-PAQ Media Unit-
அஸ்ஸலாமு அலைக்கும்
பித்ரா என்பது புனித ரமழானை அடைந்த நாம் அதிகமான நல்அமல்களை
செய்வது மட்டுமல்லாது இறுதியில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏழை எளியோருக்கு
தர்மம் செய்தலாகும். நாம் எவ்வாறு பெருநாளை
ஆவலோடு எதிர்ப்பார்த்து இருக்கின்றோமோ அதே எதிர்ப்பார்ப்பே அவர்களுள்ளும்
இருக்கும். இவ்வாறானதொரு நிலையில் அவர்களையும் இச்சந்தோஷ தினத்தில் சந்தோஷமாக
வைத்திருக்க வல்ல இறைவன் தந்திருக்கும் ஒரு வாய்ப்பாக இதனை செய்ய நாம் முன்வர
வேண்டும்.
பித்ராவின் நோக்கம்
இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம்
கடமையாக்கப்பட் டுள்ளது. நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும்
நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழை களுக்கு உணவாகவும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ராவை விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817
நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப்
பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு
வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில்
வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.
பித்ரா யாருக்கு கடமை?
பித்ரா கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மீது இது கடமையாகும். முஸ்லிமான ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது
நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு
பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள்
நூல்: புகாரி 1503.
ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத்
தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.
பித்ராவாக எதை கொடுப்பது?
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் உணவில் தீட்டப்படாத கோதுமையில்
ஒரு "ஸாவு', பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவு, பாலாடைக் கட்டியில் ஒரு ஸாவு, உலர்ந்த திராட்சை
(கிஸ்மிஸ்) யில் ஒரு ஸாவு என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஸகாத்தை வழங்கி
வந்தோம்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி
(ரலி)
நூல்: புகாரி 1506
அதாவது நாம் உட்கொள்ளும் பிரதான உணவை பித்ராவாக
கொடுப்பதாகும். நமது பிரதான உணவு அரிசி காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.
எவ்வளவு கொடுப்பது?
மேற் கூறப்பட்ட நபி மொழிகளில் ஒரு ஸாவு என்று வந்துள்ளது
ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும். நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி
வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும்.
அரிசிக்கு பதிலாக பணத்தை கொடுக்கலாமா?
பொதுவாக முஸ்லிம்கள் பித்ராவாக அரிசியை மாத்திரம் கொடுப்பதை
நாம் அவதானிக்கலாம். அவ்வாறு அரிசியை கொடுக்கும் அதேநேரம் சமையல் பொருட்களையும், இதர பண்டங்களையும் சேர்த்து கொடுப்பது சால சிறந்ததாகும். எம் சகோதரர்களும்
எம்மை போல நோன்பு பெருநாளை கொண்டாட இன்றே ஆயத்தமாகுவோம்.
கடந்த 3 வருடங்களைப்போல் இம்முறையும் நாம்
கத்தாரில் வாழும் புத்தளம் சகோதரர்களான உங்களதும் உங்களது குடும்பத்தினதும்
பித்ராக்களை எம்மிடம் தருவதன் மூலம் கூட்டாக பித்ராவை விநியோகிப்பதற்கு உதவுமாறு
அன்பாய் கேட்டுக் கொள்கிறோம்.
அத்தோடு இதனை கூட்டாக சேகரித்து விநியோகிப்பதே நபிகளாரின்
வழிமுறையாகும். இதனை அடிப்படையாக கொண்டு கடந்த 3 வருடங்களைப் போல இவ்வருடமும் PAQ புத்தளம் பெரிய
பள்ளியுடன் இணைந்து ஸகாத்துல் பித்ராவை கூட்டாக சேகரித்து விநியோகிக்க முடிவு
செய்துள்ளது.
2012 ம் ஆண்டு மஸ்ஜிதுல் கூபா பகுதியை
சார்ந்த 90 குடும்பங்களுக்கும் . 2013 ம் ஆண்டு மஸ்ஜிதுல் கூபா மற்றும் அதனை அண்டிய பகுதியை சார்ந்த 115 குடும்பங்களுக்கும், 2014 ம் ஆண்டு புத்தளத்தில்
உள்ள பல்வேறு மகள்லாக்களை சார்ந்த 140 குடும்பங்களுக்கும்
சகாத்துள் பித்ரா விநியோகிக்கப்பட்டது.
உங்களினதும் உங்களைச்
சார்ந்துள்ளோரினதும் பித்ரா தொகையினை (ஒவ்வொருவருக்கும் தலா QR.
20/-) வழங்கி சென்ற வருடத்தை விட இவ்வருடம் அதிகமான வறிய
குடும்பங்களுக்கு நாம் ஸக்காதுள் பித்ராவினை வழங்க உங்கள் அனைவரையும் அன்புடன்
அழைக்கின்றோம்.
வஸ்ஸலாம்,
கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் கூட்டமைப்பு
தோஹா – கத்தார்


0 Comments