மனிதனுடைய ஆறறிவை அதற்கும் மேலான நிலைக்கு பண்படுத்தி கொண்டுசெல்வது கல்வியறிவு.
குறுகிய காலத்தில் பெரிய அளவிலான அறிவு வளத்தை மனிதனுக்குள் புகட்டக் கூடியது பள்ளியறிவு.
உலகில் எல்லோரும் கற்றவர்களாக, அடிப்படை எழுத்தறிவை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு முயற்சியாகவே சர்வதேச அளவில் இந்த எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகிறது.
இது 1965 செப்டம்பர் 17 ல் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு. 1966 செப்டம்பர் 8 ல் முதன்முதலாக கொண்டாடப்பட்டது.
கற்றவரே கண்ணுடையார் கல்லாதவர்களுக்கு முகத்தில் இருப்பது கண்கள் அல்ல இரண்டு புண்கள் என கல்வியின் அவசியத்தை தெய்வப்புலவர் திருவள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார்.
கல்வியறிவு இல்லாதவர்கள் படித்த சமூகத்தினரோடு வாழ்ந்தாலும் கூட கண்ணுக்கு தெரியாத அறியாமை சுவர் கற்றவர்களோடு கலக்கமுடியாமல் அவர்களை தடுத்தே வைக்கிறது.
பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற செயல்களால் சந்தர்ப்ப சூழலாலும், உணர்ச்சிவசப்படுவதாலும் குற்றவாளியாவது பெரும்பாலும் படிக்காதவர்களே.
தண்டனை பற்றிய விழிப்புணர்வு பெறாததும், அணுகுமுறை குளறுபடிகளும் கூட படிப்பறிவு இல்லாததால் இவர்களுக்கு ஏற்படுகிறது.
சர்வதேச எழுத்தறிவு தினத்தைப் பற்றி யுனெஸ்கோ பொதுசெயலாளர் கூறுகையில், புதிய தொழில்நுட்பங்களும் மொபைல் போன்களும் எழுத்தறிவு வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
கல்வி வளர்ச்சிக்கு நமது மூலதனத்தை அதிகப்படுத்த வேண்டும். நம் முயற்சி மற்றும் சக்தியை இரு மடங்காக்க வேண்டும்.
அரசியல் மற்றும் நிதி வளர்ச்சியில், நிலையான ஒரு முன்னேற்றத்தை அடைய முடுக்கிவிடும் சக்திகளில் ஒன்றாக எழுத்தறிவு நிரூபித்திருக்கிறது.
இதில் இன்னும் புதிய அணுகுமுறையோடு நம் பயணத்தை தொடங்க வேண்டும் என அமெரிக்கா மற்றும் உறுப்பு நாடுகளுக்கு நான் கோரிக்கை வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அரசு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், சமூக அமைப்புகள், ஆசிரியர்கள் மாணவர்கள், நிபுணர்கள் என எழுத்தறிவு தினம் உலகம் முழுவதாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒரு சமுதாயத்துக்கு ஒரு நாட்டுக்கு நிலையான வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் எல்லா துறைகளிலும் கொண்டுவர வல்லது. பெரு நிர்வாகங்களுக்கு பின்னணியாக இருப்பதும் எழுத்தறிவு தான்.
கல்லாத ஒரு மனிதனின் பகுத்தறிவு சீர்படுத்தப்படாததால், சில பிரதிபலிப்புகளில் தாழ்ந்தே தோன்றுகிறான்.
சமயங்களில் கல்லாத ஒரு மனிதனின் அறிவுப்பூர்வமான செயல்கள் கூட இந்த சமூகத்தல் அங்கீகரிக்கப்படுவதில்லை.
கல்வி என்பது பல மனிதர்களுடைய சிந்தனைகளும் அனுபவங்களும் சேர்ந்த ஒரு தொகுப்பு. அக்கல்வி, இந்த உலகின் மீதான புரிதலில் ஒரு நம்பிக்கையை ஒருவனுக்கு கொடுக்கிறது.
அத்தகைய கல்வியறிவை பெற்ற மனிதனுடைய சுயஅறிவும் சேர்ந்த வெளிப்பாடே வளமுடையதாக இருக்கும் என்று இந்த சமுதாயம் நம்புகிறது.
ஆறறிவு எனும் அளப்பறியா சக்தியை, கல்வி எனும் கண்டுபிடிப்பால்தான் உலக முன்னேற்ற முனைப்பில் கட்டுப்பாட்டோடு செலுத்தமுடிகிறது.
தனியொரு மனிதன் கல்லாவிடில், அவனுடைய பெற்றோரும் அரசாங்கமும் பொறுப்பில் நழுவிய குற்றவாளிகள்.
படிக்காதவன் படித்தவனை வியப்பாக கவனிக்கிறான். படித்தவன் கல்வியை முக்கிய உறுப்பாகவே கருதுகிறான்.

0 Comments