பொதுத்தேர்தல் நடந்து பலமாதங்களாகிவிட்டன.
தேர்தல் ஒப்பந்தத்தின் பிரகாரம் ஐ. தே. கட்சியினால் முஸ்லிம் காங்கிரசுக்கு
வழங்கப்பட்ட இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை உத்தியோக
பூர்வமாக கட்சி அங்கத்தவர்களுக்கு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதனால் மு. கா
தலைமைத்துவம் விமர்சனங்கள் பல எதிர்கொள்வதனை
காணக்கூடியதாக உள்ளது.
முடிவெடுப்பதில் தாமதிப்பதாக, எடுத்த எடுப்பில் தலைமைத்துவத்தினை விமர்சிக்க
தெரிந்தவர்களால், எம்பி பதவியினை அடையும்பொருட்டு கட்சிக்கும்,
தலைமைத்துவத்துக்கும் விடுக்கப்படும் சுயநலவாதிகளின் அச்சுறுத்தல்களையும், குழப்பங்களையும்
ஆழ ஊடுருவி உண்மை நிலையினை புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் வேதனையான விடயமாகும்.
பொது தேர்தலுக்காக வேற்பாளர்களை நிறுத்துவதில் மு.கா.
தலைமைத்துவம் எதிர்கொண்ட இடியப்பச்சிக்கல்களுக்கு தீர்வு கண்டு ஆறுதல்
அடைவதற்கிடையில், மீண்டும் தேசியப்பட்டியல் வழங்குவதில் என்றுமில்லாத பாரிய
சவால்களை தலைமைத்துவம் எதிர்கொண்டுள்ளது. இதனால் கட்சிக்குள் பிளவுகள்
ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் உருவெடுத்துள்ளது.
தேர்தல் பெறுபேறுகள் பூரணமாக வெளியாகுவற்கிடையில்,
தேசியப்பட்டியல் நியமனம் தனக்கே வழங்கப்பட வேண்டுமென்று பலவிதமான அழுத்தங்களுடனும்,
நியாயப்படுத்தல்களுடனும் நாட்டின் பலபாகங்களில் இருந்தும் ஒவ்வொருவரும் தங்களது
ஊரவர்களையும், ஆதரவாளர்களையும் திரட்டிக்கொண்டு,
ஊருக்கு எம்பி வேண்டும் என்ற கோஷங்களுடன் தலைவரின் இல்லத்தை
முற்றுகையிட்டிருந்தனர்.
அந்தவகையில் களுத்துறை, கொழும்பு, கம்பகா,
அனுராதபுரம், புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ளவர்கள், தங்களது மாவட்டங்களில் பலயீனமாக
இருக்கின்ற கட்சியை வளர்க்கவேண்டும். எனவே எங்களுக்குத்தான் இந்த எம்பி பதவியை
வழங்க வேண்டுமென்று தனித்தனியாக ஒவ்வொருவரும் அழுத்தங்களை வழங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.
வன்னி மாவட்டத்தில் ரிசாத் பதியுதீனின் சவால்களை
முறியடிக்க வேண்டும் எனவே வன்னி மாவட்டத்துக்கு எம்பி பதவியினை வழங்க வேண்டுமென்றும்,
அது தனக்கே வழங்கப்படவேண்டும் என்று மூன்றுக்கு மேற்பட்ட கட்சி முக்கியஸ்தர்கள் தனித்தனியாக
தலைமையை அழுத்திக்கொண்டிருக்கின்றார்கள்.
