Subscribe Us

header ads

4500 வருடங்கள் அவிழ மறுத்த மர்மமுடிச்சு!


by: டாக்டர்.MB.Halith MBBS (SL)
மலேரியா ஒரு வரலாற்றுப்பார்வை.
உலகம் தத்தித்தத்தி நடைபோட்டகாலம் முதல் உலகம் பறக்கத்தொடங்கிய காலம் வரை ஒரு நோய் உலகை தன் பிடிக்குள் வைத்திருந்தது என்றால் அது மலேரியாவாகத்தான் இருக்கமுடியும்.
மலேரியா எனப்படும் நோய் நிலமை பற்றி கி.மு.2700 ஆண்டுகளுக்கு முன்னரே சீன குறிப்புகளில் தகவல்கள் காணப்படுகிறது எனவே அதற்கு முன்பிருந்தே இந்நோய் காணப்பட்டிருக்கவேண்டும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
அதற்குப்பிற்பாடுமொஸபத்தேமியா நாகரீகம்(கி.மு2000) ,பண்டைக்கால எகிப்து நாகரீகம் (கி.மு1500) போன்ற குறிப்புகளில் இந்நோய்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹோமர்,ஹிப்போக்கிரட்டீஸ்(கி.மு400) போன்றவர்களும் காய்ச்சலுடன் கூடிய ஒரு நோய் நிலைமையில் கல்லீரல் வீங்கிக்காணப்பட்ட ஒரு பொதுவான நோயை அடையாளப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு இந்நோய் பற்றிய குறிப்புகள் வரலாறு நெடுகிலும் தொடர்வதைப்போன்று இந்நோய்க்கு மனிதர்கள் கத்தைகத்தையாக அன்று தொடக்கம் இன்றுவரை இரையாகும் அவலம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

மலேரியா என்றசொல் இத்தாலி மொழியில் இருந்து உருவாக்கம் பெறுகிறது மோசமான காற்று(Bad Air) எனப்பொறுள் தரும் Mal Aria என்ற இத்தாலிய சொல்லில் இருந்தே இந்த மலேரியா என்ற சொல் உருவாக்கம் அடைகிறது.
பிளாஸ்மோடியம் என்ற ஒரு ஒட்டுண்ணி புரோட்டசோவா நுண்ணங்கிகளினாலே இந்நோய் ஏற்படுத்தப்படுகிறது,அனோபிலிஸ் பென் நுளம்புகளால் தொற்றுதலடைந்த ஒரு மனிதனில் இருந்து இன்னொருவருக்கு இக்கிருமிகள் காவப்பட்டு தொற்றுதலடைந்து பரவுகிறது.ஆனால் இந்த உண்மையை அறிந்துகொள்ள நாம் அண்ணளவாக 4500 வருடங்கள் கண்ணீரோடு காத்திருக்கவேண்டியதாய்ப்போயிற்று.
மலேரியாவால் மரணங்கள் மலிந்து போய்க்கிடந்தாலும் நுண்ணுயிரியளுக்கு அத்திவாரமிட்ட அண்டன் வன் லீவன் ஹூக் இனுடைய நுணுக்குக்காட்டியில் 1676ம் ஆண்டு பக்டீரிய நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து மலேரியாவுக்கான காரணத்தை தேடும் படலம் வேகமடைகிறது.

ஆனாலும் துரதிஸ்ட்டம் அதிலிருந்து அண்ணளவாக 200 வருடங்கள் காத்திருப்புகளுக்குப்பின் பற்பல விஞ்ஞானிகளின் இடைவிடாத தியாகங்களின் பயனாக மலேரிய நோயாளி ஒருவரினுடைய இரத்தமாதிரியில் இந்த புரோட்டசோவாக்கிருமி பிரான்சின் இராணுவத்தில் கடமையாற்றிய சத்திரசிகிச்சை நிபுணர் அல்போன்சா லவரென் (Charles Louis Alphonse Laveran) இனால் 6ம் நாள் நவம்பர் 1880 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு மலேரிய வரலாற்றில் ஒரு திருப்புமுணையை ஏற்படுத்தப்படுகிறது.
இந்த உலகை அசத்திய கண்டுபிடிப்புக்காக இவ்வைத்தியருக்கு 1907ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

அதைத்தைதொடர்ந்து மலேரியா என்ற மர்மத்தின் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழத்தொடங்கியது.
1886ஆம் ஆண்டு கமில்லோ கொல்கி (Camillo Golgi) இத்தாலிய நரம்பியல் நிபுணர் , குறைந்தது இரண்டுவகையான மலேரியா நோய்கள் காணப்படவேண்டும் என உறுதிப்படுத்தினார். அத்தோடு இவ்வித்தியாசமான பிளாஸ்மோடியம் கிருமிகள் பற்றிய பல தகவல்களை வெளியிட்டார் அதற்காக அவருக்கு 1906ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
அங்கிருந்துதான் இக்கிருமிகளுக்கான பெயரிடும் படலம் தொடங்கிற்று.
1890 இல் பட்டிஸ்ட்டா கிரஸ்ஸி உம் ரைமொண்டோ ஃபைலெட்டியும் (Giovanni Batista Grassi and Raimondo Filetti) இனைந்து இக்கிருமிகளுக்கு முதன்முதலாக பிளாஸ்மோடியம் வைவெக்ஸ் என்றும் பிளாஸ்மோடியம் மலாரியே (Plasmodium vivax and P. malariae) என்றும் பெயரிட்டு மகிழ்ந்தனர்.

