பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்கு பதிலாக பண வவுச்சர் வழங்குவதற்கு கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம் எதிர்காலத்தில் சீருடை வழங்குவதை நிறுத்தும் திட்டமாகுமென இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்கு பதிலாக பண வவுச்சர் வழங்குவதற்கு கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம் முறையான திட்டமொன்றை அமைப்பதற்கு கல்வி அமைச்சினால் முடியாமல் போயுள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதுடன் மாணவர்களுக்கு சீருடைவழங்கும் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ளும் முயற்சியாகவும் இருக்கின்றது.
கல்வி அமைச்சின் இந்த தீர்மானத்தின் பின்னணியில் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு சீருடைவழங்குவதை முற்றாக நிறுத்துவதற்கான திட்டமொன்று இருப்பதாகவே நாங்கள் சந்தேகிக்கின்றோம். இதற்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மதிய உணவு திட்டமும் இவ்வாறே பல முறைமைகளுக்கு மாற்றப்பட்டு இறுதியில் அதனை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கல்விஅமைச்சு வழங்கும் பண வவுச்சர் மூலம் மாணவர்களுக்கு போதுமானளவு தரமான அளவு சீருடையை பெற்றுக்கொள்ளலாம் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது? இதன்காரணமாக பண வவுச்சரின் பெறுமதி,சீருடையின் தரம் மற்றும் தேவையான அளவு போன்ற விடயங்களை கருத்திற் கொண்டு மாணவர்களும் பெற்றோர்களும் திறந்த சந்தைகளில் அலைந்து திரியவேண்டிய நிலையும் ஏற்படும்.
அத்துடன் கல்வி அமைச்சு வெளிநாட்டு உற்பத்தியாளர்களுடன் மறைமுகமாக செய்துகொண்ட ஒப்பந்தமாகவும் இது இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகின்றது. கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைத்துணி வழங்கி உயர்தரத்தை ஏற்படுத்தி உள்ளூர் உற்பத்தியாளர்கள் வெற்றி கண்டுள்ளனர்.
எனவே கல்வி அமைச்சின் இந்த தீர்மானத்தை எமது சங்கம் வன்மையாக எதிர்ப்பதுடன் மாணவர்களுக்கு தரமான சீருடையை பெற்றுக்கொடுப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்


0 Comments