Subscribe Us

header ads

வை.எல்.எஸ். பாராளுமன்றம் செல்வது காலத்தின் தேவை

வை.எல்.எஸ் என்ற பெயரே இன்று முஸ்லிம் சமூகத்திலுள்ள புத்திஜீவிகளால் அதிகம் பேசப்படுகின்றது. இந்தப் பெயரை கடந்த அரசாங்க காலத்திலும் 100 நாள் நல்லாட்சி அரசாங்க காலத்திலும் மிகப் பெரிய ஆளுமையாகவே காண்டார்கள். ஆனால் இன்று இப்பெயரை முடிந்த வரை ஆளும் வர்க்கம் வரலாற்றில் இருட்டடிப்பு செய்கிறது. வெறுமனே தேசிய பட்டியலுக்கு ஆசைப்பட்டவர், கட்சிக்கு துரோகம் செய்தவர் என்ற அடைமொழிக்குள் வை.எல்.எஸ் என்கின்ற ஆளுமை சிறையிடப்படுகின்றது. ஆயினும் அனைத்தையும் மீறி முக்கிய அரசியல் பிரமுகர்களின் மன வானில் வை.எல்.எஸ் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்.

காரணம், அவரது ஆளுமைத்திறன். வை.எல்.எஸ் ஆளுமை இன்றைய பாராளுமன்றத்திற்கு அத்தியாவசியமானவராகிறார். இதுகுறித்து எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை முன்வைக்க இயலும். ஆயினும் இங்கே ஒன்றிரண்டை மட்டும் சுட்டிக்காட்ட விழைகிறேன்.
ஆளுமை என்பது ஆற்றல் நீரோட்டத்தோடு நீச்சலடிப்பதல்ல. எதிர்நீச்சல் போடுவதாகும். செக்கு மாடாக ஒரே வட்டத்தில் சுற்றிச் சுற்றி வருவதல்ல. உழவு மாடாக ஆழமாகவும் அகலமாகவும் உழ உதவுவதாகும். ஆளுமை என்பது தொலைநோக்கு கொண்டது. சுயநலம் இல்லாதது. விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருப்பது. இலட்சிய உறுதியோடு இருப்பது. துணிவோடு சாவல்களை சந்திப்பது. ஆழமான அறிவுத்தேடலும் விசாலமான மனசும் கொண்டிருப்பது. இவைகளுக்கு வை.எல்.எஸ் எடுத்துக்காட்டாக இருக்கிறார்.
ஏனெனில் கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளை தன்னால் முடியுமான வழிகளில் எதிர்நோக்கியவர். அவர் சார்ந்திருந்த கட்சியும் அக்கட்சித் தலைமையும் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும்போதெல்லாம் அதற்காக துணிவோடு குரல் கொடுத்தவர். உரிமைகளை முடியுமான வழிகளில் பெற்றுக் கொள்ள போராடியவர்.
இப்படிப்பட்வர்கள் எதிர்வரும் பாராளுமன்றத்திலிருப்பது சமூக நோக்கில் ஆரோக்கியமாகும். ஏனெனில், அமையப் போகின்ற பாராளுமன்றம் பல சட்டத்திருத்தங்களை உள்வாங்கவுள்ளது. அதேபோல் எத்தனையோ சட்டங்களை உருவாக்கவுள்ளது. அதுமாத்திரமா தொகுதிவாரி தேர்தல் முறையை அறிமுகப்படுத்தி அதற்காக இலங்கை பல தொகுதிகளாக பிரிக்கப்படப் போகிறது.
அவ்வாறு சட்டத்திருத்தம் கொண்டுவந்தாலும், சட்டமூலங்கள் அறிமுகப்படுத்தினாலும், தொகுதிவாரி தேர்தல் முறை அறிமுகப்படுத்தி எல்லை நிர்ணயம் செய்தாலும் உடனுக்குடன் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்கு தற்போது தெரிவாகியுள்ள எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வளவு பொருத்தம் என சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
விரல்விட்டு எண்ணக் கூடிய ஒருசிலர் இருக்கிறார்கள். அவர்களின் குரல் எப்படி ஒலிக்கப் போகிறது என்பது குறித்து பொறுத்திருந்துதான பார்க்க வேண்டும். ஆனால், கடந்த அரசாங்கத்திலிருந்த யாரும் குரல் கொடுப்பார்கள் என நான் நினைக்கவில்லை.
