தேர்தல் காலத்தின் போது ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தகாத வார்த்தைகளால் தூஷித்து அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று விகாரைகளுக்கு சென்று அரசியல் பேசி அதன் புனிதத்தைக்கெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
தியத்தலாவை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற ஹப்புத்தளை ஐ.தே.க. பிராந்திய கூட்டத் தொடரில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஹப்புத்தளை ஐ.தே.க பிரதான அமைப்பாளர், ஊவா மாகாண உறுப்பினர் செனரத் ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தொடரில் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் இன்று புனிதத்துவமான மத வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லும் முன்னாள் ஜனாதிபதி அரசியல் பேசி ஜயவேவா கோஷம் எழுப்பி இனத்துவேஷத்தை கக்குகிறார். சாது சாது என கூற வேண்டிய சாந்தியான இடங்களை களங்கப்படுத்தி வருகின்றார்.
இச்செயற்பாடு உடன் நிறுத்தப்பட வேண்டும். மக்களால் நிராகரிக்கப்பட்டவர் மீண்டும் பிரதமர் போட்டிக்கு வாக்கு கேட்டு தேர்தலில் குதிக்க ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிடம் மண்டியிடுகிறார். மக்கள் இவருக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்.இன்று ஊவா மாகாண சபைக்கு தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தொழில் கேட்டு வருகின்றனர்.
என்னை நம்பி வாக்களித்த இம்மாகாண மக்களுக்கு சிறந்த சேவையினை செய்ய சித்தமாகவுள்ளேன்.இன்று எதிர்க்கட்சியினர் முதியோர் உபகார பணத்தினை நிறுத்தி விட்டதாக புரளிகளை கிளப்பி வருகின்றனர். இவை பொய்யான வதந்திகள். நான் இது விடயம் குறித்து திறைசேரி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்ட போது காலதாமதமின்றி உரிய காலத்திற்கு அந்த பிரதேசங்களுக்கு அவை அனுப்பப்படுவதாக தெரிவித்தனர்.
இன்று அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட எதிர்க்கட்சியினர் எமது நல்லாட்சியில் குறைகள் நடப்பதாக ஊடக மாநாடு வைத்து கூறுகின்றனர். இவற்றினை மக்கள் நம்பப்போவதில்லை என்றார்.


0 Comments