சவுதி அரேபியா மன்னர் சல்மான். இவர் விடுமுறையை பிரான்சில் கழிக்கிறார். இவரது மாளிகை பிரான்சில் கேன்ஸ் அருகேயுள்ள நைஸ் பகுதியில் வல்லாயுரிஸ் என்ற இடத்தில் உள்ளது.
இங்கு அழகிய கடற்கரை உள்ளது. அதன் அருகே மன்னரின் ஆடம்பர மாளிகை உள்ளது. இங்கு அவர் 3 வாரங்கள் தங்குகிறார்.
அதற்காக நேற்று அவர் விமானம் மூலம் நைஸ் வந்து சேர்ந்தார். அவருடன் 1000 உதவியாளர்களும் வந்துள்ளனர். அவர்கள் சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 2 போயிங் விமானங்களில் வந்தனர்.
அவர்களில் 300 பேர் மன்னருடன் மாளிகையில் தங்கியுள்ளனர். மீதமுள்ள 700 பேர் ‘கேன்ஸ்’ நகரில் உள்ள ஆடம்பர நட்சத்திர ஓட்டலில் உள்ளனர்.
மன்னர் சல்மானின் மாளிகை வல்லாயுரிசில் ‘ரிவைரா’ கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ளது. எனவே, மன்னரின் பாதுகாப்பு கருதி கடற்கரைக்கு செல்லும் பாதையை போலீசார் மூடி விட்டனர்.
இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அங்கு செல்ல முடியவில்லை. இதனால் அவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடற்கரை சாலை மூடப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்ட மனு பிரான்ஸ் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வல்லாயுரிஸ் நகர மேயரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அது குறித்து பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேயுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.


0 Comments