Subscribe Us

header ads

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை வெற்றிபெற வைப்பதில் நான் தோல்வியடைந்திருக்கிறேன்.பசில் ராஜபக்ஷ


மைத்திரிபால சிறிசேன தேர்தலில் எப்படி வெற்றி பெற்றார் என்பதை விளக்கும், ‘யுக பெரலிய’ என்ற நூலைப் படித்துள்ளதாகவும், தமது அரசாங்கத்தின் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச.
ஒன்றரை மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து அண்மையில் பிணை வழங்கப்பட்ட பசில் ராஜபக்ச, முள்ளந்தண்டு பாதிப்புக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது அவர் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவ முனையின் கட்டண விடுதியில் இருந்து கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர்,
“எமது அரசாங்கத்தின் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறேன்.
அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதை விளக்கும் “யுக பெரலிய” நூலைப் படித்துள்ளேன். எப்படி அவர்கள் இழந்தார்கள் என்பது தொடர்பாக நூல் ஒன்றை எழுத விரும்புகிறேன்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை வெற்றிபெற வைப்பதில் நான் தோல்வியடைந்திருக்கிறேன்.
கூட்டணியின் பரப்புரைக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட நான், தோல்விக்கு பொறுப்பு என்று கருதுகிறேன்.
ஏதோ தவறு நடந்து விட்டது. சிறிலங்கா வரலாற்றில் முதல் முறையாக, நான் ஒரு பரப்புரை மேலாளராக தோல்விக்கான பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன்.
நான் சாதக பாதகங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். தோல்விக்கான காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
நான் ஒரு அறிக்கையைத் தயாரிக்கிறேன்.அதனை இப்போது வெளியிட விரும்பவில்லை. அது என்னையும் இன்னும் பலரையும் காயப்படுத்தலாம். ஆனால் நான் தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்.
இரண்டு தவறுகள் இடம்பெற்றுள்ளன ஒன்று எமது அரசாங்கத்தினுடையது. அடுத்தது பரப்புரை பக்கம் சார்ந்தது. அதற்கு நான் பொறுப்பேற்கிறேன்.
தவறு எங்கு நடந்தது என்று அறிக்கை ஒன்றைத் தருமாறு மகிந்த ராஜபக்ச கேட்டுள்ளார். அதனை நான் அவருக்கு வழங்கவுள்ளேன்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Post a Comment

0 Comments