வன்னி மாவட்ட ஐ.தே.க.வின் முதன்மை வேட்பாளர் ரிஷாத் பதியுதீன் வன்னி மாவட்டத்தில் இனவாதத்தை விதைத்து அதன் மூலம் மக்களது வாக்குகளைச் சூறையாடி இருண்ட யுகத்தை நோக்கி மீண்டும் பயணிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சரும் ஐ.தே.கட்சியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த அமைச்சர் நானாட்டான் பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில், இன்று அரசியல் காலம். இந்த காலத்தில் பலர் உங்களை வந்து உணர்ச்சிவசப்படுத்தும் வார்த்தைகளைப் பேசுவார்கள். இந்தப் பேச்சுக்கள் வெறுமனே ஏட்டுச் சுரைக்காயாக தான் இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
கடந்த 30 வருட கால அவல யுத்தத்தில் நானும் அகதியாக இடம் பெயர நேரிட்டது. அகதி வாழ்க்கை என்பது எந்தவொரு மனிதருக்கும் ஏற்படக் கூடாது என்ற பிரார்த்தனையினை இங்கு கேட்கின்றேன்.அவ்வளவு துன்பமும், உளைச்சலும் கொண்ட ஒரு வாழ்க்கை. கற்பதற்கு உரிய பாடசாலையில்லாத நிலை, உறங்குவதற்கு போதுமான படுக்கைகள் இன்மை, அத்தோடு இன்னும் எத்தனையோ துன்பங்களை அகதி வாழ்க்கை எமக்கு ஏற்படுத்தியது. இழப்புக்களுக்கு மேல் இழப்புக்களை சுமந்த எமது மக்கள் இன்னும் இழப்பதற்கு எதுவும் இல்லாத நிலையில் அனுபவித்த இடர்களை இங்கு பட்டியலிட முடியாது.
இவ்வாறான நிலையில் தான் இந்த சமூகத்திற்கு ஏற்பட்ட இழப்புக்களை ஈடுசெய்யும் வகையில் அரசியலுக்கு இழுக்கப்பட்டேன். எனது அரசியல் பிரவேசத்தின் மூலம் வடக்கில் வாழும் தமிழர்களும், முஸ்லிம்களும் அவர்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் அடித்தளத்தினை இடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
இந்த நிலையில் தான் நாம் ஒரு பொதுத் தேர்தலை சந்திக்கின்றோம். இந்தத் தேர்தலை மக்களின் தேவைப்பாடுகளை நிவர்த்திக்கும் ஒன்றாக மாற்றிக் கொள்வது எமது மக்களின் கைகளில் உள்ளது. உங்களது வாக்குப்பலத்தினை நீங்கள் யாருக்கு அளிக்கப் போகின்றீர்கள் என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள்,கடந்த காலத்தில் எமது அபிவிருத்தி பணிகள் எந்தவித இனப்பாகுபாடுகள் இன்றி முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. நான் மதத்தால் இஸ்லாமியனாக இருந்தபோதும் எனது தாய் மொழி தமிழாகும். இந்தத் தமிழ் இன ஒற்றுமையின் பாலமாக இருக்கின்றது என்பதை பகிரங்கமாக கூறிக்கொள்வதில் மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றேன் என்றார்.


0 Comments