மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.
முஸ்லிம் காங்ரஸ் தலைவர் றவூப் ஹக்கீமின் சகோதரர் றவூஹ் ஹஸீர் அவர்களினால் “அமைச்சர் ஹக்கீமுடன் சில நிமிடங்கள்“ என்ற தொனியில் முகநுால் எழுத்தாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் மற்றும் முஸ்லிம் காங்ரஸின் போராளிகளுக்குமாக ஒரு சந்திப்பு ஒன்று அண்மையில் ஏற்பாடாகியிருந்தது யாவரும் அறிந்த விடயம்.
குறித்த சந்திப்பை மிகவும் ஆரோக்கியமானதொரு விடயமாகவே நான் கருதுகின்றேன்.
“அமைச்சர் ஹக்கீமுடன் சில நிமிடங்கள்“ என்ற சந்திப்பு நடைபெற்று முடிந்ததுதான் தாமதம் ; ஹக்கீம் ஊடகவியலாளர்களிடமும், முகநுால் எழுத்தாளர்களிடம் குறிந்த சந்திப்பின் போது முஸ்லிம் காங்ரஸை காப்பாற்றுமாறு மண்டியிட்டதாக யாரோ ஒரு கருப்பு ஆடு அந்த செய்தியை கிண்டிவிட்டு அதனை ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இணையத்தள ஊடகங்களும் தங்களுக்கு வழமையாக நம்பிக்கைத் தன்மை வாய்ந்த ஆதாரபூர்வமான செய்திகளை அனுப்பி வைப்பவர்தானே என்று அந்த செய்தியைப் பிரசுரித்து விட்டார்கள் இதனால் இந்த விடயம் மேலும் வாய்குல் போட்ட சுவிங்கம் போல எல்லோராலும் சப்பப்பட்டுக் கொண்டிருக்க காரணமாகி விட்டது.
இந்த விடயத்தில் எல்லோரும் இணையத்தள ஊடகங்களையே வசைபாடினார்கள். இணையத்தளங்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் நேரடியாக செய்திகளை தங்களது நிருபவர்கள் மூலம் ஆதாரபூர்வமாக சேகரித்து பதிவிடுகின்றார்கள் அதே போன்று ஒவ்வொரு மாகாண மற்றும் மத்திய அரசியல்வாதிகள் தங்கள் செய்திகளை பிரசுரிக்க நியமித்துள்ள ஊடகவியலாளர்கள் மூலமாக அனுப்பப்படுகின்ற செய்திகளையும் பிரசுரிக்கின்றார்கள். குறித்த செய்தியை அனுப்பி வைத்த நபர் அன்று மட்டுமல்ல பல மாதங்களாக நம்பகத்தன்மையான செய்திகளைப் ஆதாரத்துடன் புகைப்பட வாயிலாக அனுப்பி வைக்கக் கூடிய ஒருவர் என்ற ரீதியில் ஹக்கீம் மண்டியிட்டதாக அனுப்பப்பட்ட செய்தியை ஊடகங்கள் பிரசுரித்திருக்கலாம் இதனால் இணையத்தளங்களை குற்றம் சாட்டி எந்த வித பலனும் இல்லை.
முதலில் ஹக்கீம் மண்டியிட்டதாக கிண்டிவிட்டவரை அடையாளம் கானுங்கள் அதற்குப் பிறகு இணையத்தளங்களைக் குறை காணலாம்.
முஸ்லிம் காங்ரஸ் சம்பந்தமாக வெளிவரக் கூடிய சில செய்திகள் திரிபுபடுத்தப்பட்டு வருவது இன்று நேற்றல்ல. முஸ்லிம் காங்ரஸ் கட்சியின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் சமூகவலையத்தளத்திலும், பூமித்தளத்திலும் வியாபித்திருக்கின்றார்கள் அவர்கள் ஊசி ஓட்ட இடம் கிடைக்காதா என்று காத்திருந்து இடம் கிடைத்து விட்டால் உலக்கையை ஓட்டிக் கொண்டிருப்பார்கள் அப்படிப்பட்ட ஒருவர் கிண்டிவிட்ட வதந்திதான் ஹக்கீம் மண்டியிட்டது.
