சீனாவில் சிறை தண்டனையை தவிர்ப்பதற்காக கடந்த பத்து ஆண்டுகளில் 14 முறை கர்ப்பம் அடைந்ததாக போலீசாரை ஏமாற்றிவந்த ஒரு பெண்ணைப் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
வடமேற்கு சீனாவில் உள்ள தன்னாட்சி பெற்ற க்ஸிங்ஜியாங் மாகாண தலைநகரான உரும்கி பகுதியை சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் ஊழல் வழக்கில் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக, தான் கர்ப்பமாக இருப்பதாக தண்டனை விதித்த நீதிபதியிடம் அந்தப் பெண் தெரிவித்தார். அந்நாட்டு சட்டங்களின்படி, கர்ப்பிணிப் பெண்களை சிறையில் அடைத்துவைக்க வழியில்லை என்பதால் பிரசவத்துக்கு பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இந்த தற்காலிக சாதக அம்சத்தை நிரந்தர சாதகமாக்கிக் கொள்ள திட்டமிட்ட அந்தப் பெண், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி, கருக்கலைப்பு செய்து கொண்டார். பின்னர், உடல்நலம் தேறியதும் மீண்டும் கர்ப்பம் ஆனார். சில மாதங்களுக்கு பின்னர், அவரை தேடிவந்த போலீசார் வீங்கிய வயிற்றுடன் இருந்த அந்தப் பெண்ணை கைது செய்யாமல் திரும்பிச் சென்றனர். கோர்ட்டிடம் முறையிட்டு கைதில் இருந்து அவர் மீண்டும் விலக்கு பெற்றார்.
கடந்த பத்து ஆண்டுகளாக இப்படியே கர்ப்பிணியாவது - கருச்சிதைவு செய்து கொள்வது என போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி, தற்போது பதினான்காம் முறையாக கர்ப்பிணியாகியுள்ள இவரை எப்போதுதான் கைது செய்து சிறையில் அடைப்பது? என்று புரியாமல் போலீசார் குழம்பிப்போய் உள்ளனர்.


0 Comments