வில்பத்து காடழிப்பு விவகாரம் தொடர்பில் தன்மீது சுமத்தப்பட்ட அவதூறுகளுக்குப் பதிலளிப்பதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பகிரங்க தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை பங்கு கொள்கிறார்.
இரவு 10.00 மணிக்கு ஹிரு தொலைக்காட்சியில் இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. வடபுலத்தில் முஸ்லிம்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த இடங்களில் அவர்களை மீளக்குடியேற்றுவதனைத் தடுப்பதற்காக “வில்பத்து“ என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி சிங்கள இனவாத சக்திகள் இன்று சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் போலிப் பிரசாரங்களைச் செய்து வருகின்றன.
காடழிப்பு, அத்துமீறல், அடாத்தாகப் பிடிப்பு என்றெல்லாம் மெருகூட்டப்பட்ட வார்த்தைகளால் இனவாத தீ இன்று தெற்கில் எரிய விடப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைத் தடுக்க வேண்டுமென்பதற்காக அதனை அரசியலாக மாற்றி இன்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த விடயத்தில் பலிக்கடாவாக ஆக்கப்பட்டுள்ளார் என்பதே உண்மை.
அமைச்சர் ரிஷாத் பிறந்த பூர்வீகம், அவரது பிரதேசம் இவற்றுக்கு மேலாக அவர் ஓர் அமைச்சர் என்ற வகையில் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மட்டுமல்ல அவர்களின் நலன்களிலும் அக்கறை செலுத்துவதில் தவறில்லை. அது அவருக்கு உரிய பொறுப்பு.
வடபுல முஸ்லிம்களின் குடியேற்ற விவகாரத்தில் அவர் நியாயத்தின்படியே செயற்படுகிறார். சட்டத்தை மீறி அவர் செயற்படவுமில்லை. அவரால் செயற்படவும் முடியாது. இதற்கான ஆதாரங்கள் நிறையவே உள்ளன.
ஆனால், இந்த உண்மைகள் மறைக்கப்பட்டு இந்த நாட்டில் வாழக்கூடிய சிங்கள பௌத்தர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் இன்று எமது சமூகத்தை ஆக்கிரமிப்பாளர்களாகவே நினைக்கின்றனர்.
இவ்வாறனதொரு சூழ்நிலையிலேயே இந்த தொலைக்காட்சி விவாதம் இடம்பெறுகிறது. இது ஒரு சாதரண அரசியல் விடயமாகவே விவாதமாகவோ அமையப் போவதில்லை. இந்த நாட்டில் வாழக் கூடிய ஒட்டுமொத்த முஸ்லிம்களினதும் கௌரவத்தையும் அவர்களது உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்புமிக்க ஒரு சந்தர்ப்பமாகவே இதனைக் கொள்ள வேண்டும்.
அன்று மாமனிதர், தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் முன்னர் ஒரு தடவை தேரருடன் தொலைக்காட்சியில் வாதம் புரிந்து எவ்வாறு வெற்றி கொண்டார் என்பது அனைவரையும் தெரிந்த விடயம். அவரது விவாதத் திறமை, சான்றாதாரங்கள், சாணக்கியமாக விவாதம் புரிதல், மொழியாற்றல் போன்றவற்றின் மூலம் சோபித தேரரை வாய்மூட வைத்தார். மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் முன்வைத்த நியாயங்கள், அவரது வாதத்திறமை என்பன முஸ்லிம்கள் மத்தியில் சிங்களவர் கொண்டிருந்த தவறான அபிப்பிராயங்களை களையச் செய்ததுடன் முஸ்லிம் மக்களிடையே மிகுந்த மரியாதையையும் ஏற்படுத்தின.
அவ்வாறானதொரு நிலைமையே அமைச்சர் ரிஷாத்தும் எதிர்வரும் திங்கட்கிழமை எதிர்கொள்கிறார். வடபுல முஸ்லிம்களுடன் இன்று இட்டுக் கட்டப்பட்டுள்ள வில்பத்து விவகாரமே குறித்த விவாதத்தின் கருப் பொருளாக இருந்தாலும் இந்த நாட்டில் வாழும் முழு முஸ்லிம் சமூகத்தினதும் கௌரவத்துடன் சம்பந்தப்பட்டதாகவே இது அமையும் அதனைப் பாதுகாக்கும் பொறுப்பு அமைச்சரிடம் உள்ளது.
விவாதத் திறமை, ஆளுமை, ஆதாரங்கள் இவை மூன்றும் அமைச்சர் ரிஷாதிடம் காணப்படாலும் சிங்கள மொழியாற்றல் ஒரு சிக்கலாகவே அவருக்கு இருக்கும் என்று நம்பலாம். எவ்வளவுதான் திறமைகள் இருந்தாலும் விவாதம் ஒன்று வரும் போது சரளமான மொழியாற்றல் இல்லாவிடில் பல்வேறு சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டும். இதுவே குறித்த விவாதத்தில் அவர் எதிர்கொள்ளக் பாரிய சவாலாக அமையும்.
எனவே, இந்த விடயத்திலும் குறித்த விவாதத்தில் அமைச்சர் ரிஷாத் வெற்றி பெற வேண்டுமென பிரார்த்திப்பதே எமது கடமையாகும். அமைச்சர் என்பதற்காகவோ ரிஷாத் பதியுதீன் என்ற தனிமனிதருக்காகவோ யாரும் பிரார்த்திக்கத் தேவையில்லை. எமது சமூகம் தலைகுனிந்து விடாமலும் வடபுல முஸ்லிம்களை வைத்து இன்று முன்னெடுக்கப்படும் போலி இனவாதப் பிரசாரங்கள் அனைத்தும் குறித்த விவாதத்தின் ஊடாக துடைத்தெறியப்பட வேண்டும். வடபுல முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ அவர்கள் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற எந்தத் தடைகளும் ஏற்படக் கூடாது என்றும் அதற்கான நதிமூலமாக இந்தத் தொலைக்காட்சி விவாதம் அமைந்து வெற்றி கிடைக்கவும் அதற்கான சக்தியை அமைச்சருக்கு இறைவன் வழங்க வேண்டுமெனவும் என்றே நாம் பிரார்த்திப்போமாக!
இந்த விடயத்தில் கட்சி, அரசியல் பேதங்கள் இன்றி நாம் சமூகத்துக்காக ஒன்றிணைய வேண்டும். அமைச்சர் ரிஷாதின் உண்மையான, ஆதாரபூர்வ விவாதத்தன்மையுடம் அவர் அடையக் கூடிய வெற்றியானது முஸ்லிம் சமூகத்துக்கும் பெருமை சேர்ப்பதாகவே அமையும்.
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


0 Comments