-The Puttalam Times-
‘ஹஜ்’ எனும் அரபு சொல்லுக்கு ‘தரிசனப் பயணம்’ என்று பொருள். தனது வாழ்க்கையில் ஒரு முறையாவது சவுதி அரேபியா, மக்கா நகரில் அமைந்திருக்கும் புனித கஃபா ஆலயத்தைத் தரிசித்து, அதனை 7 முறை வலம் வந்து, வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதை ஒவ்வொரு முஸ்லிமும் பாக்கியமாகக் கருதுகின்றார். மேலும், ‘ஹஜ்’ இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையும் (வசதியுள்ளவர்களுக்கு) ஆகும்.
‘ஹஜ்’ கடமையுடன் தொடர்புபடும் வழிபாட்டு கிரியைகள் சுமார் 7,500 வருட வரலாற்றைக்கொண்டது. இபுறாஹிம் எனும் அல்லாஹ்வின் தூதர், அவருடைய மனைவி ஹாஜரா, அவர்களின் மகன் இஸ்மாயில் ஆகியோரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், ஹஜ் கிரியைகளின் போது நினைவு கூறப்படுகின்றது. உலகில் பல நூறாண்டுகளாக தொடர் அறுபடாமல் நடைபெறும் வழிபாடு ‘ஹஜ்’ எனக் கூறலாம்.
உலகின் பல பாகங்களில் இருந்தும் வருகைத் தரும் ஹஜ் பயணிகள், இஸ்லாமிய நாட்காட்டியின் 12-ஆம் மாதமாகிய ‘துல் ஹஜ்’ மாதம், பிறை 9–ஆம் நாள் ‘அரபா’ மலையடிவாரத்தில் ஒன்று கூடுவார்கள். மறுநாள் (பிறை 10) ஹஜ் பெருநாள் தினமாகும். உலகின் முதல் மனிதன் ஆதம் அவருடைய துணைவி ஹவ்வா இருவரும் சுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் பூமியில் சந்தித்துக்கொண்ட இடம் அரபா மலையடிவாரம் ஆகும்.
புத்தளத்தில் இருந்து புனித ஹஜ் கடமைக்காக செல்லும் பயணிகள் இன்று (26) காலை 7.00 மணியளவில் புத்தளம் பெரியபள்ளியில் இருந்து தமது பயணத்தை ஆரம்பித்தனர். ஊர் மக்களும், நண்பர்கள், குடும்பத்தாரும் வழியனுப்பி வைப்பதற்காக வருகை தந்திருந்தனர். இன்று பி.ப. 2.05-க்கு ஸ்ரீலங்கா எயார்லைன் விமானம் -இலக்கம் 281- மூலம் மக்கா நோக்கி பயணமாகுவார்கள். இப் பயண ஏற்பாடுகளை புத்தளம், Siddique Travels நிறுவனமும் கொழும்பு Buraque Travels நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்தது.
தொகுப்பு, படங்கள் : Hisham Hussain, Puttalam
0 Comments