Subscribe Us

குருநாகலில் குனிந்த ஹக்கீமும் குட்டிய றிஷாத்தும் என்ன தீர்வினை வழங்கப் போகிறார்கள்...??



குருநாகல் மாவட்டத்தில் 120 000 முஸ்லிம் வாக்காளர்கள் அளவில் உள்ளனர்.இவ்வாறு குருநாகல் மாவட்டம் பாரிய முஸ்லிம் வாக்கு வங்கியினை கொண்டிருந்த போதும் குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துவதில் முஸ்லிம்கள் மிகப் பெரிய சவாலினை எதிர் நோக்குகின்றனர்.இம் முறை குருநாகலில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துவதற்கான சாதகத் தன்மை மிக அதிகமாக இருந்தும் சில சூழ்ச்சிகள் அதனை இல்லாதொழித்திருந்தன.

இப் பிரதிநிதித்துவ இழப்பிற்கு மு.கா,அ.இ.ம.கா இற்குமிடையிலான மோதலினை பிரதான காரணமாக குறிப்பிடுகின்றனர்.இது பற்றி அ.இ.ம.கா தரப்பு கூறும் போது “குருநாகல் மாவட்டத்தில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளரினை களமிறக்க ஐ.தே.கவிற்கு மு.கா அழுத்தம் கொடுத்ததன் பேரில் அ.இ.ம.கா சார்பாக போடப்பட்ட ஸாபியின் பெயர் நீக்கப்பட்டிருந்ததாகவும் இதனை அறிந்த அமைச்சர் றிஷாத் தனது அதிரடி முயற்சியில் அதனை வெற்றி கொண்டு மீண்டும் தங்களது வேட்பாளரின் பெயரினை உள் நுளைத்ததாகவும்” குறிப்பிட்டுள்ளனர்.

இது பற்றி மு.கா தரப்பு குறிப்பிடும் போது “அமைச்சர் றிஷாத் கூறுவது போன்று அவர் சார்பாக நியமிக்கப்பட்ட ஸாபியின் பெயரினை நீக்கி தங்கள் வேட்பாளர் அவ்விடத்தில் கையொப்பம் இடவில்லை.தங்கள் வேட்பாளர் இறுதி இடமான 18ம் இடத்திலேயே கையொப்பம் இட்திருந்தாகவும் தங்கள் வேட்பாளர் கையொப்பம் இட்ட சந்தர்ப்பத்தில் ஸாபியின் பெயர் 17ம் இடத்தில் இருந்ததாகவும் அமைச்சர் றிஷாத்தின் கோரிக்கைக்கு இணங்கவே தங்களது பெயரினை திபெக்ஸ் செய்து நீக்கியதாகவும்” குறிப்பிட்டுள்ளனர்.

இவ் விடயத்தில் இருவரும் மாறி மாறி தங்களுக்குள் குற்றம் சுமத்துகின்றனர்.குருநாகலில் அமைச்சர் றிஷாத்திற்கு பாரிய ஆதரவும் இல்லை அவர் சார்பாக களமிறக்க முன் மொழியப்பட்ட ஸாபி அவர்கள் குருநாகலில் அவ்வளவு பிரபலமும் இல்லை என்பதனை ஐ.தே.க வாட்டாரங்கள் நன்கே அறியும்.குருநாகலில் முஸ்லிம் காங்கிரஸிற்கும் அதன் சார்பாக களமிறக்க முன் மொழிந்திருந்த றிஸ்வி ஜவஹர்ஸாவிற்கும் குறித்த ஆதரவு உள்ளது என்பதனையும் ஐ.தே.க வட்டாரங்கள் நன்கே அறியும்.எனவே,இங்கே ஆதரவு ரீதியில் ஒரு கட்சி வேட்பாளரிற்கு முன்னுரிமை வழங்க ஐ.தே.க உத்தேசித்து மேலுள்ள முடிவினை எடுத்திருந்தால் மு.கா வேட்பாளரினையே களமிறக்கி இருக்கும் என்பதை யூகிக்கலாம்.அவ்வாறில்லாது அமைச்சர் றிஷாத் சார்பான வேட்பாளரினை ஐ.தே,க களமிறக்கியது வேறு ஒரு காரணத்தினால் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.இவ்வாறில்லாமல் அமைச்சர் றிஷாத் தனது வேட்பாளரினை நீக்கிவிட்டார் என அமைச்சர் றிஷாத்திற்கு எதிராக மக்களினை கிளந்தெழச் செய்ய மு.கா விசமப் பிரச்சாரம் செய்வது அமைச்சர் றிஷாத்தின் முன் நிலையில் தனது மானத்தினை தானே ஏலம் விடுவதற்கு ஒப்பானது எனக் குறிப்பிடலாம்.

இம் முறை குருநாகல் மாவட்டத்திலேயே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ களமிறங்கி இருந்தார்.முஸ்லிம்கள் என்ன நடந்தாலும் மகிந்தவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதும் உறுதியானது.அதே போன்று மஹிந்த அணியினர் முஸ்லிம் வேட்பாளர் எவரினையும் களமிறக்கவும் இல்லை.இதன் காரணமாக குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம்களின் வாக்குகள் எதிர்ப் பக்கம் செல்லுவதற்கான வாய்ப்பு மிக அரிதாகவே காணப்பட்டது.எனவே,முஸ்லிம் வேட்பாளர்களினை அதிகம் களமிறக்குவது ஐ.தே.கவின் வெற்றியின் சாதகத் தன்மையினை அதிகரிக்கப்போவதில்லை.இதனடிப்படையில் முஸ்லிம்களினை ஏதோ ஒரு விதத்தில் திருப்திப்படுத்த ஒரு வேட்பாளரினையாவது களமிறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலும் ஐ.தே.க இருந்தது.

இது வரை காலமும் நடைபெற்ற தேர்தல்களில் குருநாகல் மாவட்ட முஸ்லிம் வாக்குகளில் குருநாகல் மாவட்ட பேரின வேட்பாளர்கள் மிகவும் இலகுவாக நனைந்து கொள்வார்கள்.தங்களது தேவைகளினை நிறைவேற்றிக் கொள்ள பேரின அரசியல் வாதிகளினையே முஸ்லிம்கள் அதிகம் நம்புவர்.தற்போது அங்கு ஒரு உறுப்பினர் தெரிவாகும் போது பேரின அரசியல் வாதிகளினை நோக்கி படை எடுக்கும் அலை சற்று குறைவடையும்.தேர்தல்கள் வந்தால் முஸ்லிம் வாக்குகளினை தங்கள் வசப்படுத்த அதீத பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டிய தேவை பேரின அரசியல் வாதிகளுக்கு எழும்.இதுமட்டுமல்லாது வடக்கு,கிழக்கு வெளியே ஒரு உறுதியான தளத்தினை நிறுவதற்கு கொழும்பு,குருநாகல்,அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களே மிகவும் சாதகமானவை.கொழும்பில் ஐ.தே.கவின் முன் மு.கவினால் மோத முடியாது.குருநாகலில் பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்வதன் மூலம் மு.காவினால் பலமான அடித்தளத்தினை நிறுவிக் கொள்ள முடியும்.இது பேரின கட்சிகளுக்கு பெரிதும் ஆபத்தானது.

குருநாகலில் அமைச்சர் றிஷாத் சார்பாக களமிறக்கப்பட்ட ஷாபி அவர்கள் அனுராதபுரம் கலாவெவ பிரதேசத்தினைச் சேர்ந்தவர்.இவர் குருநாகல் மக்களிடம் அவ்வளவு பிரபலம் இல்லை.மு.கா சார்பாக களமிறக்க முன் மொழியப்பட்டிருந்த றிஸ்வி ஜவஹர்ஸா குருநாகல் மாவட்டத்தில் குறித்த ஆதரவினைக் கொண்டவர்.முஸ்லிம் காங்கிரஸ் அ.இ.ம.கா ஆகிய இரு கட்சிகளும் தங்கள் பலத்தினை சோதிக்கும் ஒரு களமாக இத் தேர்தலினை பயன்படுத்தின.ஒரு கட்சி அதீத பலம் பெறுவது பேரினக் கட்சிகளுக்கு மிகவும் ஆபத்தானது.இரு கட்சிகளும் சம பலம் பெறுவதானது பேரினக் கட்சிகளுக்கு மிகவும் உகப்பானது.இதற்கு குருநாகல் களத்தில் மு.காவினை தோல்வியுறச் செய்வது மிகவும் பொருத்தமானது.மேலுள்ளது போன்ற பல காரணிகள் முன் வைத்து பேரினக் கட்சிகளினால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு சதியே குருநாகலில் நிகழ்ந்த விடயம்.

மு.காவிற்கு எதிராக அரங்கேற்றப்பட்ட சதிக்கு ஒரு மாற்று நடவடிக்கை மேற்கொள்ள மு.காவிற்கு சற்றேனும் நேரம் வழங்காது வேட்பு மனுத் தாக்கலின் இறுதித் தினமான குறித்த நாள் அதிகாலையே மு.கா வேட்பாளர் பெயர் திபெக்ஸ் செய்து திட்டமிட்டு நீக்கப்பட்டிருந்தது.இச் சதித்திட்டத்திற்கு அமைச்சர் றிஷாத் குருநாகல் வந்தமை மிகவும் சாதகமாகவும் அமைந்தது.இது தெட்டத் தெளிவான துரோகம் என்பது வெளிப்படையானது.துரோகம் என்று தூக்கி எறிந்து விட்டு சென்று விட இது ஒன்றும் சிறிய விடயம் அல்ல.குருநாகல் முஸ்லிம் மக்கள் பல தசாப்தங்களாக தங்கள் தேவைகளினை தேக்கி வைத்துக் கொண்டு இருக்கின்றனர்.அம் மக்களின் பிரதிநிதித்துவம் இம் முறை எவ்வாறேனும் நிவர்த்தி செய்யப்படல் வேண்டும்.

இத் தேர்தலில் மு.கா 5 ஆசனங்களினை மாத்திரமே பெற்றுள்ளது.இச் சந்தர்ப்பத்தில் இரு தேசியப் பட்டியலினை மு.காவிற்கு ஐ.தே.க வழங்குமா என்ற அச்சமும் தோற்று விக்கப்பட்டுள்ளது.இவ் வேளை அநீதிக்கு தீர்வு கேட்டு இன்னும் ஒரு தேசியப்பட்டியல் கேட்கும் நிலையில் மு.காவின் நிலைமை இல்லை என்பது யாதார்த்தம்.அதற்காக விட்டு விட்டும் இருக்க முடியாது.இவ் விடயத்தில் அ.இ.ம.காவினையும் ஐ.தே.க உள் நுழைத்து இருந்ததால் அ.இ.ம.காவும் இவ் விடயத்தில் ஒரு சிறிய அழுத்தத்தினை ஐ.தே.கவிற்கு வழங்குவது ஒரு தேசியப்பட்டியலினை குருநாகல் மாவட்ட முஸ்லிம்களுக்கு வழங்குவதற்கு மிகவும் உறுதுணையாக அமையும்.ஒரு கட்சியினால் முடியாது போனால் இரு கட்சிகளும் சேர்ந்து தங்களது ஒப்பந்தங்களுக்கு மேலதிகமாக ஒரு தேசியப் பட்டியலினை எடுத்து கட்சிகளுக்கு அப்பாற்பட்ட குருநாகலினைச் சேர்ந்த ஒரு பொதுவானரிற்கு வழங்க வேண்டும்.

இவ் விடயத்தில் மு.காவிற்கு ஐ.தே.க பலமான அடியினை வழங்கியுள்ளது.இவ் அடிக்கு எதிர்த் தாக்குதலினை செய்யும் அளவு சாதகமான நிலை தேர்தல் காலத்தில் இல்லாது போனாலும் தற்போது எழுந்துள்ளது.இவ் விடயத்தில் அமைச்சர் ஹக்கீமின் பல வீர வசனங்களினைப் பார்க்க முடிந்தது.அவரின் வீர வசனங்களுக்கு உறுதுணையாக ஐ.தே.க அறுதிப் பெரும் பான்மையினைப் பெறாத நிலைமை சாதகமாக உள்ளது.அநீதிக்கு தீர்வினை தேசியப் பட்டியலின் முன் வைக்க முடியும்.இப் போராட்டத்தில் மு.காவும்,அ.இ.ம.காவும் ஒன்றிணைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.தற்போது இரு கட்சிகளிடமும் உள்ள உறுப்பினர் எண்ணிக்கையின் முன் மோதும் நிலையில் ஐ.தே.க இல்லை.

தங்கள் கட்சிகளின் அமைச்சு.பிரதி அமைச்சினைப் பாதுகாப்பதனை விட இது ஒரு முக்கியமான பிரச்சனையாக இருப்பினும் எமது முஸ்லிம் கட்சிகள் இதற்கு முன்னுரிமை வழங்குமா? என்பது சந்தேகமே!

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Post a Comment

0 Comments