இம்முறை திருகோணமலை மாவட்டத்தில் எதிர்பாராத
விதமாக சொற்ப வாக்குகளினால் முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆசனத்தை இழந்தது. மீண்டும் அரசியல்
அதிகாரம் திரிகோணமலைக்கு வழங்கப்படாவிட்டால் கட்சி அங்கு பலயீனமடைந்துவிடும். எனவே
கட்சியை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு அங்கு அரசியல் அதிகாரத்தினை நிலைநாட்டுவதற்காக
தோல்வியடைந்த எம். எஸ். தௌபீக் அவர்களுக்கு தேசியப்பட்டியல் மூலம் மீண்டும் எம்பி
பதவி வழங்கப்படவேண்டும் என்று அம்மாவட்டத்தின் பலபிரதேசங்களிலிருந்தும் தலைமைக்கு
அழுத்தங்கள் வளங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இதற்கிடையில் மட்டக்களப்பு மாவட்டத்தை
எடுத்துக்கொண்டால் கற்குடா தொகுதியில் அமீரலியின் கெடுபிடிகளுக்கு
ஈடுகொடுக்கும்வகையில் அங்கு இம்முறை வேட்பாளராக நிறுத்தப்பட்ட ரியால் அவர்களுக்கு
எம்பி பதவி வழங்கப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் ஒருபுறமிருக்க, காத்தான்குடியில்
ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கட்சியின் ஆரம்பகால உறுப்பினரும்,
முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான முபீன் அவர்களுக்குத்தான் எம்பி பதவி
வளங்கப்படவேண்டுமென்ற அழுத்தங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. அதேவேளை இம்முறை முஸ்லிம்
காங்கிரசில் இணைந்து போட்டியிட்ட நல்லாட்சிக்கான முன்னணியின் தலைவர் அப்துல் ரஹ்மான்
அவர்களுக்கும் எம்பி பதவி வழங்கப்பட
வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரையில், மாகான
அமைச்சு பதவி மூலம் திருப்தியடைய முடியாது என்றும், வாக்குறுதியளித்தபடி
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கியாக வேண்டும் என்ற மூன்று பக்க அழுத்தம்
ஒருபுறமும், அக்கரைப்பற்றுக்கு வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகள் மறுபுறமும்,
பொத்துவில் அனாதயாகக் கிடக்கின்றதனால், பொத்துவிலுக்கு அரசியல் அதிகாரத்தை
அடையும்பொருட்டு எம்பி பதவி வழங்க வேண்டுமென்ற கோரிக்கையும் தலைமைக்கு பல
நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. அத்துடன் கல்முனையில் பாராளுமன்ற உறுப்புரிமை
இருப்பதைப்பற்றி பிரச்சினை இல்லை. தேசியப்பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றதுக்கு
அமைவாக தனக்கு எம்பி பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிசாம் காரியப்பர்
தரப்பினரால் விடுக்கப்படுவதாக அறிய முடிகின்றது.
இவைகளெல்லாம் ஒருபுறமிருக்க, முஸ்லிம் காங்கிரசின்
அரசியல் அதிகாரங்களை காலம் பூராகவும் அனுபவித்து பழக்கப்பட்ட பஷீர் சேகுதாவூத்,
ஹசனலி போன்றவர்களின் செயற்பாடுகள் மேலே கூறப்பட்டவர்களின் செயற்பாடுகளுக்கு ஒரு
படி மேலே சென்றுள்ளது. “குடிப்பது அல்லது கௌப்பது” என்ற ரீதியில், அதாவது
தொடர்ச்சியாக தாங்கள் அனுபவித்து வந்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி
இம்முறையும் தங்களுக்கே வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் கட்சியை அழித்து
விடுவோம். என்று தலைவரை அச்சுறுத்தும் நிலை காணப்படுகின்றது. இது பாரிய
பிரச்சனைகளை கட்சிக்குள் உருவாக்கி விடுமோ என்ற அச்சத்தை உண்டுபண்ணியுள்ளது.
எரிகின்ற வீட்டில் எண்ணை ஊற்றுவது போன்று முஸ்லிம்
காங்கிரசை அழிக்க துடிக்கும் பேரினவாதிகளும், அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப
செயற்படும் கைக்கூலிகளும் இந்த தேசிய பட்டியல் விவகாரத்தினை சூழ்ச்சிகரமாக
கையாள்வதனை காணக்கூடியதாக இருக்கின்றது. அதாவது பசீர் சேகுதாவுதுக்கும்,
ஹசனலிக்கும் எம்பி பதவி வழங்கப்பட்டால் கட்சியின் பல முக்கியஸ்தர்கள்
அதிருப்தியினால் பிரிந்து சென்றுவிடுவார்கள். இதனால் முஸ்லிம் காங்கிரஸ் பலயீனனமடைந்து
விடும் என்பதே இவர்களது எதிர்பார்ப்பாகும்.
