எங்களுக்கு இலங்கைக்குள் அமைதியான முறையில் தேர்தல் ஒன்றினை நடத்த முடியும் என்பதை இம்முறை பாரளுமன்றத் தேர்தலானது உலகுக்கு சொல்லியுள்ளது. 2012 ஆம் ஆண்டு முதல் இது வரை 11 தேர்தல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அவற்றில் மிக அமைதியாகவும் சுமுகமாகவும் நடை பெற்ற தேர்தல் இதுவே என பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தெரிவித்தார்.
எனவே அடுத்து வரும் ஒரு வார காலத்துக்கு தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் தேர்தலின் பின்னரான காலப்பகுதியிலும் வன்முறைகள் அத்துமீறல்கள் இன்றி அமைதியான சூழலை பேணவும் சட்டம் ஒழுங்கினை அமுல் செய்யவும் பொது மக்கள் தொடர்ந்தும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பொலிஸ் தலமையக கேட்போர் கூடத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் தலைமையில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன ( நிர்வாகம் மற்றும் தேர்தல் விவகாரம்), மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் ம அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் பெரேரா (பொலிஸ் உத்தியோகத்தர்கள் விவகாரம்) மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர ஆகியோரின் பங்கேற்புடன் இந்த செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இதன் போது பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தொடர்ந்து தெரிவித்ததாவது, நேற்று ( நேற்று முன் தினம்) இடம்பெற்ற தேர்தலே இலங்கையில் இடம்பெற்ற தேர்தல்களில் மிகவும் அமைதியான தேர்தலாக கருதப்படுகின்றது. 2012 முதல் இதுவரை 11 தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. 9 மாகாண சபை தேர்தல்கள், 1 ஜனாதிபதி தேர்தலுடன் இடம்பெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் ஆகியன அதில் அடங்கும். இதில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலே மிகவும் அமைதியாக இடம்பெற்றுள்ளது.
இந்த தேர்தலை அமைதியாகவும் சுமுகமாகவும் நடத்தி முடிக்க பொலிஸார் விசேட அர்ப்பணிப்புடன் கூடிய கடமையினை செய்துள்ளனர். அத்துடன் அபேட்சகர்கள், வாக்காளர்கள், பொது மக்கள், சுயேச்சை குழுக்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் என அனைவருக்கும் நான் எனது நன்றியை தெரிவிக்கின்றேன்.
எம்து கடமைகளை நிறைவேற்ற அவர்கள் அளித்த ஒத்துழைப்பையும் நான் மெச்சுகின்றேன். உண்மையில் இந்த தேர்தலில் பொலிஸார் தேர்தல்கள் சட்டத்தை நிலை நாட்ட தொடர்ச்சியாக சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டமையே இம்முறை அமைதியான தேர்தல் ஒன்றினை நடத்த பெரிதும் உதவியது.
இம்முறை தேர்தல்கள் முறைப்பாடுகளை விட பொலிஸாரின் நடவடிக்கை காரணமாக கைதுசெய்யப்பட்டவர்களே அதிகமாகும். தேர்தல்கள் தொடர்பில் எமக்கு மொத்தமாக 313 முறைப்பாடுகளே கிடைத்திருந்த நிலையில் 405 சுற்றி வளைப்புக்களை நாம் மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதன்படி நாம் 799 பேரை கைதுசெய்துள்ளதுடன் 251 வாகனங்களையும் கைப்பற்றியுள்ளோம். கைப்பற்றப்பட்ட வாகனங்களில் கையளிக்கப்படாத அரச வாகனங்களும் உள்ளடங்கும். இதனை விட வாக்களிப்பு தினமான நேற்று மட்டும் 48 பேர் கைது செய்யப்பட்டதுடன் 18 வாகனங்களும் மீட்கப்பட்டன.
இந் நிலையில் தேர்தல் சட்டத்தை மதித்து இது வரை சட்டம் ஒழுங்கை காக்க பொலிஸார் எடுத்த முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்கள், தேர்தலின் பின்னரான காலப்பகுதியிலும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோருகின்றேன்.
தேர்தல் காலப்பகுதியில் பொலிஸார் தமது உயிரையும் துச்சமென மதித்து கடமை செய்ததாலேயே இவ்வாறான சுமுக தேர்தலை நடத்த முடிந்தது. வெலிகமை பகுதியில் பொலிஸார் ஒருவரின் கை இரு வேறு துண்டுகளாக செல்லும் அளவுக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
தேர்தல் சட்டத்தை காக்க சென்ற வேளை இடம்பெற்ற இச்சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. அவரது கையை மீண்டும் பொருத்திய வைத்தியர்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன். தேர்தல் சட்டத்தை நிலை நாட்டிய கான்ஸ்டபிள் தரம் முதல் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தரம் வரையிலான அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் மெச்சத்தக்கவர்கள். எனவே இதே சுமுகமான நிலைமை தேர்தலின் பின்னரான காலப்பகுதியிலும் நீடிக்க வேண்டும்.
அதனால் வெற்றியை கொண்டாடுவோர் அதனை மிக அமை தியாக கொண்டாடுங்கள். மற்றவரின் மனது புண் படாது, அவர்களின் உரிமைகளையும் மதிக்கத் தக்கதாக உங்கள் கொண்டாட்டங்கள் அமையட்டும். தேர்தலின் பின்னரான ஒரு வார காலப்பகுதியில் ஊர்வலங்கள், பேரணிகளை நடத்துவதை தவிர்த்து தேர்தல் சட்டங்களை நிலை நாட்ட ஒத்துழைப்பு வழங்குங்கள். என்றார்.


0 Comments