அடுத்த வருடம் முற்பகுதியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மற்றும் எதிர்கால அரசியல் நட வடிக்கைகள் போன்றவற்றை இலக்குவைத்து "எமது ஸ்ரீ லங்கா சுதந்திர முன்னணி" என்ற பெயரில் அரசியல் கட்சியொன்றை உருவாக்குவதற்கு வேண்டிய சகல ஏற்பாடுகளையும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மேற்கொண்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் உருவா கும் "எமது ஸ்ரீ லங்கா சுதந்திர முன்னணி" யில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மஹிந்த அணி, தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய,வாசுதேவ நாணயக்கார தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி உள்ளிட்ட மேலும் பல அமைப்புக்களும் இந்தப் புதிய கட்சியில் இணைந்து செயற்படவுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பைவிடுத்ததும் இந்த அரசியல் சக்தி குறித்து அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது. தற்போது நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற உள்ளூராட்சி சபைத் தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கமையவும் முயற்சியின் விளைவாகவுமே இந்த முன்னணி தோற்றம் பெறுவதாகவும் சொல்லப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மஹிந்த அணியினர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் பகிர்வு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் உள்ளிட்ட பல செயற்பாடுகளை கடுமையாக எதிர்த்த மஹிந்த அணியினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக்கட்சிகள் சிலவற்றுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தனர்.
இவ்வாறான நிலையிலேயே எதிர்வரும் தேர்தலில் மஹிந்த அணியினர் புதிய முன்னணியில் போட்டியிடத் தீர்மானித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments