பெண்களை முன்னேற விடாமல் பிணைத்திருக்கிற தளைகள் என்னவென்று ஆராய்வதற்கு முன்னால், பெண்கள் தங்களுக்குத் தாங்களே பூட்டிக்கொண்டிருக்கும் சங்கிலியை முதலில் அறுத்தெறிய வேண்டும். தங்கள் வாழ்நாளில் பெரும்பாலான நேரத்தைச் சமையலறையிலேயே கழித்துவிடுகிற இந்தியப் பெண்கள் ஏராளம்.
பல பெண்கள் சமையலைத் தங்கள் அடிப்படைக் கடமையாகவும் அடையாளமாகவும் கருதுகிறார்கள். உணவு எப்படி ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவோ அப்படித்தான் சமையலும். சில பெண்கள் சமையலறையைத் தாங்கள் ஆட்சி செய்யும் இடமாக நினைத்துப் பெருமிதப்படுகிறார்கள். சமையலறையில் வெந்து, மணக்கிற உணவு வகைகள் மட்டுமே தன் அடையாளம் என்று ஆனந்தப்பட்டுக்கொள்கிற பெண்கள், தங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாகத் தாங்களே பெரும் சுவரை எழுப்பிக்கொள்கிறார்கள்.
கணவன், மனைவி இருவருமே வேலைக்குப் போகிற குடும்பங்களில் இன்று பல ஆண்கள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொண்டாலும் சமையல் வேலையை மட்டும் தவிர்த்துவிடுகிறார்கள். பெண்களை அடுத்த கட்டத்துக்கு நகரவிடாமல் வீட்டுக்குள்ளேயே பூட்டிவைத்திருப்பதில் சமையலுக்கு முக்கியப் பங்குண்டு என்பதால், இதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியாது.
0 Comments