-Inamullah Masihudeen-
வரலாற்றில் தனி மனிதர்கள், சமூகங்கள், தேசங்கள் என சரிதைகளும் சரித்திரங்களும், அறிவு முதிசங்களும், கலைக் களஞ்சியங்களும் என பலவேறு பொக்கிஷங்கள் அடுத்தடுத்து வரும் தலை முறைகளுக்காக விட்டுச் செல்லப்பட்டுள்ளன.
தனி மனித சரிதைகள்,சமூகங்களின், தேசங்களின் சரித்திரங்கள், அறிவு முதிசங்கள் நந்தவனங்களைப் போன்றவை, தேனீக்களைப் போன்று அங்கிருந்து நல்லவற்றை சேகரித்து மனித வாழ்வினை ஆரோக்கியமாக வளப்படுத்துவதற்கான முயற்சிகளில் மாத்திரமே உண்மையான விசுவாசிகள், நன்மக்கள் ஈடுபடுவார்கள்.
ஆங்காங்கே கிடக்கின்ற, குப்பை மேடுகளை, கழிவறைகளை, ஈக்கள் போன்று மொச்சுவதும் மோப்பமிடுவதும் கிளருவதுமாக சரிதைகளிலும் சரித்திரங்களிலும் இருக்கின்ற கசப்பான பாகங்களை அலசி ஆராய்ந்து,வரலாற்றுக் குறை குற்றங்களையும் குரோதங்களையும், குப்பை மேடுகளையும் வரிந்து கட்டி தமதாக்கிக் கொண்டு மனித குலத்திற்கு கேடு விளைவிப்பவர்கள் குறித்து ஒவ்வொரு தலை முறையும் அவதானமாக இருத்தல் வேண்டும்.
தனது மறைவுக்குப் பின்னர் ஏற்படும் குழப்பங்கள், பித்னாக்கள் பற்றியெல்லாம் எதிர்வு கூறிய எமது தலைவர் இறுதி இறைதூதர் கண்மணி முஹம்மத் (ஸல்) அவர்கள் "உங்களிடம் அல்-குரானையும் எனது வழி முறையையும் விட்டுச் சென்றுள்ளேன் அவற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும் வரை நீங்கள் வழி தவற மாட்டீர்கள்" என்று வலியுறுத்திக் கூறியதன் மூலம் எங்களிடம் மகத்தான ஒரு தூதை விட்டுச் சென்றிருக்கின்றார்கள்.
வரலாற்றுக் குரோதங்களை, குப்பை மேடுகளை காவித் திரிவதனை விடுத்து சமூகத்திற்கும் ,தேசத்திற்கும், உம்மத்திற்கும், மனித குலத்திற்கும் விடிவு விமோசனம் தரும் மகத்தான தூதினை நாம் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
தனிமனிதர்களாக, சமூகங்களாக, தேசங்களாக, குழுக்களாக வரலாற்றுக் குரோதங்களை காவித் திரிவோர் பிளவுகளையும், பிணக்குகளையும், படு கொலைகளையும், சண்டை சச்சரவுகளையும், நாசகார யுத்தங்களையுமே இன்று விதைத்துக் கொண்டிருக்கின்றார்கள், ஷைத்தானிய சக்திகளை, நவ யுக நம்ரூதுகளை, பிர்அவுன்களை உள்வீட்டில் அழைத்து வந்து உறவு கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
சமூகம், தேசம் ,உம்மத், உலகம், வாழ்வு, மரணம் என சகல அடிப்படை அம்சங்களிலும் தெளிவான நிலைப்பாட்டில் உள்ள சகலரும் தாம் இருக்கின்ற இடத்தில் இருந்து கொண்டே தமது பணி குறித்தும் பங்களிப்புக் குறித்தும் சிந்திப்பதும், செயற்படுவதும், கருத்து வேறுபாடுகள் களைந்து ஒரே கருத்துள்ளவர்களை ஒன்றிணைத்து அரவணைத்து அணி திரள்வதும் காலத்தின் கட்டாயமாகும்.


0 Comments