இதனை அடையும் பொருட்டு பசீருக்கும், ஹசனலிக்கும்
பின்னணியில் இந்த பேரினவாதிகளும், அவர்களது அடிவருடிகளும் செயற்படுவதனை ஊகிக்ககூடியதாக
இருக்கின்றது. இதற்கிடையில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவுக்கும், ஹசனலிக்கும்
இடையில் உள்ள நெருக்கம் காரணமாக, ஹசனலிக்கே தேசியப்பட்டியல் எம்பி பதவி
வழங்கவேண்டும் என்ற அழுத்தம் ஜனாதிபதி மூலமாக தலைவர் ஹக்கீமிடம் விடுக்கப்பட்டதும்
ஒரு ஒரு பாரிய சவாலாக அமைந்துள்ளது.
பசீர் சேகுதாவூத்தின் ஏறாவூரில் அலிசாகீர்
மௌலானாவும், ஹசனலியின் நிந்தவூரில் பைசால் காசீமும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மு.
கா பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே இருக்கின்ற நிலையில், பாராளுமன்ற
பிரதிநிதித்துவம் இல்லாத ஊருக்கு அல்லது மாவட்டத்துக்கு இந்த தேசியப்பட்டியல்
நியமனத்தை முன்னின்று வழங்குவதற்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையில் இந்த
இருவரும் இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். கட்சியின் மூத்த உறுப்பினர்கள்
என்ற ரீதியில் இவர்கள் கட்சிக்கு ஒரு தந்தையாக இருந்து கட்சியை அதன் கொள்கையில்
பயணிக்கவும், இன்னும் வளர்ச்சியடயச்செய்யவும் பக்கபலமாக இருந்து செயலாற்ற வேண்டும்
என்பது போராளிகளின் விருப்பமாகும்.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில் ஒருசிலரை தவிர
ஏனையவர்கள் தங்களுக்கு எம்பி பதவி வழங்கப்படாவிட்டால் தலைவருக்கும், கட்சிக்கும்
ஒரு பாடம் புகட்டுவோம் என்ற எச்சரிக்கையை விடுப்பதை காணக்கூடியதாக உள்ளது. இது
எதிர்வருகின்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் கட்சிக்கு பாதிப்பை உண்டுபன்னிவிடுமோ
என்ற அச்சம் தலைவரிடத்தில் காணப்படுகின்றது. இதனாலேயே இந்நியமனத்தை வழங்குவதில்
இழுத்தடிப்புக்கள் காணப்படுகின்றது.
எம்பி பதவி கிடைப்பதனால் மட்டும் எமது சமூகம்
உரிமைகளை பெற்றுவிடப் போவதுமில்லை, அபிவிருத்தியடைந்து விடப்போவதுமில்லை. என்ற
உண்மையை புரிந்துகொள்ளக்கூடியவர்கள் யார் இருக்கின்றார்கள்.
எது எப்படி இருப்பினும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்
முடிந்தவுடன் இந்த தேசியப்பட்டியல் விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்ற நிலையில்,
அத்தேர்தல் காலதாமதமாவது இன்னும் விமர்சனங்களையே உருவாக்குகின்றது.
எனவே கட்சியும் சமூகமும் எப்படிப்போனாலும்
பருவாயில்லை என்ற நிலையில், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாத இப்படிப்பட்ட
பதவி வெறி பிடித்தலையும் சுயநலவாதிகளுக்கு மத்தியில் தலைவரினால் மட்டும் தனித்து நின்று
முடிவெடுப்பதென்பது ஒரு பாரிய சவாலாகும். இதனை புரிந்துகொள்ளாமல் தலைவரை மட்டும்
விமர்சிப்பதானது காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகும்.
எனவேதான் சமூகம்,
கட்சிக்கொள்கை என்பதனை மறந்து எம்பி பதவி என்னும் எலும்புத்துண்டுகளுக்கு
ஆசைப்பட்டு கட்சியை அளிக்கத்துடிக்கும் சுயநலவாதிகளுக்கு மத்தியில் கட்சியையும்,
தலைவரையும் காப்பது போராளிகளின் கையிலேயே தங்கியுள்ளது
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது


0 Comments