ஏனெனில், 18ஆம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தும்போது எமது அரசியல் தலைமைகள் உட்பட அனைவரும் தலையாட்டிகளாகத்தான் இருந்தார்கள். அதேபோல் கெஸினோ (சூதாட்ட) சட்டமூலம் கொண்டுவந்தபோதும் அதற்கு ஆதரவளித்தார்கள். ஆனால், அப்போதைய அரசாங்கத்திலிருந்த ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை மறுத்து வாக்களித்தார்கள். திவிநெகும சட்டமூலம் கொண்டுவந்தபோது அதற்கும் சமூக ரீதியாக சிந்திக்காமல் பேசா ஊமைகளாக இருந்தார்கள்.
கடந்த அரசாங்கத்தில் எங்களால் எதுவும் பேச முடியது இருந்தோம். எங்களால் எதுவும் செய்ய முடியாது கட்டி வைக்கப்பட்டிருந்தோம் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர்களே அவர்களின் வாயால் கூறியதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். இதுதான் எங்கள் பிரதிநிதிகளின் நிலைப்பாடு. அவர்களையே நாம் மீண்டும் மீண்டும் பாராளுமன்றம் அனுப்பியுள்ளோம். அது எமது சமூகத்தின் சாபக்கேடு.
நான் அறிந்த வகையில், இறுதியாக 19 ஆம் திருத்தச் சட்டம் மற்றும் 20 ஆம் திருத்தச் சட்டம் வந்தபோது இந்த வை.எல்.எஸ். தன்னால் முடியுமான வழிகளில் குரல் கொடுத்தார். இச்சட்டமூலம் தொடர்பான அனைத்து கூட்டங்களிலும் சமூகம் சார்ந்து பேசினார்.
அவரின் புவியியல், சனத்தொகையியல் மற்றும் சட்ட அறிவின் மூலம் உதித்த விடயமே அநுராதபுரத்திலும், குருனாகலையிலும் போட்டியிட்டால் முஸ்லிம் ஒருவரை பெற்றுக் கொள்ளலாம் என்ற விடயம்.
இப்படிப்பட்ட ஒரு ஆளுமை பாராளுமன்றம் செல்வது காலத்தின் தேவை. செயலாளர் ஒருவர் பாராளுமன்றம் செல்லக் கூடாது என்றால், ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் எங்கு இருக்கிறார்?. சுதந்திரக் கட்சியின் செயலாளர்தான் இன்றை ஜனாதிபதி அவர் கடந்த காலங்களில் எங்கிருந்தார்? இப்போதைய செயலாளர் எங்கு இருக்கிறார்?
இவைகளை ஒப்பிட்டு நோக்குகின்றபோது வை.எல்.எஸ் ஹமீத் போன்ற ஆளுமை பாராளுமன்றம் செல்வது காலத்தின் தேவை. எனவே, உரிய தலைமைகள் மற்றும் ஏனைய பிரதிநிதிகள் தேசிய பட்டியல் ஆசனத்தை சமூக நோக்கில் சிந்திப்பது முக்கியமாகும்.
(ஒருவர் வாழும்போது இவைகளை எழுதலாமா என பலமுறை யோசித்து சமூக நோக்கத்திற்காக இக்கட்டுரையை எழுதியுள்ளேன். உண்மையில் எனக்கும் இவருக்கும் அதிக தொடர்பு கிடையாது. நான் அவரை அறிந்தவன். அவரின் சிந்தனைகளை விளங்கியவன் என்பதால் இதனை எழுதுகிறேன் – தேசிய பட்டியல் விவகாரத்தை அந்தந்தத் தலைமை யாருக்குக் கொடுத்தாலும் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இராமனுக்குக் கொடுத்தாலுமே, இராவண்ணுக்குக் கொடுத்தாலுமே அல்லது அவர்களுடன் வந்த அணுமனுக்குக் கொடுத்தாலும் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், இன்றை சமூக நோக்கில் உரியவர்களுக்குக் கொடுப்பது பொருத்தமாகும்.)

-Mujibur Rahman-

Post a Comment

0 Comments