Subscribe Us

மூளைதிசுக்களுக்கு கெடுதி தரும் அஜினோமோட்டோ



உணவகங்களுக்கு குடும்பத்துடன் செல்லும்போது சூடாக ஒரு கப் சூப் சாப்பிடுகிறீர்கள், நூடுல்ஸ் மற்றும் சைனீஸ் உணவு வகைகளை விரும்பி சாப்பிடுகிறீர்கள். அதன் சுவையோ அலாதியாக உள்ளது. திரும்ப திரும்ப சாப்பிடத்தூண்டும் வகையில் உள்ளது. எப்படி கிடைக்கிறது இந்த சுவை?

இது பாரம்பரிய முறைப்படி பாட்டி கைப்பக்குவ சமையலோ அல்லது அம்மாவின் கைப்பக்குவ சமையலோ அல்ல.

மொத்தத்தில் மோனோ சோடியம் குளுட்டோமேட் என்னும் பொருள் செய்யும் வித்தைதான் அது.

மோனோசோடியம் குளுட்டோமேட் ஒரு சுவை கூட்டி. 1909ல் தொடங்கியது இதன் அறிமுகம். அறிமுகமான நாள் முதல் அதை வெல்ல மார்க்கெட்டில் வேறு பொருளே இல்லை.

அஜினோ மோட்டோ என்ற பெயரில் சாலையோரக்கடைகளிலும் உயர்தர உணவகங்களிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது இந்த கெடுதல் அளிக்கும் மோனோசோடியம் குளுட்டோமேட்தான்.

முதலில் கோதுமையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது குளுடாமிக் அமிலம். அதைத் தான் முதலில் ஜப்பானில் சூப்களில் சுவை கூட்ட பயன் படுத்தினார்கள்.


1968ல்தான் மோனோசோடியம் குளுடாமேட்டின் முகத்திரை கிழிந்தது. சீன உணவகம் ஒன்றில் உணவருந்திய சிலர் வயிற்றில் எரிச்சல், உடலில் மதமதப்பு, உடலின் மேல் பகுதியில் இறுக்கம் ஆகிய உபாதைகளை உணர்ந்தனர். “சீன உணவக உபாதை” என அதற்கு பெயர் சூட்டப்பட்டது.

சீன உணவக உபாதைக்கு மோனோசோடியம் குளுடாமேட்டே காரணம் என முடிவு கட்டப்பட்டது. ரசல் பிளேலாக் என்பவர் எழுதிய புத்தகமொன்றில், மோனோசோடியம் குளுடாமேட் நியூரான்களை (மூளைத்திசுக்களை)த் தூண்டி சுவையை அதிக அளவில் உணரச் செய்கிறது.

ஆனால், அதே மோனோசோடியம் குளுடாமேட் மூளைத்திசுக்கள் இறக்கவும், பல்வேறு வகை நோய்களை அதிகப்படுத்தவும் காரணமாகலாம் என எச்சரித்துள்ளார்.

மோனோசோடியம் குளுடாமேட் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருள் பொட்டலங்கள் மீது, “இந்த உணவுப்பொருளில் மோனோசோடியம் குளுடாமேட் பயன்படுத்தப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட வேண்டும்.

அதேபோல்,“மோனோசோடியம் குளுடாமேட் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்றதல்ல” எனவும் குறிப்பிடுவது நம் நாட்டில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனினும், எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் மோனோசோடியம் குளுடாமேட் இருப்பதை “இயற்கை சுவைகூட்டி” என்றும் குறிப்பிட்டிருப்பர். ஏமாந்து விடக்கூடாது.

உணவை எப்போதும் அதன் இயற்கை வடிவிலே உண்பதுதான் சாலச்சிறந்தது. நம் உடலும் இயற்கை உணவை ஏற்பதுபோல், செயற்கை உணவை ஏற்பதில்லை.

மோனோசோடியம் குளுடாமேட் சேர்க்கப்பட்ட உணவின் மற்றொரு ஆபத்து சுவைகூட்டிகள் நாம் உண்ணும் உணவின் அளவை அதிகரித்து உடல் எடையைக் கூட்டும் எனவே கவனம் தேவை. எனவே, மோனோசோடியம் குளுடாமேட் எனும் அஜினோமோட்டோ போன்ற சுவைகூட்டிகளை ஒதுக்கி வைப்பதே உடலுக்கு உகந்தது. 

Post a Comment

0 Comments