இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அமெரிக்க வர்த்தக சம்மேளனம் (AmCham) ஆகியன இணைந்து கொழும்பில் ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தகக் கண்காட்சி - 2015 ( US Trade Show -2015 ) ஒன்றை நடத்தி வருகின்றன.
US Trade Show 2015 கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வை இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷெப் ஆரம்பித்து வைத்தார்.
இதேவேளை, ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தகக் கண்காட்சியை நேற்று கலதாரி ஹோட்டலில் திறந்து வைத்து உரையாற்றிய இலங்கை மற்றும் மலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷெப் தெரிவிக்கையில்,
அமெரிக்கா இலங்கையில் முதலிடுவதற்கு இதுவே தகுந்த காலம். வர்த்தக கொடுக்கல் - வாங்கல்களை இலகுபடுத்தி தரமான பொருட்களை விநியோகிக்க அமெரிக்க அரசு எதிர்பார்த்துள்ளது.
இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக வியாபாரம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. அமெரிக்காவின் உற்பத்தி பொருட்களுக்கு இலங்கையில் சிறந்த கேள்வி நிலவுகின்றது.
தரமான பொருட்களை வழங்க வேண்டுமென்பதிலும் அமெரிக்கா அரசு உறுதியாகவுள்ளதுடன் பொருட்களின் வர்த்தகப் பரிமாற்றத்தில் சிறந்த நுட்பங்களை கையாண்டு இரு நாடுகளுக்குமிடையிலான நிலையான உறவுகளை பேண இதுவே தகுந்த காலமாகும்.
அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் சிறந்த சமூகப் பொறுப்புணர்வோடு செயற்பட வேண்டியதோடு புதிய வர்த்தகப் பொருட்களை அறிமுகப்படுத்தி தரமான சந்தையாக இலங்கையை மாற்றமடைய செய்ய வேண்டும். இதற்கென பல்வேறு முதலீடுகளை அறிமுகப்படுத்தவும் எதிர்ப்பார்த்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.










0 Comments