Subscribe Us

தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதர் மீது மர்ம நபர் சரமாரி தாக்குதல்


தென் கொரியாவுக்கான அமெரிக்கத் தூதர் மார்க் லிப்பட்ர் மீது மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தென் கொரிய தலைநகர் சியோல் நகரில் அமெரிக்கா- தென் கொரியா உடனான ராணுவ கூட்டுப் பயிற்சி குறித்து கூட்டம் நடந்து வருகிறது. இதற்காக புதன்கிழமை காலை அதிகாரிகளை சந்திக்க அமெரிக்கத் தூதர் மார்க் லிப்பர்ட் தயாரான போது, அவர் மீது தென் கொரிய போராளி ஒருவர் கத்தியால் தாக்கினார். இதில் லிப்பர்டின் முகம் மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

காயங்களுடன் லிப்பர்ட் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட புகைப்படங்களை தென் கொரிய சேனல்கள் வெளியிட்டுள்ளன.

தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் வட கொரியாவின் உளவாளியாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர், தென் கொரிய பாரம்பரிய உடையில் இருந்த நிலையில், அவர் அமெரிக்க எதிர்ப்புப் போராளியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

போலீஸார் அளித்துள்ள தகவலின்படி, தாக்குதல் நடத்திய நபர் பிளேட் கொண்டு லிப்பர்டின் முகம், கை மணிகட்டை கிழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரிய தூதரக ஒத்துழைப்பு சபையின் செய்தி தொடர்பாளர் கிம் யோங் மான்,பாதுகாப்பு ஏற்பாடுகளில் நடந்த குளறுபடிக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லிப்பர்ட் தற்போது உடல் நலத்தோடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூதர் லிப்பர்ட், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நெருங்கிய மற்றும் நம்பகமிக்க நண்பர் ஆவார்.

Post a Comment

0 Comments