பயங்கரவாதம் தொடர்பான விஷயத்தில் பாகிஸ்தான் தலைவர்களின் மவுனம் குறித்து, பெண் கல்விக்காக போராடி வரும் மலாலா யூசுப்சாய் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடியதால் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகி மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டு வந்தவர் மலாலா யூசுப்சாய். இந்தியாவின் கைலாஷ் சத்யார்தியுடன் இணைந்து இளம் வயதில் அமைதிக்கான நோபல் பரிசை இவர் பெற்றுள்ளார்.
தொடர்ந்து தீவிரவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்து வரும் இவர், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது, பயங்கரவாதம் தொடர்பான விவகாரங்களில் பாகிஸ்தான் தலைவர்கள் மவுனமாக இருப்பது குறித்து கேள்விகள் எழுப்பினார். மேலும், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய மிகவும் விரும்புவதாகவும் கூறினார்.
“நான் எனது வழியில் தொடர்ந்து செயல்படுவேன். எனது இந்த செயல்களுக்கு மிகப்பெரிய தூண்டுகோலாக இருந்தவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோதான். பெண்கள் தலைமைப் பதவிக்கு வர முடியும் என்பதை பலர் மறுத்தனர். ஆனால், முடியும் என்பதை அவர் (பெனாசீர் பூட்டோ) காட்டினார்” என்றும் மலாலா கூறினார்.
பூட்டோ போன்று பாகிஸ்தான் பிரதமராக விரும்புகிறீர்களா? என்று கேட்டதற்கு, ‘மக்கள் வாக்களித்தால் பிரதமர் ஆவேன். ஆனால், குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைப்பதற்கு உதவி செய்வதே என் கனவு. சமூகத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு பல வழிகள் உள்ளன’ என்றார்.
0 Comments