ரொனால்ட் ரோஸ் (Ronald Ross) என்ற இந்திய மருத்துவ சேவையில் கடமையாற்றிய பிரிட்டிஸ் அதிகாரி அடுத்த கட்டத்துக்குள் மலேரியாவை அழைத்துச்செல்கிறார்,மலேரியாவை நுளம்புகள் தான்கடத்துகின்றன என்ற ஒரு உன்னத கண்டுபிடிப்பை நிகழ்த்தி நிருபிக்கிறார் அத்தோடு மலேரியாவின் கடைசி முடிச்சும் அவிழ்க்கப்படுகிறது.
உலகமே கொண்டாடிய இக்கண்டுபிடிப்பிற்காய் அவருக்கு 1902ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

அதன் பிற்பாடு மலேரியாவுக்கான தேடல் 20ம் நூற்றாண்டுக்குள் நுழைகிறது (இங்கே அமெரிக்காவுக்குள் நுழைகிறது எனலாம்)
அமேரிக்காவின் வில்லியம் ஹெச் வெல்ச் (William H. Welch) இத்தேடலுக்குள் தடம் பதிக்கிறார் மலேரியாவைத்தோற்றுவிக்கும் மூன்றாவது இனம் கண்டுபிடிக்கப்பட்டு பிளாஸ்மோடியம் பல்சிபாரம் (Plasmodium falciparum) என்று 1922 இல் பெயரிடப்படுகிறது.
1931ம் ஆண்டு பிளாஸ்மோடியம் நோலெஸ்ஸி என்ற மனிதர்களைத்தாக்கி மலேரியாவைத்தோற்றுவிக்கும் புதிய இனம் ரொபர்ட் நோலெஸ்,மோஹன்தாஸ் குப்தா (Robert Knowles and Biraj Mohan Das Gupta )என்பவர்களினால் பெயரிடப்படுகிறது ஆனால் இக்கிருமியினால் மலேரியா நோய் ஏற்படுத்தப்படும் வீதம் குறைவாகும்.

மலேரியா நோய் பற்றிய தேடல்கள் போன்று மலேரியாவுக்கான நோய் நிவாரணிகள் பற்றிய தேடலும் நீண்ட வரலாற்றுப்பின்னனியைக்கொண்டது.
சின்ங்கோனா-chinchona என்ற அற்புத மரங்களின் பட்டையில் காணப்படும் வேதிப்பொருட்களான குயினின்,குளோரோகுயின் போன்றன மிகச்சிறந்த,பாதுகாப்பான மருந்துகளாக உருவாக்கப்பட்டதன் பிற்பாடே மலேரியா கிருமிகல் செய்த கொலைகளுக்கு நாம் தண்டனைவழங்க ஏதுவாயிற்று.

அதுபோல் ஆர்டிமிசினின் எனப்படும் வேதிப்பொருட்கள் அர்டீமீசியா(artemisia or sweetwormtree Qinghaosu) என்ற மருத்துவ குணங்கள் நிறைந்த தாவரங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டமையும் மலேரியா நோய் நிவாரணத்தில் மைற்கற்களாகி மலேரியா என்ற மரணபயத்தை எம்மை விட்டும் தூரமாக்கியது.

வேதியல் மாணவனான ஒத்மர் சிட்லெர் (Othmer Zeidler) DDT தயாரித்ததும் , போல் முல்லர்(Paul Müller) அதை பூச்சிகொல்லியாக பாவித்து நுளம்புகளைக்கொல்ல முடியும் எனக்கண்டு பிடித்தமையும் நுளம்புகளை அழித்து மலேரியா நோயை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய வெற்றியளித்தது.
இதற்காக போல் முல்லர் மருத்துவத்திற்கான நோபல் பரிசை 1948 இல் வெற்றிகொண்டார்.

மரணபயம் என்ற ஒன்றை எம்மைவிட்டு போக்கிய மலேரியாவின் தேடலில், அதனைக்கட்டுப்படுத்த தங்களை அர்ப்பனித்த அனைவருக்கும் நன்றிக்கடனுக்காக அவர்களுக்காக பிரார்த்திப்போம்.

இன்றும் மலேரியாவால் அவதிப்படும் ஆபிரிக்க மக்களுக்காக எமது அணுதாபங்களை தெரிவிப்போம்.
தேடல் தொடரட்டும்………………………….

ஏப்ரல் 25 உலகமலேரியா தினம்
Dr.MB.Halith MBBS (Sl)
Base Hospital Valaichenai
Srilanka


Chief Editor www.tamilhealth.info

Post a Comment

0 Comments