வெற்றிலைச் சின்னத்தில் அல்ல; எந்தச்சின்னத்தில் போட்டியிட்டாலும் மஹிந்த ராஜபக் ஷ தோல்வியடைவது நிச்சயமா கும் என்று தெரிவித்த ஐ.தே.க.மஹிந்த அணி நாட்டில் இனவாதத்தை தூண்டுகிறது. இந்தப் பொதுத் தேர்தலில் மக்கள் இனவாதத்திற்கு "சாவுமணி” அடிப்பதும் நிச்சயிக்கப்பட்டு விட்டதாகவும் குறிப் பிட்டது.
பிட்டகோட்டேயிலுள்ள ஐ.தே.க.வின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய முன்னாள் பிரதி அமைச்சரும், ஐ.தே.க. எம்.பியுமான சுஜீவ சேனசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெற்றிலைச் சின்னத்தில் அல்ல அதை விடுத்து எந்தச் கட்சியில் எந்தச் சின்னத்தில் பொதுத்தேர்தலில் களமிறங்கினாலும் வெற்றி பெறமாட்டார்.
கடந்த ஜனாதிபதித்தேர்தலை விடவும் மும்மடங்கில் படுதோல்வியடைவார். எனவே மஹிந்த களமிறங்குவது எமக்கு எந்த விதத்திலும் ஒரு சவால் அல்ல. மஹிந்தவும் அவருக்கு ஆதரவு வழங்கும் விமல் தலைமையிலான அணியினரும் அரசியலில் அநாதையாக்கப்படுவார்கள்.
கடந்த மஹிந்தவின் ஆட்சியில் நாட்டில் தலைவிரித்தாடிய அரச பயங்காரவாதம், வெள்ளைவேன் கலாச்சாரம், ஊழல் மோசடிகள், வீண் விரயங்களை மக்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள். அதற்கான பாடத்தையே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் மஹிந்தவுக்கு கற்பித்தனர்.எகிப்தில் சர்வாதிகார ஆட்சி நடத்திய ஹூஸ்னி முபாரக்கின் ஆட்சியும்இ மியான்மாரில் குண்டர்கள் ஆட்சி தோல்வி கண்டன. அந்த வரிசையில் மஹிந்தவும் தோல்வி கண்டார். இத்தோல்வியோடு ஒதுங்கியிருக்கலாம்.
மீண்டும் பொதுத்தேர்தலில் போட்டியிட முயற்சிக்கின்றார். இதனை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அவரை நிராகரிப்பார்கள். எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்ற நோக்கில் மஹிந்த அவரது சார்பு அணியும் நாட்டுக்குள் இனவாதத்தை தூண்டிவிடுகின்றன.
தென்னை மரத்திலிருந்து இரண்டு தேங்காய்கள் விழுந்தாலும் அதற்கு தமிழ் சிங்கள தேங்காய் என இனவாத முத்திரை குத்துகின்றனர். இவ்வாறு இனவாதத்தின் உச்சக்கட்டத்திற்கு இவ் அணியினர் பயணித்துள்ளனர். இனியும் இந்த நாட்டில் மக்கள் இனவாததிற்கு இடமளிக்கமாட்டார்கள். இந்தப்பொதுத்தேர்தலோடு மக்கள் இனவாத்திற்கு சாவு மணி அடிப்பது நிச்சயமாகும்.
கடந்த 100 நாள் நல்லாட்சியில் நாட்டுக்கும் மக்களுக்கும் பல நன்மைகளை வழங்கினோம். இத்தேர்தலில் ஐ.தே.க.வின் வெற்றி மக்களின் வெற்றியாகும். இலங்கையில் ஐ.தே.க. ஆட்சியிலேயே பல அபிவிருத்திகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவும் சீனாவும் அபிவிருத்தியில் தவழும் காலத்தில் நாம் மகாவலி போன்ற பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தோம்.
பொதுத்தேர்தலில் ஐ.தே.க.வின் வெற்றி நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்கு மூலகாரணமாக அமையும்.
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்து தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி நாட்டை வளப்படுத்துவோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகார ஆசை இல்லாதவர். எனவே தான் தனக்குள்ள நிறைவேற்று அதிகாரங்களை குறைத்துக்கொண்டார். அதேபோன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊழல் மோசடிகள் வீண்விரயங்களை எதிர்ப்பவர்.
எனவே எதிர்காலத்தில் ஐ.தே.க.வின் ஆட்சியிலேயே நாமும் மக்களும் முன்னேற்றம் காண்போம் என்றும் முன்னாள் அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.


0 Comments