Subscribe Us

அமெரிக்காவை கொலம்பஸ்தான் கண்டுபிடித்தாரா?: வெளியான புதிய தகவல்கள்

மெரிக்கா நாட்டை கொலம்பஸ் கண்டுபிடிப்பதற்கு முன்னதாகவே அந்நாட்டில் பிற நாட்டினர் நுழைந்துள்ளதற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.


இத்தாலி நாட்டை சேர்ந்தவரான கிறிஸ்டோபர் கொலம்பஸ்,  கடந்த 1492-ம் ஆண்டு முதன் முதலாக அமெரிக்க நாட்டிற்கு சென்றதாக வரலாறு. ஆனால், அமெரிக்காவிற்கு கொலம்பஸ் செல்வதற்கு முன்னதாகவே சீனர்கள், நார்வே நாட்டை சேர்ந்தவர்கள் சென்றனர் என பலவாறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.
 
இதன் உச்சக்கட்டமாக ஐஸ்லாந்து நாட்டை சேர்ந்த லிப்ஸ் எரிச்சன் என்பவர்தான் முதன் முதலில் அமெரிக்காவை கண்டுபிடித்தவர் என்ற தகவலும் ஏற்கனவே வெளியானது.

எனினும், இந்த யூகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கொலம்பஸ் அமெரிக்காவிற்கு செல்வதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே அங்கு ரோமானியர்கள் சென்றதற்கான ஆதாரங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



இதற்கான ஆதாரமாக அமெரிக்காவில் உள்ள ஓக் தீவிலிருந்து பழமையான போர் வாள் மற்றும் கேடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் பயணம் மேற்கொண்ட கப்பலின் பாகங்களும் ஆதாரங்களாக கிடைத்துள்ளதாக ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
புதிதாக வெளியாகியுள்ள இந்த தகவலை சில அறிவியலாளர்கள் மறுத்துள்ளனர். ஆனால், ஆய்வை மேற்கொண்டு வரும் ஜோவன் ஹட்டன் பிலிட்சர் என்ற ஆய்வாளர், இந்த வாள் ரோமானியர்களுக்கு சொந்தமானது என்றும், அது முதலாம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்டது என்றும்  உறுதியாக தெரிவித்துள்ளார்.
 
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆய்வு தொடர்பான விரிவான அறிக்கை அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே வெளியாக உள்ளதால், அதில் அமெரிக்காவை கண்டுபிடித்தது யார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments