செல்ல நாய், பூனைகளை பலரும் மணந்து கொண்டாலும், பிடித்த உணவை இன்னும் யாரும் மணக்கும் முயற்சியில் இதுவரை இறங்கவில்லை. உலகம் முழுவதிலும் எளிதாக யாரையும் நட்பாக்கிக்கொள்ள உணவுப் பழக்கத்தைப் பற்றி பேசினாலே போதும்.
இந்நிலையில், உலகில் பலருக்கும் பிடித்தமான பீட்சாவை ஒரு ரஷ்ய இளைஞர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளார். ரஷ்ய நாட்டின் டாம்ஸ்க் நகரில் வசிக்கும் இந்த இளைஞரின் திருமண விருப்பத்தை அரசோ, தேவாலயமோ அனுமதிக்காததால் எளிமையான முறையில் பீட்சா கடை ஒன்றில் திருமணம் நடந்தேறியது.
இந்த திருமணத்தை நடத்திய பீட்சா கடையினரே ஒரு சான்றிதழையும் தயாரித்து புதிய தம்பதிக்கு வழங்கியுள்ளனர். பெயர் வெளியிடப்படாத இந்த இருபத்து இரண்டு வயது ரஷ்ய இளைஞர் ‘பீட்சாவை நான் விரும்புகிறேன், அது நிச்சயமாக என்னை ஏமாற்றாது என நம்புகிறேன். அதனால்தான் ‘தின் கிறிஸ்பி பீட்சாவை’ மணந்துகொண்டேன்’ என்றார்.
நம் ஊரிலும் மனித உறவுகளின் மீது நம்பிக்கை இழந்த பலரையும் திருமணம் செய்துகொள்ள பெற்றோர் வற்புறுத்துகின்றனர். ஒருவேளை மணந்தே ஆக வேண்டிய கட்டாயம் வந்தால் எதிர்காலத்தில் இதுபோன்ற வினோத திருமணங்கள் அரங்கேறுமோ..?
0 Comments