பொலிஸ் நிலையத்தில் இளம் ஜோடியினரை, பொலிஸார் சுற்றி வளைத்து தாக்கும் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மும்பையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆண்மற்றும் பெண் பொலிஸ் அதிகாரியும் அந்த ஜோடியை இரத்தம் வரும் அளவுக்கு அடித்து துன்புறுத்தியுள்ளனர். இந்த காணொளி பல்வேறு இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருவதுடன் மும்பைவாசிகளிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த தொண்டு நிறுவன ஊழியர் ஒருவரே , இதனை தனது கையடக்கத்தொலைபேசியில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம், " அந்த இளம் ஜோடியினர் காவல் நிலையத்திற்குள் கொண்டு வரப்படுவதற்கு முன்னதாக, அந்த காவல் நிலையத்திற்கு வெளியே சண்டையிட்டுக்கொண்டிருந்துள்ளனர். அதனை பார்த்த அந்த காவல் நிலைய உத்தியோகத்தரொருவர் அந்த பெண்ணிடம், " நீ துன்புறுத்தப்படுகிறாயா? " எனக் கேட்டார்.
உடனே அந்த பெண், 'இது எங்களது சொந்த விஷயம்... பொலிஸ் தலையிடுவதை விரும்பவில்லை' எனக் கூறியுள்ளார். இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த அந்த உத்தியோகத்தர், அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்து சென்றார். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் தனித்தனியாக அமர வைக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் காவல் நிலைய சூழல் அந்த இளம்பெண்ணை அச்சமூட்டவே, அவர் பயந்து கத்த தொடங்கினார்.
இதனையடுத்து அங்கு இருந்தபொலிஸார் அந்த பெண்ணை அடிக்க தொடங்கினர். ஆண் காவலர்கள் மட்டுமல்லாது பெண் காவலர்களும் சேர்ந்துகொண்டு அடித்து உதைத்தனர். இதனையடுத்து அந்த பெண் தனது ஆண் நண்பரிடம் உதவி கேட்டு அலறவே, அவர் ஓடிவந்துள்ளார். உடனே பொலிஸார் அவரையும் பிடித்து சரமாரியாக அடித்தனர். அதே நேரத்தில் அந்த பெண்ணும் அடி தாங்க முடியாமல் அலறினார். ஆனால் யாருமே கருணை காட்டவில்லை. அவர்கள் இருவரையும் சட்டவிரோதமாக சிறைக்குள் அடைத்தனர்" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
இந்த காணொளி இணையத்தில் தீயாக பரவியதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து காவல்துறை உயர்பீடம் நடவடிக்கை எடுத்துள்ளது.
0 Comments