேரருக்குச் சொல்லிக்கொடுத்த பன்னாடை"

-Ashroff Shihabdeen-

ஹிரு தொலைக்காட்சியில் நடந்த விவாதம் எப்படி நடந்து முடிந்தது என்பது அறிவுள்ள அனைவருக்கும் தெளிவாகப் புரிந்துதான் இருக்கும்.

ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கணங்களை வென்று சென்றாலும் கூட உண்மை உள்ளே கிடந்து துடிக்கத்தான் செய்யும். அதுவே பிழைகளின் மீது பிழைப்பு நடத்துவோரைப் பிறழ் நடத்தைக்குத் தள்ளிவிடும்.

அந்த அடிப்படையில் அமைச்சர் ரிஷாத் குர்ஆன் மீது சத்தியம் செய்ய மறுத்தார் என்று சொல்லி மனதைத் தேற்றிக் கொள்ளவும் அதையே ஒரு குற்றச் சாட்டாக எடுத்து வைத்துத் தகவல் பரப்பவும் முனைந்திருக்கிறார்கள்.

குர்ஆன் மீது சத்தியம் செய்யக் கோரும்படி தேரருக்குச் சொல்லிக் கொடுத்த பன்னாடைக்கு இஸ்லாமிய வழிமுறை தெரியவில்லை. அல்லாஹ் ஒருவன் மீதே சத்தியம் செய்ய முடியும். இதில் வேடிக்கை என்னவெனில் எதிர் அரசியல் முஸல்மான்களும் “குர்ஆனில் சத்தியம்” செய்யாததை அமைச்சரின் தோல்வியாகச் சித்தரிக்க முனைவதுதான்.

தேரரும் அமைச்சரும் அங்கு விவாதம் செய்ய வந்தார்களே தவிர, சத்தியம் செய்ய வரவில்லை. சத்தியம் செய்வதானால் தான் சொன்னவை யாவும் சரியானவை என்று தேரரும் சத்தியம் செய்திருக்க வேண்டும். ஆனால் அதைப் பற்றி யாரும் பேசுவதாகத் தெரியவில்லை.

நிகழ்ச்சியையும் சத்தியம் செய்வதற்கான நிகழ்ச்சியாக அறிவித்திருந்தால் மணித்தியாலக் கணக்கில் அமர்ந்து வாதம் செய்திருக்கத் தேவையில்லை. நிகழ்ச்சியும் 10 நிமிடங்களில் முடிந்திருக்கும்!

-Jaffna Muslim-

Post a Comment

0 Comments