கிரீஸ் நாட்டில் அடைக்கலம் தேடிச் சென்ற இடத்தில் கடலில் மூழ்கி பலியான மூன்று வயது சிறுவனின் கோர மரணத்தை கண்டித்து மணல் ஓவியம் தீட்டியுள்ள பிரபல மணல் ஓவியர் சுதர்சன் பட்நாயக், ’மனிதநேயம் கரைஒதுங்கிப் போனது. வெட்கம், கேவலம், அவமானம்’ என இந்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார்.
சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து சிரியாவின் கொம்பானி நகரில் இருந்து கடந்த ஆண்டு துருக்கி சென்ற அப்துல்லா குர்தி என்பவர், தனது மனைவி ரெஹான், மூத்த மகன் காலிப்(வயது 5), இளைய மகன் அய்லான்(3) ஆகியோருடன் கனடா நாட்டில் அடைக்கலம் புக அனுமதி கேட்டார். அது நிராகரிக்கப்பட்டது. இதனால் கிரீஸ் நாட்டுக்கு கள்ளப்படகில் சென்று அங்கிருந்து ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் தஞ்சம் புகுந்தவிடலாம் என்று கருதினார்.
துருக்கி கடல் பகுதியில் மனைவி குழந்தைகளுடன் திருட்டு படகில் பயணம் செய்வதற்காக மூன்றரை லட்சம் ரூபாயை(5860 அமெரிக்க டாலர்) அப்துல்லா குர்தி கொடுத்து இருக்கிறார். பாதுகாப்பற்ற கடல் பயணத்தை மேற்கொண்டபோதுதான் அப்துல்லா குர்தி தனது மனைவி குழந்தைகளை ராட்சத கடல் அலைகளுக்கு காவு கொடுக்க நேர்ந்தது. அதுவும் பிஞ்சுக் குழந்தை அய்லான் கடற்கரையில் முகம் புதைந்த நிலையில் பிணமாக கிடந்த புகைப்படம் உலகையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.
இந்த சம்பவத்துக்கு பின்னர், இரண்டே நாட்களில் அகதிகளாக வந்தேறும் மக்களுக்கு நான் இடம் தருகிறேன், நானும் இடம் தருகிறேன் என ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் போட்டிப் போட்டுக்கொண்டு முன்வந்துள்ளன.
இந்நிலையில், இந்த மாபெரும் மாற்றத்துக்கான மூலக்காரணமாக அமைந்துவிட்ட சிறுவன் அய்லானின் மரணத்தை இந்தியாவைச் சேர்ந்த ஒரு கலைஞர் மணல் ஓவியமாக பதிவு செய்துள்ளார்.
ஒடிசாவின் பூரி கடற்கரைப் பகுதியில் பிரபல மணல் ஓவியக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் என்பவர், கரை ஒதுங்கிக் கிடந்த சிறுவன் அய்லான் குர்தி பிணமாக கிடக்கும் காட்சியை மணல் ஓவியமாக உருவாக்கியுள்ளார். அந்த ஓவியம் காண்பவர்களின் நெஞ்சை கசக்கிப் பிழியும் நிலையில், அந்த ஓவியத்துடன் அவர் செதுக்கி இருக்கும் வாசகங்கள் மனிதநேயத்தை மறந்த உலக நாடுகளுக்கு சரியான சவுக்கடியாகவும் அமைந்துள்ளது.
(Humanity Washed Ashore / Shame, Shame, Shame) மனிதநேயம் கரைஒதுங்கிப் போனது. வெட்கம், கேவலம், அவமானம் என அவர் இந்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார்.
0 Comments