Subscribe Us

இருப்பத்தாறும் இப்போது முப்பத்தொன்றாக ஆனது

[கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்]


புத்தளத்தின் இருப்பத்தாறு வருட கனவொன்று நனவாக்கனவாக முப்பத்தொரு வருடமாக நேற்றைய எம் மக்களின் வேற்றுமையால் நீடிக்கப்பட்டது.

பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இம்முறையும் எட்டாக்கனியாக புளித்துப்போனது. ஒற்றுமை பேசிய வாய்கள் மெளனித்தன மனதினில் வேற்றுமையை சுமந்ததினால்.

காலங்கள் எவ்வளவு என்றாலும் வரலாற்று தவறினை மீண்டும் மீண்டும் செய்து தம்மை ஏமாற்றுவது மட்டுமல்லாது தாம் வாழும் சமூகத்தையும் ஏமாற்றி, தமது சந்ததியினருக்கு பாழடைந்த எதிர்காலத்தை விட்டு செல்கின்றனர் எம்மக்கள்.

அந்தவகையில் எமது முன்னோர்கள் தமது அடுத்து வந்த சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை பெற்றுக்கொடுத்ததை மறக்க இயலாது. அதனை நாம் தக்கவைத்து கொள்ள தவறிவிட்டோம். நாளைய நமது சந்ததியினர் எம்மை இழிவாக பேசக்கூடிய சூழலை நாம் அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.

வடக்கு மற்றும் கிழக்கில் வரலாற்று பாடமொன்று எல்லா தேர்தல்களிலும் எமக்கு கற்றுத்தருகிறார்கள் மாற்று சகோதரர்கள். அதனை நாம் இன்னும் கற்றப்பாடில்லை, வெறுமனே இக்காதில் கேட்டு அக்காதால் விட்டுவிட்டு எம் மறுவேலையை செய்ய தயாராகிவிட்டோம்.

விட்டுக்கொடுப்புகள், சகிப்புத்தன்மைகள் இல்லாததன் விளைவே இன்று வெளியூர் பெரும்பான்மை சகோதரர்கள் வென்று வெற்றிக்கோஷத்துடன் வீதியில் செல்லும் போது நாம் வாய்பார்த்து நிற்கக்காரணம்.

இதேவேளை தமது வாக்குகளை வீண் விரயம் செய்தவர்கள், காலாகாலமாக செய்துக்கொண்டிருப்பவர்கள் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் எதுவானாலும் சொல்லுங்கள், நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் சொல்லுங்கள், நாங்கள் எமது நிலைப்பாட்டில் இருந்து மாறப்போவதில்லை, வாக்கு போட்டு எமக்கு எந்த பிரயோஷனமும் இல்லை என வியாக்கியானம் பேசுபவர்களின் வாய்கள் முடக்கப்பட வேண்டும்.

வாக்கு போடாது, தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை சரிவர நிறைவேற்றாது விட்டவர்கள் இனம்காணப்பட வேண்டும். அரச சேவைகளில் இருந்து புறக்கணிக்கப்பட வேண்டும், அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டாலும் சரியே.

வாக்கினை வீணாக்கிவிட்டு அரச சேவையில் இடம் கேட்டுவர இவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. கேட்டால் எல்லோரும் கள்வர்கள் என மட்டும் பதில் வருகிறது. இது ஆரோக்கியமான பதிலன்று. நல்லதோ கெட்டதோ உமது வாக்கினை வழங்குவது உங்கள் கடமை. உங்கள் கடமையை செய்யாது பலனை எதிர்பார்ப்பது எங்கனம் தகும்.

இம்முறை வடகிழக்கில் அனைத்து மக்களும் வாக்கினை வழங்கிய அதேவேளை புத்தளம் தொகுதியில் வாக்களிப்பில் மந்தநிலை என்று செய்தி வாசிக்கிறார்கள். காலை ஏழு மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நண்பகல் பன்னிரெண்டு மணியாகியும் ஆமை வேகத்திலேயே இருந்துள்ளது. எமக்கு வாக்களிக்க ஒன்பது மணித்தியாலங்கள் போதவில்லை.

இப்போது தேசியப்பட்டியல் பாராளுமன்ற ஆசனத்தில் கவலைகளை மறந்து திரிகிறோம். இருபத்தாறு வருடங்களாக ஒற்றுமை கதைத்து கதைத்தே காலத்தை வீணாக்கி விட்டுள்ளோம். எல்லோரும் ஒன்றுக்காகவே முயற்சி செய்தும் வேற்றுமை எம்மை தோற்கடித்து விடுகிறது. இன்னும் ஒற்றுமை எம்மில் வந்த பாடில்லை.

எதிர்கால சந்ததியினர் இதனை புரிந்து கொள்வார்களா.! அல்லது அவர்களும் இதே தவறை மீண்டும் மீண்டும் செய்து ஏமாறுவார்களா.!


புத்தளம் – பாராளுமன்ற வெற்றி – எட்டாக்கனி – எதிர்பார்ப்பு..

Post a Comment

0 Comments