ஆரவாரமின்றி அமைதியாக எம் ஆசான்கள்
ஆல் உயர ஆளுமைகளை ஆக்கிவிட்டு
அடிமரத்து வேராய்
அமைதியாக எம் ஆசான்கள்
சாறுரிந்து சத்தூட்டி
வானுயர வளர்த்துவிட்ட
சத்தமற்ற வேர்களாய் எம் ஆசான்கள்
நீரிலும் சேறிலும் தம் நிலையூன்றி
எம் தலை தூக்கவுதவிய
நல்வேர்களாய் எம் ஆசான்கள்
வெண்கட்டி திரியெரித்து
பேதைமை இருளோட்டிய
தீபமாய் எம் ஆசான்கள்
பேனா மை தெளித்து
கடதாசி நிலமுழுது
எழுத்து விதையிட்ட
உழவனாய் எம் ஆசான்கள்
பண்பு விளைநிலத்தில்
அன்பு நீர் பாய்ச்சி
பிரம்பால் களை பிடுங்கிய
விவசாயியாய் எம் ஆசான்கள்
தோடுடைத்து தொலியுரித்து
வேர் இறங்க உதவும்
நற்றரையாய் எம் ஆசான்கள்
தளிர்க்கும் கன்று தலை தூக்கி
விருட்சமாகி நிழல் பரப்ப
கொளுகம்பாய் எம் ஆசான்கள்
மரம் நோக்கும் உலகு
அதன் வேர் நோக்குவதில்லை
வெளிச்சம் காணும் உலகு
எரியும் திரி காண்பதில்லை
விளைச்சல் காணும் உலகு
விதைத்த விவசாயி காண்பதில்லை
விதையுடைத்த முளை காணும் உலகு
விளைய வைத்த பூமி காண்பதில்லை
நிழல் பரப்பும் விருட்சம் காணும் உலகு
அது சாய்ந்து வளர்ந்த கொளுகம்பு காண்பதில்லை
- இம்தாத் பசர் -
0 Comments