எங்களுக்கும் முன்னாள் ஜனாதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என்று முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் கிழக்கு மகாண முதலமைச்சர் பிள்ளையான் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஹிஸ்புல்லா மகிந்த ராஜபக்சவோடு தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.
அத்துடன் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கட்சியின் தலைவர் என்றும் அவரது வழிகாட்டலில் போட்டியிட்டு ஆட்சி அமைக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா குறிப்பிடும்போது கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் அருகில் இருந்தார்.
சர்வதேச அழுத்தங்களின் மத்தியில் அவைகளுக்குப் பணியாமல் தமிழீழ விடுதலைப் புலிகளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பூண்டோடு படுகொலை செய்ததாக முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கில் காத்தான்குடியில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்து இரவு பகலாக யுத்தம் செய்தாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா, இந்தியா, கனடா போன்ற நாடுகள் அழுத்தங்களைக் கொடுத்த போது எந்த அழுத்தங்களுக்கும் செவிசாய்க்காமல் யுத்தத்தை தொடர்ந்தாகவும அவர் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதியுடைய தொலைபேசியைக் கூட இரண்டு நாட்கள் பதிலளிக்காமல் அந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததையும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
பிரபாகரனையும் கொலை செய்து, முழு இயக்கத்தையும் படுகொலை செய்தார். பூண்டோடு ஒழித்தார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதனால்தான் இன்று தாம் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் நிம்மதியாக வியாபாரம் செய்வதாகவும் பறிபோன கிராமங்களில் மீண்டும் குடியேற முடிந்துள்ளதாகவும் அவர் அன்று தெரிவித்தார்.


0 Comments