முஸ்லிம் காங்ரஸ் தலைவருக்கும், அக்கட்சிக்கும் ஆதரவாகவோ அல்லது வேறு எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ வக்காலத்து வாங்க நான் எக்காலத்தும் முனையவில்லை இருந்த போதும் ஒரு விடயம் நமது சிந்தனைக்கு தெளிவாக புலப்பட வேண்டும் இன்றைய கால கட்டத்தில் இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கும் கட்சியான முஸ்லிம் காங்ரஸ் கண்கள் கட்டப்பட்டு காட்டுக்குள்ளா சிக்கித் தவித்துக் கிடக்கிறது மண்டியிட்டுக் காப்பாற்றச் சொல்ல...???? மண்டியிட்டுக் காப்பாற்றச் சொல்லுமளவுக்கு கலந்து கொண்டவர்கள் என்ன வெளிநாட்டு ராஜதந்திரிகளா...???
இதிலிருந்து புரியவில்லையா இது யாரோ ஒருவர் அல்லது குழு முஸ்லிம் காங்ரஸ் கட்சிக்கு எதிராக அதன் செல்வாக்கை மக்கள் மத்தியில் மழுங்கடிக்க கிழப்பி விட்ட புழுதி என்று.
இந்த இடத்தில் நான் இன்னுமொன்றை சொல்ல நிச்சயம் கடமைப்பட்டுள்ளேன் அதாவது சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸ் சம்பந்தமாக தெய்திகள் திரிபுபடுத்தப்பட்டு சொல்லப்படுவதற்குக் காரணம் முஸ்லிம் காங்ரஸ் கட்சிக்கு என்று ஒரு உத்தியோகபூர்வமான, முஸ்லிம் காங்ரஸ் கட்சியின் நம்பகத்தன்மையான செய்திகளைப் பிரசுரிக்க ஒரு ஊடகம் இல்லாமைதான். அப்படி ஒரு ஊடகம் இல்லாததால்த்தான் எல்லோரும் முஸ்லிம் காங்ரஸ் மீதேறி குதிரை ஓடுகின்றார்கள். ஆகவே ஊடக விடயத்த்தில் ஊடகத்தின் அவசியத்தை முஸ்லிம் காங்ரஸ் தலைமையும் அதன் உயர்பீட உறுப்பினர்களும் நன்கு உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
மேலும் இன்னுமொரு விடயத்தினையும் இந்த இடத்தில் நான் ஞாபகப்படுத்த வேண்டும் அதாவது குறித்த சந்திப்பில் கலந்து கொண்டதாக சொல்லப்படும் ஊடகவியலாளர்களும், முகநுால் எழுத்தாளர்களும் தாங்கள் கலந்து கொண்ட விடயம் சம்பந்தமாக தெளிவான ஒரு பதிவை அங்கு நடைபெற்ற கலந்துரையாடல்கள் சம்பந்தமாக வெளியிடவில்லை இதனால் முந்திக் கொண்ட காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் குறித்த நிகழ்வில் மண்டியிட்டதாக கிண்டிவிட்டுள்ளார்கள். மண்டியிட்டதாக வெளிவந்த செய்திகளுக்குப் பின்னர்தான் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அவ்வாறு அமைச்சர் ஹக்கீம் அவர்கள் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என காலம் தாழ்த்தி அறிக்கை சமர்ப்பிக்கின்றார்கள்.
குறித்த விடயம் சம்பந்தமாக நான் வேறுவிதமான செய்தி ஒன்றையும் சில இணையத்தளம் வாயிலாக வாசித்தேன் அதாவது அந்த நிகழ்வில் அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்கள் வில்பத்து விடயம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு சப்பக்கட்டு கட்டியதாகவும், அமைச்சர் ரிசாத்துக்கு எதிராகவும் முஸ்லிம் காங்ரசுக்கு ஆதரவாகவும் எழுதச் சொல்லி கலந்து கொண்டவர்களை கேட்டுக் கொண்டதாகவும் அதற்காக அவர்களுக்கு 2000 ரூபாய் காசும் வழங்கப்பட்டதாகவும் என்னால் சில செய்திகள் வாசிக்க முடிந்தது இது வெறும் வதந்தி என்றும் வழங்கப்பட்ட பணம் கலந்து கொண்டவர்களுக்கான பயணச் செலவே எனவும்ம் கலந்து கொண்டவர்கள் மறுப்புத் தெரிவித்து வருகின்றார்கள்.
இவை எல்லாவற்றையும் தொகுத்து நோக்கும் போது யாரோ ஒருவர் அல்லது குழு குறித்த சந்திப்பை தங்களுக்கு சாதகமாகப் பயண்படுத்தி திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை கண்டநிண்ட படி எழுதிக் கொண்டு பிரசுரித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது மட்டும் நன்கு புலப்படுகின்றது முதலில் அந்த கறுப்பு ஆண்டையும், மண்டியிட்டதாக கிண்டிவிட்டவரையும் கண்டுபிடிக்க முயலுங்கள்.


0 Comments