Subscribe Us

இனவாதத்துக்குக் கிடைத்த ‘சாட்டையடி’ !


ஒவ்வொரு ஐந்து வருட காலமும் நாட்டு மக்களின் தலையெழுத்தை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதை போன தடவை கண்டுணர்ந்த மக்கள் இந்தத்தடவை விழிச்சுக்கிட்டாங்க. அதே தவறு இந்தத் தடவை நிகழ்ந்தால் மறு தடவை கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒரு முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு மக்களுடையது.
பல்லின மக்கள் வாழும் இலங்கையில் இனவாதம் ஒரு அரசியல் ஆயுதம் என்று நம்பி ஒரு தடவைக்கு இரு தடவைகள் தோல்வி கண்டுள்ள மஹிந்த ராஜபக்ச தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வாரா இல்லையா என்பதை சற்றே பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமாக இருந்தாலும் அடிப்படையில் இலங்கையில் சகல இனத்தவர்களிடமும் தூங்கிக் கொண்டிருக்கும் இனவாதத்தைத் தட்டியெழுப்புவதும் மிக இலகுவானது என்பதற்கு ஞானசார – பொது பல சேனா – கோத்தபாய – மஹிந்த கூட்டணி வரலாற்றுச் சான்றாக இருக்கிறது.
பொது பல சேனாவின் ஞானசார சாதாரணமாக த்ரீ வீலரிலோ பஸ்சிலோ, சைக்கிளிலோ சென்று அடைய முடியாத இலக்கை 4×4 வாகனங்களில் சென்று அடைவதற்கு ஆட்சிபீடத்தின் நல்லாசி ஒன்றே காரணம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள தேர்தல் இனவாதத்திற்குத் தகுந்த சாட்டையடியை வழங்கியுள்ளது.
இது தனியாக முஸ்லிம்களின் வெற்றியெனக் கொண்டாடும் விடயமல்ல. இலங்கை மக்கள் சிந்தித்திருக்கிறார்கள், சிந்திக்கிறார்கள் என்பதே உணர்த்தப்படும் பாடம்.
30 வருட யுத்தத்தின் பின் அடைந்த நிம்மதியைத் தக்க வைத்துக் கொள்ள மாத்திரமன்றி நல்லாட்சி, நவீனத்துவம், அபிவிருத்தி, உலகமயமாக்கல், எதிர்காலம் என பல தரப்பட்ட கோணங்களில் மக்கள் மனம் சிந்திக்கத் தூண்டப்பட்டதன் விளைவாகவே நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகளை என்னால் பார்க்க முடிகிறது.
இந்தப் பொன்னான காலம் மலரும் என்று கடந்த டிசம்பர் வரை யாரும் யதார்த்தத்தில் நினைத்துப் பார்த்திருக்க வில்லை. இறைவனின் ஏற்பாட்டில் இரண்டு வருடங்கள் முன் கூட்டியே தேர்தலை நடாத்திய மஹிந்த ராஜபக்ச இலங்கையின் எதிர்காலத்துக்கு அவசியப்படும் ஜனநாயக மாற்றத்திற்கு அறிந்தோ அறியாமலோ ஒரு கருவியாகியிருக்கிறார்.
இன ஐக்கியம் என்பது வெறும் பேசு பொருளாக இன்றி நடைமுறைச் சாத்தியமாக மலர வேண்டுமாக இருந்தால் அதை அடிமட்ட மக்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விட அரச இயந்திரத்தில் செயற்படுத்துவது அவசியமாகிறது. இதை உணர்ந்ததாகவே இதுவரை மைத்ரி – ரணில் செயற்பாடுகள் இருப்பதால் ஓரளவு நம்பிக்கை! ஆனாலும் அதற்கான அழுத்தத்தைப் பெருக்கும் வரலாற்றுக் கடமை மக்களுக்கிருக்கிறது, அதற்காகத்தான் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது உணரப்பட வேண்டும்.
அரசியல் தலைமைகளிடம் தங்கியும் கெஞ்சியும் வாழ வேண்டிய சூழ்நிலையை மாற்றுவதே எஞ்சியிருக்கும் போராட்டம். சமூகச் சம நிலை பேணப்படுமாக இருந்தால், நாடெங்கிலும் பாரபட்சமற்ற அபிவிருத்தி, தொழில் விருத்தி, வாழ்க்கைச் சூழ்நிலை உருவாகுமாக இருந்தால் அரசியல் வாதிகள் உண்மையான மக்கள் பிரதிநிதிகளாக மாறுவார்கள்.
மாற்றம் அது தானாக வராது என்பதை உணர்ந்துள்ள மக்கள் அடுத்தடுத்து தீர்க்கமான முடிவுகளை முன் வைக்க வேண்டும், தண்டிக்கும் காலத்தில் தண்டிக்கவும் அரவணைக்கும் நேரத்தில் அரவணைத்தும் தட்டிக் கொடுக்க வேண்டும். உறங்கி விட வேண்டாம் இனி உள்ளூராட்சி முக்கியத்துவம் பெறும், உன்னிப்பாகக் கவனித்து இனவாதிகள் அம்பலப்பட்டது போல பிரதேசவாதம், மிதவாதத்தையும் துகிலுரித்து ஐக்கிய நாட்டைக் கட்டியெழுப்பப் பங்களிப்போம்!
ஜஸாகல்லாஹ்
இர்பான் இக்பால்

Post a Comment

0 Comments