தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை தமிழ் இனவாதமாகவோ அல்லது சிங்கள இனவாதமாகவோ அர்த்தப்படுத்த முயற்சிக்க வேண்டாம் என நேற்று சபையில் வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் வாசு தேவ நாணயக்கார, தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதற்கு அரசியலமைப்பு மீறல் அல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்தில் உரையாற்றும் போதே வாசுதேவ நாணயக்கார எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கையில் அரசியலமைப்பின் தமிழ் மொழியாக்கத்தில் 205 ஆம் பக்கத்தில் தேசிய கீதம் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது. இந்த தமிழ் மொழி பெயர்ப்பை 1940 களில் நல்லதம்பி பண்டிதர் செய்தார்.
அவரது மொழிபெயர்ப்பில் சிங்களத்தில் இயற்றப்பட்ட தேசிய கீதத்தின் அர்த்தம் எதுவிதமான மாற்றமும் இல்லாமல் அனைத்து சொற்பதங்களும் தமிழில் அமைந்துள்ளது. சிங்களத்தில் ஸ்ரீலங்கா நமோ மாதா என்றும் அதேபோன்று தமிழில் நமோ நமோ தாயே என்றும் ஒரு பொருளில் அர்த்தத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது சிங்கள இசை மெட்டுக்கு ஏற்ற வகையிலேயே தமிழிலும் உள்ளது. எந்தவிதமான மாற்றமும் கிடையாது. அது மட்டுமல்லாது அரசியலமைப்பிலும் தமிழில் உள்ளது. தமிழில் பாடுவது அரசியல் அமைப்பு மீறல் அல்ல. அது அரசியலமைப்புக்கு உட்பட்டதேயாகும்.
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடலாம்.அதேபோன்று சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் சிங்களத்திலும் தேசிய கீதத்தை பாடலாம்.
பெரும்பாலும் தேசிய நிகழ்ச்சிகளில் சிங்கள மொழியிலேயே தேசிய கீதம் பாடப்படுகின்றது. நான் சமூக ஒருமைப்பாடு அமைச்சராக அந்த ஆட்சியில் இருந்த போது ஒரு யோசனையை முன்வைத்தேன். தென்னாபிரிக்காவைப் போல் இலங்கையிலும் தேசிய கீதத்தை சிங்கள தமிழ் சொற்பதங்களைக் கொண்டு சேர்த்து பாட வேண்டும் என. அப்போது தேசிய கீதத்தில் இரண்டு மொழிகளும் கலந்து விடும்.
ஆனால் அது நிறைவேறவில்லை. ஜனாதிபதி சிங்களத்தில் உரையாற்றும் போது அந்த உரையை தமிழில் மொழி பெயர்க்கின்றோம். எனவே தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை தமிழ் இனவாதமாகவோ அல்லது சிங்கள இனவாதமாகவோ அர்த்தப்படுத்தல் கூடாது என்றும் வாசுதேவ நாணயக்கார எம்.பி. தெரிவித்தார்.


0 Comments