PPAF ஊடக அறிக்கை
புத்தளம் தொகுதி வாழ் மக்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும், வணக்கம்
புத்தளத்தில் ஓர் ஆரோக்கியமான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும் நோக்குடனும், 26வருடமாக நாம் இழந்திருந்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினைப் பெற வேண்டும் என்ற இலட்சியத்துடனும் எமது அமைப்பு செயற்பட்டு வந்ததை தாங்கள் அறிவீர்கள்.
மேற்படி இலக்கை அடைவதற்காக மக்களிடத்தில் கருத்துத் தெளிவை ஏற்படுத்த கடந்த 2 வருட காலமாக பல மட்டங்களிலும் முயற்சித்து வந்துள்ளோம். கடந்த ஜனாதிபதி தேர்தலில் இந்நாட்டில் நல்லாட்சி ஏற்படவேண்டுமென்பதற்காக பல்வேறு சவால்களுக்கு மத்தியில் எமது அரசியல் பங்களிப்பினை வழங்கினோம். அதேபோன்று நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சிறு கட்சிகளையும் செல்வாக்குள்ள அரசியல்வாதிகளையும் இணைத்துக்கொண்டு களத்தில் இறங்க பெரு முயற்சி செய்தோம். எனினும் சுயநல அரசியல்வாதிகளும் வெவ்வேறு பின்புலங்களுடனும் இத்தேர்தல் களத்தில் குதித்தவர்கள் எங்கள் முயற்சிக்கு பெரும் சவாலாக இறுதி வரை செயற்பட்டுவந்தனர்.
எமது முயற்சிகளையும் ஒரு எம்.பியை பெற்றுக்கொள்வதற்காக நாம் முன்வைத்த வியூகத்தை மக்களிடத்தில் சரியாகச் சென்றடையாது தடுப்பதற்கான ஜனநாயக விரோதச்செயல்களும் பல்வேறு துரோகத்தனங்களும் திட்டமிட்ட அடிப்படையில் இடம்பெற்றுள்மை தற்பொழுது தெளிவாகியுள்ளது.
எவ்வாறான சவால்களை எதிர்கொண்டாலும் நாங்கள் தொடர்ந்தும் எமது இலக்கை அடைந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட உறுதிபூண்டுள்ளோம்.
எங்கள் முயற்சியை விளங்கி எமது பயணத்தில் கைகோர்த்து 9547 வாக்குகளை அளித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். எமக்கான ஒரு பாராளுமன்ற பிரதிநிதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தூய நோக்கத்துடன் எமக்கு ஒத்துழைப்பு நல்கிய உள்நாட்டு வெளிநாட்டு நண்பர்கள் அனைவருக்கும் இறைவன் நற்கூலிகளை வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்து தொடர்ந்தும் எமது நல்லாட்சி பண்புமிக்க அரசியல் வேலைத்திட்டங்களில் உங்களின் ஆதரவுகளையும் ஆலோசனைகளையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.
எல்லாம் வல்ல இறைவன் எமது துாய பணிகளை அங்கீகரிப்பானாக.!
நன்றி
இவ்வண்ணம்
ஷூறா சபை மற்றும் செயற்குழு


0 Comments