-எம்.எல்.எம். அன்ஸார்-
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் (2013) ஜனாதிபதி செயலக வாகனமொன்றில்
இரண்டு அதிகாரிகளுடன் அரசாங்க வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பது
சம்பந்தமான கலந்துரையாடலுக்காக அக்குரஸ்ஸ வுக்கு சென்றிருந்தேன்.
அந்த வாகனத்தின் முன் கண்ணாடியில் "ஜனாதிபதி செயலகம்" என்று
மும்மொழிகளிலும் எழுதப்பட்ட போர்டும், அதன் மேல் மஹிந்த ராஜபக்ஷவின் உருவம்
பொறித்த ஸ்ரிகரும் ஒட்டப்பட்டிருந்தது.
ஒரு மாலை நேரம். போர்வை என்ற ஊரில் உள்ள பள்ளிவாயலில் தொழுதுவிட்டு
அங்கிருந்து வெலிகம போவதற்கு தயாரானபோது, சாரதிக்கு வழி தெரியவில்லை.
அவ்விடத்தில் நின்றிருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் போவதற்கான
வழியைக் கேட்டோம். அவர் வழியை சொல்லித்தந்துவிட்டு கண்ணாடியில்
ஒட்டியிருந்த மஹிந்தவின் படத்தை கை கூப்பிக் கும்பிட்டுவிட்டு , மஹிந்தவின்
அலுவலக ஊழியர்கள் என்பதற்காக நாங்கள் பாதுகாப்பாக போவதற்கு
பிரார்த்தனையும் செய்தார்.
மொனராகலை மாவட்டத்தில் இருக்கிறது நெல்லியத்த (Nelliyadhdha) என்ற ஒரு
பின்தங்கிய கிராமம். அம்பாறை மாவட்ட எல்லைக் கிராமங்களில் புலிகளின்
தாக்குதலுக்கு உள்ளான ஊர்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இங்கு வசித்து
வருகிறார்கள். மின்சாரம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்
எதுவுமே இல்லாத ஏழைக் கிராமம். இங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று அல்லது
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி
கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இக்கிராமத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொடுப்பதற்காக
மீள்குடியேற்ற அமைச்சினால் மூன்று நாட்கள் இந்தக் கிராமத்தில் தங்கி வேலை
செய்தபோது, தகவல்களை சேகரிப்பதற்காக ஒரு வீட்டுக்குப் போனேன்.
கணவன் மனைவி உட்பட ஒரு பெண் பிள்ளையும் அங்கு இருந்தார்கள்.. மூத்த மகன்
புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவர் சொன்னார். அவ்வீட்டில் புத்த
பெருமானுக்குப் பக்கத்தில் மஹிந்தவின் படத்தை வைத்து வணங்கி வருகிறார்கள்.
ஒவ்வொருநாளும் தொழிலுக்குச் செல்லுமுன்னர் அந்த குடும்பத் தலைவன்
மஹிந்தவின் முகத்தில் முழித்துவிட்டுத்தான் செல்வாராம். அந்தளவிற்கு
அவருக்கு மஹிந்த மீது பக்தி.
இன்னொரு வீட்டுக்குப் போனபோது ஒரு சிறிய புத்த பெருமானின் சிலையும் பெரிய
அளவிலான மஹிந்தவின் படமும் இருந்தது. புத்தரைவிட அந்த வீட்டில் உள்ள
நால்வரும் மகிந்தவைத்தான் அதிகம் நேசிப்பதாக சொன்னார்கள். அந்த வீட்டின்
தலைவன் ஒரு காலத்தில் பிரேமதாசாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவராம். யுத்த
வெற்றிக்குப்பின் மஹிந்தவை தான் கடவுளாகவே பார்ப்பதாக சொன்னார்.
இவை நான் நேரில் கண்ட சில சான்றுகள்தான். முன்னொரு காலத்தில் கிராமப்புற
மக்களின் இதயங்களை காலஞ்சென்ற பிரேமதாச அவர்கள் எவ்வாறு வென்று
வைத்திருந்தாரோ அதைவிட பல மடங்கு நன்மதிப்பை மஹிந்த ராஜபக்ஷ இன்று
கிராமங்களில் மட்டுமன்றி நகரங்களிலும் சம்பாதித்து வைத்திருக்கிறார்.
இலட்சக்கணக்கான சிங்கள மக்களின் இதயங்களில் அவர் இன்னும் தோல்வியுறாத
ஜனாதிபதியாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
மஹிந்த ஈட்டிக் கொடுத்த யுத்த வெற்றி பெரும்பான்மை மக்களின் மனங்களில் பரம்பரை பரம்பரையாக நினைவில் இருக்கும்.
பெளத்த சிங்கள மக்களுக்கு மஹிந்த கடவுள்தான்.


0 Comments