Subscribe Us

header ads

அடக்க முடியாது சிரித்த மைத்ரி: லண்டனில் ஒரு அபூர்வமான நிகழ்வு!


தற்போது ஐக்கிய இராச்சியம் விஜயம் செய்து லண்டனில் தங்கியிருக்கும் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று மாலை மத்திய லண்டன் பகுதியில் லன்கஸ்டர் ஹோட்டலில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை சந்தித்திருந்தார். இந்நிகழ்வின் போது அங்கு வருகை தந்து மிகவும் அமைதியாகவும் களைப்பாகவும் வீற்றிருந்த ஜனாதிபதி வாய் விட்டுச் சிரிக்கும் சந்தர்ப்பம் ஒன்று அமைந்ததோடு அது பலருக்கு ஆச்சரியத்தையும் உருவாக்கியிருந்தது.

ஜனாதிபதி அமர்ந்து கொண்டதும் அங்கு வருகை தந்திருந்தவர்களுக்கான வரவேற்புரை நிகழ்ந்தது. ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கைத் தூதரக ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வைத் தொகுத்து வழங்கிய தூதரக ஊழியர் அனைவரையும் வரவேற்றுவிட்டு ஜனாதிபதியையும் வரவேற்ற போது பழக்க தோசத்தில் “அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த….”. என்று வாய் தவறிக் கூறிவிட்டார். இதைக் கேட்டதும் பகட்டுக்காகவன்றி உண்மையிலேயே சுமார் ஒரு நிமிடத்துக்கு மேலாக ஜனாதிபதி வாய்விட்டுச் சிரிக்கவே கூடியிருந்தோரும் தொடர்ச்சியாக சிரிக்க ஆரம்பித்தனர். இதனால் தான் செய்த தவறையும் மறந்த நிலையில் அறிவிப்பாளரும் சிரித்துச் சமாளித்து தொடர்ந்து மைத்ரிபால சிறிசேன உரையாற்றுவார் என கூறி முடித்தார்.

 சிறிது நேரத்தில் அங்கு வருகை தந்திருந்தவர்களோடு ஜனாதிபதி அளவளாவிக் கொண்டிருந்த போது குறித்த நபரை அணுகி நமது நிருபர்  உரையாடியதோடு இவ்வாறு ஒரு தவறு மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் போது நடந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று  கேட்க ஒரு கணம் அதிர்ந்து போன அவர், இன்றோடு என் கதை முடிந்திருக்கும் என்று பதிலளித்துள்ளார்.

ஆனாலும் மைத்ரிபால  சிறிசேனவோ வாய் விட்டுச் சிரித்து விட்டு அதை மறந்த நிலையில் நிகழ்ச்சியோடு இணைந்திருந்த அதேவேளை இலங்கையில் இருந்த  அதிகார அரசியல் சூழ்நிலையில் இவ்வாறான நிகழ்வுகளைக் காண்பதே அபூர்வம் என அங்கு வருகை தந்திருந்த பெரும்பாலானோர்  சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-Sonakar-

Post a Comment

0 Comments