தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கடைகளை அடித்து நொறுக்குகிறார்கள்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஒரு மதுபானக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் கடை ஊழியர் செல்வம் என்பவர் பலியானார். இதனால் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி அதிகாரிகள் மண்டல வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். நெல்லையில் நடந்த கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்ட மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மண்டலத்தில் சுமார் 1500 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது பற்றி ஆலோசித்தனர்.
பகல் நேரங்களில் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் பாதுகாப்பு இல்லை. எனவே அனைத்து கடைகளிலும் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டமிட்டுள்ளார்கள்.
இதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
0 Comments