வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இலங்கை வெற்றி பெற்று 2–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
3 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் கொழும்பில் நேற்று பகல்–இரவாக நடந்தது. வெஸ்ட்இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 14.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 40 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
மழைவிட்டு மீண்டும் போட்டி தொடங்கிய போது ஆட்டம் 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது. வெஸ்ட்இண்டீஸ் அணி 26 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்தது. ஆந்த்ரே ரஸ்சல் 24 பந்தில் 41 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) கேப்டன் ஹோல்டர் 13 பந்தில் 36 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), டாரன் பிராவோ 38 ரன்னும் எடுத்தனர். லக்மல் 3 விக்கெட்டும், அஜந்தா மெண்டிஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
டிக்வொர்த் லீவிஸ் விதிப்படி இலங்கை அணிக்கு 26 ஓவரில் 163 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தில்சான் அதிரடியாக விளையாடி அணியை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு சென்றனர். அவர் 32 பந்தில் 59 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 6 பவுண்டரியும், 3 சிக்சரும் அடங்கும். அப்போது ஸ்கோர் 104 ஆக இருந்தது.
இதனால் இலங்கை எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெஸ்ட்இண்டீஸ் வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் இலங்கை விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.
23.4–வது ஓவரில் இலங்கையின் 9–வது விக்கெட்டான மலிங்கா ஆட்டம் இழந்தார். அப்போது 14 பந்தில் 11 ரன் தேவை. கைவசம் 1 விக்கெட் இருந்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடைசி விக்கெட்டுக்கு அஜந்தா மெண்டீசுடன், லக்மல் ஜோடி சேர்ந்தார். லக்மல் தான் சந்தித்த முதல் 2 பந்தில் ரன் எடுக்கவில்லை. இதனால் 12 பந்தில் 11 ரன் தேவை என்ற நிலை இருந்தது. சார்லஸ் வீசிய 25–வது ஓவரின் முதல் 4 பந்தில் 6 ரன் கிடைத்தது. நோபால் மூலம் கிடைத்த பிரீஹிட்டில் சிக்சர் அடித்து மெண்டீஸ் அணியை வெற்றி பெற வைத்தார்.
இலங்கை அணி 24.5 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெண்டீஸ் 20 பந்தில் 21 ரன் எடுத்தார். சுனில் நரீன் 3 விக்கெட்டும், பிராத்வெயிட், கார்ட்டர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை 1–0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2–வது போட்டி 4–ந்தேதி நடக்கிறது.
0 Comments