ஜனாதிபதி மாளிகை போன்று அலரிமாளிகையில் நிலக்கீழ் சொகுசு மாளிகை எதுவும் அமைக்கப்பட்டிருக்கவில்லை என்று அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த நிலக்கீழ் அதிசொகுசு மாளிகையொன்று அண்மையில் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இந்த மாளிகை அமைக்கப்பட்டிருந்தது.பொதுமக்களிடையே அச்செய்தி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மாளிகையில் மட்டுமன்றி அலரி மாளிகையிலும் அவ்வாறான நிலக்கீழ் சொகுசு மாளிகைகள் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கிண்டலாக பதிலளித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தென்பிராந்திய அபிவிருத்தி அமைச்சரும், பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான துணை அமைச்சருமான சாகல ரத்நாயக்க, அலரிமாளிகையில் அவ்வாறான பதுங்கு குழி மாளிகைகள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் காலத்தில் அவ்வாறான நிலக்கீழ் மாளிகைகள் அமைக்கப்படவில்லை என்றும், எனினும் மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தேடிப் பார்க்க வேண்டியிருப்பதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.


0 Comments