அம்பாந்தோட்டையில் உள்ள மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்தல சர்வதேச விமான நிலையத்தின் களஞ்சிய சாலைகளில், யால போக அறுவடையின் போது கொள்வனவு செய்யப்படும் நெல்லை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு, இலங்கை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சிறிலங்கன் எயர்லைன்ஸ் மற்றும் எவியேசன் நிறுவனம் ஆரம்ப அனுமதியை வழங்கியுள்ளது.
தமக்கான தேவை முடிந்த பின்னர், மத்தல விமான நிலையத்தின் களஞ்சியசாலைகள் நல்ல நிலையில், மீள ஒப்படைக்கப்படும் என்று நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் திசநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மத்தல விமான நிலையத்தை மூடவோ, அதனை நெற்களஞ்சியமாக மாற்றவோ அனுமதிக்கப் போவதில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நெற்களஞ்சியமாக மாற்றும் முடிவு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டிருந்தால் அதுபற்றி அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் பேசி, தடுத்து நிறுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த விமான நிலையமும் ஆரம்பத்திலேயே வருவாயை அள்ளிக் கொடுப்பதில்லை என்றும் காலப் போக்கில் தான் அது வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது சீனாவிடம் பெறப்பட்ட 210 மில்லியன் டொலர் கடன் மூலம் இந்த விமான நிலையம் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


0 Comments